ரஜினி சரிதம் 10: ஆறிலிருந்து எழுபது வரை: குருவுடன் முதல் கைகுலுக்கல்!

ரஜினி சரிதம் 10: ஆறிலிருந்து எழுபது வரை: குருவுடன் முதல் கைகுலுக்கல்!

கிராமத்திலிருந்து கனவுகளோடு வருகிறவர்களை மாநகரங்கள் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வாழ வைத்திருக்கின்றன. அதேசமயம், மாநகரத்திலேயே பிறந்து வளர்ந்தாலும் அதன் கொடைகளை அறியாமல் வாழ்ந்து முடித்துவிடும் மண்ணின் மைந்தர்களும் இருக்கவே இருக்கிறார்கள்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களோடு, ஹாலிவுட் படங்களும் சங்கமிக்கும் மாநகரமாக விளங்கிய பெங்களூரு, சிவாஜி என்கிற பள்ளி மாணவனுக்கு திரைப்படங்கள் மீது பெரும் நாட்டத்தை உருவாக்கியது.

மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களை ரசித்த சிவாஜி, அப்பாவுடன் திண்ணையில் படுத்துறங்கும் பழக்கம் கொண்டிருந்தார். 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்பா தூங்கியதும் ‘இரண்டாவது ஆட்டம்’ சினிமா பார்க்க நண்பர்கள் கூட்டணியுடன் போய்விட்டுச் சத்தமில்லாமல் பூனையைப்போல் வந்து படுத்துக்கொள்வார். ஒருமுறை ‘இரண்டாவது ஆட்டம்’ முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அப்பா, அண்ணன், அண்ணி என குடும்பத்தில் உள்ள அனைவரும் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு திண்ணையில் காத்திருந்தனர். கையும் மெய்யுமாக பிடிபட்ட சிவாஜி வாங்கிய அடிகளுக்கு, சில நாட்கள் கூட பலனில்லை. “எனக்கு சினிமா பிடிச்சிருக்கு; நான் என்ன கெட்ட படத்துக்காப் போறேன்?” என அப்பாவிடமே கேட்டுவிட்டு படத்துக்குப் போகத் தொடங்கினார்.

ராஜ்குமார், உதய்குமார், எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர் ஆகியோரின் படங்களை விரும்பிப் பார்த்தார் ரஜினி. எம்ஜிஆரின் சாகச நடிப்பும் சிவாஜியின் கதாபாத்திர நடிப்பும் உதய்குமாரின் ஸ்டைலும் வெண்கலக் குரலும் ரஜினியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

கதாநாயக சினிமாக்கள் மீது ஈர்ப்பு இருந்தாலும் ‘இது இயக்குநரின் சினிமா’ என்கிற ஈர்ப்பு ஏற்பட்டது, ரஜினி பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தபோதுதான். கே.பாலசந்தர் இயக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தை, பெங்களூருவில் பார்த்தபிறகு ரஜினிக்கு அவர்மீது அபிமானமும் மரியாதையும் ஏற்பட்டது. அவரது இயக்கத்தில் வெளியான ‘தாமரை நெஞ்சம்’, ‘இரு கோடுகள்’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங்களைப் பார்த்து, பாலசந்தர் மீது மனம் நிறைந்த மரியாதையை வளர்த்துக் கொண்டார் ரஜினி. அவரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று பி.யூ.சி. படித்தபோது எண்ணியிருக்கிறார். ‘நேசிப்பது எதுவானாலும் அதை உளமாற நேசித்தால், வண்ணத்துப்பூச்சி கூட நம் கைகளைத் தேடிவந்து அமரும்’ என்பார்கள்... இல்லையா! ரஜினிக்கும் அதுதான் நடந்தது. பாலசந்தரை சந்திக்க, நடிப்புப் பயிற்சிப் பள்ளி ஒரு பாலமாக அமையும் என்று ரஜினி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

காத்திருந்த மாணவன்

1974-ல் ‘அவள் ஒரு தொடர்கதை’ வெளியாகியிருந்த நேரம். நடிப்பு பயிற்சி முடியவிருந்த கடைசி மாதம். “இயக்குநர் கே. பாலசந்தர் நமது இன்ஸ்டிடியூட்டுக்கு வருகை தந்து உங்களுடன் உரையாட இருக்கிறார். ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் பார்க்காதவர்கள் யாராவது இருந்தால், இன்றே போய் பார்த்துவிடுங்கள். பாலசந்தரிடம் நடிப்பு பற்றி மட்டுமல்ல; சினிமா குறித்து நீங்கள், என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்” என்று அறிவித்தார் ஆசிரியர் கோபாலி. தனது அபிமானத்துக்குரிய இயக்குநரைப் பார்க்கப் போகிறோம் என்பது உறுதியானதும் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சி பற்றி ரஜினி இப்படிக் கூறியிருக்கிறார்:

