ஒன்பதாம் வகுப்பு மாணவனின் ஒப்பற்ற நாவல்!- பாராட்டு மழையில் ரமண கைலாஷ்

ஒன்பதாம் வகுப்பு மாணவனின் ஒப்பற்ற நாவல்!- பாராட்டு மழையில் ரமண கைலாஷ்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மாணவர் ரமண கைலாஷ். திருச்சி, எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி, புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வை ஒருங்கிணைத்தது. இதில் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ், மாவட்ட வன அலுவலர் ஆனந்த், நரம்பியல் மருத்துவர் திரிபாதி, எழுத்தாளர் தமிழ்செல்வன் என முக்கிய ஆளுமைகள் பங்கேற்றனர். இதேபோல், நாகர்கோவில் பீட்டர் ரெமிஜியூஸ் பள்ளியில் நடந்த வெளியீட்டு விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் புத்தகத்தை வெளியிட்டுப் பேச, தங்கள் வகுப்புத்தோழன் புத்தகம் எழுதியிருப்பதை பெருமிதத்துடன் பார்த்தனர் சக மாணவர்கள்!

நாகர்கோவில் பீட்டர் ரெமிஜியூஸ் சி.பி.எஸ்.இ பள்ளி களைகட்டியிருந்தது. குழுமியிருந்த மாணவர்கள் குதூகலத்துடன் காத்திருந்தனர். தங்கள் பள்ளித்தோழன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி என்பதால், அவர்களிடம் ஆர்வம் கலந்த பெருமிதம் அலையடித்துக் கொண்டிருந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஐஏஎஸ், புத்தகத்தை வெளியிட்டுப் பேச, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார் நாவலைப் படைத்த ரமண கைலாஷ். ஒன்பதாம் வகுப்பு மாணவரான இவர் எழுதிய ‘ஃபயர் ஆஃப் சுமத்ரா’ எனும் ஆங்கில நாவல், இயற்கையைப் பேண வேண்டியதன் அவசியத்தை அடிநாதமாகக் கொண்டது என்பது இன்னுமொரு சிறப்பு!

200 பக்கங்கள் கொண்ட இந்த நாவல், பதின்பருவத்தினர் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கே உரிய மொழியில் கடத்துகிறது. இந்த நாவலின் மையக்கருவின் வலுவே ரமண கைலாஷுக்குப் பரவலான வாழ்த்துகளையும் குவித்து வருகிறது. எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சந்தோஷத்தில் இருந்த ரமண கைலாஷைச் சந்தித்துப் பேசினேன்.

“என்னோட எட்டு வயசுல, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இருக்கும் ஒரு காடு பாதி எரிஞ்சுட்டதாவும், அதனால் விலங்குகள் கடுமையா பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வார இதழில் செய்தி படிச்சேன். அப்பவே, காட்டுத் தீ உண்டாக என்ன காரணம், காட்டுத் தீயால் வனவிலங்குகள் நிலைமை என்னாகும்னு யோசிச்சேன். இதைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டு புத்தகம் எழுதணும்னு டைரியில் குறிச்சு வச்சிருந்தேன்.

கடந்த ஒரு வருஷமா கொஞ்சம், கொஞ்சமா எழுதியும் வைச்சுருந்தேன். படிக்க நேரம் ஒதுக்க வேண்டி இருந்ததால அதில் முழுசா கவனம் செலுத்த முடியலை. ஆனால், கரோனா பொதுமுடக்கம் வந்த பின்னாடி நிறைய நேரம் கிடைச்சுது. நிறைய வாசிச்சேன். தகவல்களை சேகரிச்சேன். முழுசா 17 நாட்களை ஒதுக்கி, 200 பக்க நாவலையும் முடிச்சேன். அப்புறம் அணிந்துரை, அச்சுக்குன்னு போய் இப்போ புத்தகமாகப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு!

சுமத்ரா தீவின் வனப்பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்படும் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் விலங்குகளின் கதைதான் இது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பிரதானமாகச் சொல்லும் இந்த நாவல், தத்துவ ரீதியாகவும் பயணிக்கும். நாவலை எழுதி முடிச்சதும் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் சாருக்கு அணிந்துரைக்காக அனுப்பி வச்சோம்.

