இருள் கவிழ்ந்த முன்னிரவில்...
கரையில் சுமை இறக்கி
தாள் கிழித்த கண் எரிந்த
சுனை அரித்த
எரிச்சல்களுக்கு இதமாக
குளிர்ந்த தாமரைக்குளத்தில்
வெகுநேரம்
விழுந்து கிடக்கும் பாட்டாளியாக
மெளனத்தில் விருப்பமுடன்
காலத்தை மிதக்க வைத்தல்
சற்றுமுன்
பூமிக்குள் மறைந்து கிடந்த நீர்
நீர்த்தொட்டி நிறைந்து
வழிந்துகொண்டிருப்பது போல்
மகிழ்வான நினைவுகளாய்
தெறித்துக்கொண்டிருத்தல்
மற்ற நினைவெல்லாம்
அற்றுப்போய் தவமாக
நிராதரவான
பச்சிளங் குழந்தையைப்
பாதுகாத்து வளர்ப்பவரின்
பாதத்தில் கிடத்துதல் போல்
ஒருவருக்கொருவர்
நம்பிக்கையோடு
ஒப்படைக்கும் தருணங்களில்
சுவாசித்துக்கொள்கிறது நேசம்.