“பாலசந்தர் சாரின் ‘அரங்கேற்றம்’ படத்தை பார்த்த போது அழுதேன், சிரித்தேன், பிரமித்தேன். அதன்பின்னர், நான் நடிப்பு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை ஒன்றுக்கு நான்குமுறை பார்த்துவிட்டு, சக மாணவ நண்பர்களுடன் மணிக்கணக்கில் விவாதித்திருக்கிறேன். அவரது பேட்டியையும் போட்டோவையும் ஆங்கிலப் பத்திரிகையில் படித்தேன். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் எப்படி பதில் சொல்லியிருக்கிறார்! பார்க்க எவ்வளவு இளமையாக இருக்கிறார்! ஆனால், சமூகம் பற்றிய அவரது பார்வையும் புரிதலும் எவ்வளவு முன்னோக்கிய ஒன்றாக இருக்கிறது. இவரால் மட்டும் எப்படி இந்தச் சமூகத்தை இவ்வளவு துணிச்சலாக விமர்சிக்க முடிகிறது! எவ்வளவு இளமையாக கற்பனை செய்கிறார்; அப்படிப்பட்டவர் எங்களுடன் உரையாட வருகிறார் என்றதும் என்னால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.

அந்த அற்புதமான நாளும் வந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்பு தொடங்கியபோது, இன்ஸ்டிடியூட்டின் முதல்வர் ராஜாராம்தாஸ் வேகமாகவந்தார். ‘பாலசந்தர் சார் இருபது நிமிடங்கள் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். எனவே தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள். உங்களுக்குப் பிரயோஜனமான நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள். நேரத்தை வீணடித்துவிடாதீர்கள்’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

அவர் சென்ற அடுத்த 15 நிமிடங்களில் வகுப்பறைக்குள் புயல் போல இரண்டு பேர் நுழைந்தார்கள். எங்களுடைய முதல்வர்தான் வேகமாக நடப்பார் என்றால், அவரைவிட வேகமாக பாலசந்தர் சார் நடந்து வந்தார். எனக்கும் வேகமென்றால் ரொம்பப் பிடிக்கும். சுறுசுறுப்பானவர்களைக் கண்டால் இவர் நம்ம இனம் என நினைத்துக்கொள்வேன். எதிலும் வேகமாக இருக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர் அப்பா.

எனது கேள்வியும் அவரது பதிலும் பாலசந்தர் சார், பார்வைக்கு கல்லூரி மாணவரைப் போல அவ்வளவு ஃபிட்டாக இருந்தார். அவரைப் பார்த்து அசந்து போய்... என் கண்களை அவர் மீதே வைத்திருந்தேன். மனமோ அவர் இயக்கிய படங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் எனது மனத்திரையில் வந்து பேசிக்கொண்டிருந்தன. 36 பேருக்கு மத்தியில் என்னை கவனித்திருக்கிறார் அவர். என்னுடைய பெயரைக் கேட்டார். அது, எனது காதில் கேட்டும் கேட்காமலும் ஏதோ ஒரு தியான நிலையில் இருப்பவனின் காதில் விழுவது போல் இருந்தது. சட்டென்று நினைவு கலைந்து உதறியடித்து ‘சிவாஜி ராவ்’ என்றேன். அவர் புன்முறுவல் பூத்தார்.

பின் வரிசையில் அமர்ந்திருந்த இன்னும் சில மாணவர்களிடமும் பெயர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் என்னைப் பார்த்து என் பெயரைக் கேட்டது என்னை உசுப்பிவிட்டது. ஒவ்வொரு மாணவராக அவரிடம் கேள்விகளைக் கேட்டுகொண்டே வந்தார்கள். அவர் மீண்டும் என் பக்கம் திரும்பி, என் கண்களை ஆழமாக ஊடுருவியதுபோல எனக்குத் தோன்றியது.

அப்போது அவரிடம் ‘ சார்.. ஒரு நடிகனிடம் நடிப்பைத் தவிர ஒரு இயக்குநராக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன். என்னை இன்னும் ஆழமாகப் பார்த்த பாலச்சந்தர் சார், ‘ஒரு நடிகன் நிஜ வாழ்க்கையில் அறவே நடிக்கக் கூடாது’ என்றார். எனக்கு உடல் சிலிர்த்துப்போனது. ஒரு நொடிகூட யோசிக்காமல் எவ்வளவு ஆழமான பதிலைச் சொல்லியிருக்கிறார் கே.பி!