பாஸ்கரன் சார் படிச்சுட்டு என்ன சொல்லுவார்னு ஒவ்வொரு நாளும் ஆர்வமா காத்துகிட்டு இருந்தேன். கொஞ்சம் பயமும் இந்துச்சு. ஏன்னா, இயற்கை சார்ந்து, சூழலியல் சார்ந்து வரும் எழுத்துகளில் தவறுகள் இருந்தால் அவர் அதை விரும்ப மாட்டார். ஆனால், என் நாவலைப் படிச்சிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு. பல்லுயிர்ப் பெருக்கம் பத்தி புரிஞ்சுக்கிட்டு எழுதிருயிக்கே’ன்னு பாராட்டுனதோட அணிந்துரையும் எழுதிக் கொடுத்தார்.

இதே மாதிரி அணிந்துரைக்காகப் புத்தகம் அனுப்பி வச்சப்போ, அதை வாசிச்ச ஐஏஎஸ் அதிகாரியான தாரேஸ் அகமது சாரும் ரொம்பவே பாராட்டினார். மாவட்ட வன அலுவலர் ஆனந்த் சாரும் வாசிச்சிட்டு வாழ்த்தினார். வனத்தைப் பற்றி நான் எழுதிய விஷயங்களைத் தன்னோட சொந்த அனுபவங்களை ஒப்பிட்டுச் சொன்ன அவர், ‘நிறைய ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கே’ன்னு பாராட்டியது மறக்க முடியாதது” என்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு வாழ்த்து சொல்ல பலரும் அலைபேசியில் அழைக்கிறார்கள். அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் என்னிடம் பேசத் தொடங்கினார் ரமண கைலாஷ்.

“என்னோட நாவல் எழுதும் முயற்சிக்கு எனது மொத்த குடும்பமும் ரொம்ப ஒத்துழைச்சாங்க. அப்பாவும், அம்மாவும், ‘சும்மா சும்மா லேப்டாப்பைத் தட்டாம பாடப் புத்தகத்தை எடுத்துப் படி’ன்னு சொல்லியிருந்தா இன்னிக்கு என்னால ஒரு நாவலை எழுதி முடிச்சிருக்க முடியாது. தங்கை ஜனனி அர்ச்சயாவும், ‘அண்ணே சீக்கிரம் புக் எழுதி முடி’ன்னு ஊக்குவிப்பாள். இது எல்லாமே எனக்குப் பெரிய ஊக்கமா அமைஞ்சது. இதே உற்சாகத்தோட ‘ஃபயர் ஆஃப் இந்தியா’, ‘ஃபயர் ஆஃப் ஆப்பிரிக்கா’ன்னு அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டுவரவும் முடிவு செஞ்சிருக்கேன். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சிட்டேன்.

சின்ன வயதிலிருந்தே நான் பறவைகளைப் பார்க்கவும் ஆர்வமா வனத்துக்குள் போவேன். இதெல்லாம் சேர்த்துதான் வனத்தைப் பாதுகாக்கணும்; சுற்றுச்சூழலோட முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லணும்ங்கிற ஆர்வத்தை எனக்குத் தந்துச்சு. இன்னிக்கு உலகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சினையே பருவநிலை மாற்றம்தான். அதைத் தடுக்க அடுத்த இருபது வருஷத்துக்கு நாம இப்பவே சில விஷயங்களைச் செஞ்சாகணும். அதுதான் அடுத்த நூறு வருஷங்களுக்குச் சுற்றுச்சூழலைக் காக்க நாம போடுற விதை!

பருவம் தப்பி பெய்யும் மழை தொடங்கி வறுமைவரை அத்தனையும் மாறணும்னா, காட்டுவளம் நல்லா இருக்கணும். எல்லா விலங்குகளும் வாழ்ந்தால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் மேம்படும். அதுதான் அழகான, ஆரோக்கியமான பூமியா இருக்கும். அந்த உணர்வை என்னைப் போன்ற சக மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதுதான் என்னோட லட்சியம்’’ என்று அழுத்தமாகச் சொன்னார் ரமண கைலாஷ்.

நாகர்கோவிலை தொடர்ந்து, திருச்சி எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளியும் ரமண கைலாஷின் புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது. இதில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ், மாவட்ட வன அலுவலர் ஆனந்த், நரம்பியல் மருத்துவர் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைலாஷை பாராட்டி கவுரவித்தார்கள்.

இயற்கையின் மீதான பேரன்பைப் பதிவு செய்யும் எழுத்துகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. இளம் வயதிலேயே அதை நோக்கி நடைபோடும் ரமண கைலாஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in