உரையாடல் முடிந்து அவர் விடைபெற்றபோது, ‘நடிப்பை பயிற்சி மூலம் கற்றுக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லோருக்குள்ளும் நடிப்பு இருக்கிறது. அதை திரையில் எப்படி வெளிப்படுத்துவது என்பதுதான் சூட்சுமம் நிறைந்தது. இங்கே நீங்கள் பெற்றுக்கொண்ட பயிற்சிகள், உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் தரமான நடிப்பை கொடுப்பதற்கு உங்களுக்கு உதவினால், இங்கே பயின்ற உங்களுக்கு அல்ல, உங்களுக்குப் பயிற்றுவித்த ஆசியர்களுக்குப் பெருமை. வாழ்க்கை என்பதே ஒரு பயிற்சிக் களம். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்’ என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

கைகுலுக்கல்!

அந்தச் சமயத்தில் எப்படியாவது அவரது கையைப் பிடித்துக் குலுக்கிவிட வேண்டும் என்கிற வாஞ்சை எனக்கு. வேகமாக ஓடிச்சென்று வாஞ்சையுடன் கை நீட்டினேன். அப்போது என் கண்களைப் பார்த்து ‘சிவாஜி ராவ்..’ என்று என் பெயரைக் கூறி கைகுலுக்கினார். அந்த நிமிடம் எனது நாடி நரம்புகளில் சில வோல்ட் மின்சாரம் பாய்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

சட்டென்று நர்வெஸ் ஆனேன். அப்போது எங்கள் ஆசிரியரான கோபாலி சார், என்னை கே.பி.சாரிடம் காட்டி, ‘அவள் ஒரு தொடர்கதை படத்தை, சிவாஜி நான்குமுறை பார்த்துவிட்டு வந்து சக மாணவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தான்’ என்று அறிமுகப்படுத்தினார். கே.பி.சார் என்னை இன்னும் தீர்க்கமாகப் பார்த்தார். பின் கட கடவென்று வேகமாக நடந்து கார் பார்க்கிங் பகுதிக்குச் சென்றார். கூடவே போய் வழியனுப்பிவிட்டு வந்த கோபாலி சாரிடம் நெருங்கி, ‘என்னை கே.பி.சாரிடம் அறிமுகப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றி சார்... வெரி கைண்ட் ஆஃப் யூ’ என்றேன். அதற்கு அவர் ‘இது என்ன பிரமாதம் சிவாஜி... ஆடிசன் நடக்கும்போது சொல்லியனுப்புகிறேன். கலாகேந்திராவுக்கு சிவாஜியை அனுப்பி வையுங்கள் என்று கே.பி.சார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அவருக்கு உன்னை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தயாராக இரு. எப்போது வேண்டுமானாலும் கலாகேந்திராவிலிருந்து அழைப்பு வரலாம்.. வாழ்த்துகள்’ என்றார். எனக்கு கிர்... என்று தலைக்குள் காற்றாடி சுழன்றது. அந்தச் சந்திப்பு என் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கே.பி உடனான தனது முதல் சந்திப்பை நினைவு கூர்ந்திருக்கிறார் ரஜினி.

அன்றுமுதல் ரஜினிக்கு சரியான தூக்கமில்லை. மறுநாள், கலாகேந்திரா அலுவலகத்தை தேடிக்கண்டு பிடித்துப் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினார். நடிப்புப் பயிற்சி முடிந்து ஒரு மாதம் ஓடியேவிட்டது. கலாகேந்திராவிலிருந்து எந்த அழைப்பும் இல்லை. மன அழுத்தம் அதிகமாகி அதிகமாகப் புகைக்கத் தொடங்கிவிட்டார் ரஜினி. இந்த சமயத்தில் ‘தம்பி உடனே புறப்பட்டு வா...’ என்று அண்ணன் சத்யநாராயணா ரஜினிக்கு எழுதியிருந்த கடிதம் வந்து சேர்ந்தது. அண்ணன் எப்போதுமே இப்படிக் கடிதம் எழுதமாட்டாரே... யாருக்கும் உடல்நலமில்லையா? என்ற சிந்தனையோடு பெங்களூருவுக்குப் புறப்படத் தயாரானார் ரஜினி.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in