மானியா சிங்: அழகியாக அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மகள்!

மானியா சிங்: அழகியாக அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மகள்!

சாதனா
readers@kamadenu.in

கடந்த வாரம், ‘மிஸ் இந்தியா 2020’ அழகிப் போட்டியின் முடிவுகள் வெளியானது. அதில், முதல் இடத்தைப் பிடித்தவரை விடவும் இரண்டாம் இடத்தைப் பிடித்த மானியா சிங் உடனடியாக இணையத்தில் டிரெண்டிங் ஆனார். காரணம், அவர் தன்னுடைய தோற்றத்தைவிடவும் ஆளுமையில் பேரழகி.

“மிஸ் இந்தியா போட்டியை வெல்வது போன்றதொரு கனவைக்கூடக் காண அஞ்சியவள் நான். என்னைப் போன்ற ஒருத்தி இவ்வளவு பெரிய கனவை எப்படிக் காணலாம் என்று அடிக்கடி நினைத்து சிலிர்த்துப் போய் இருக்கிறேன். இன்று, அந்தப் பெருங்கனவு நிஜமாகிவிட்டதால் நிம்மதி அடைந்திருக்கிறேன். என்னுடைய பெற்றோருக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன். ஏதோ என்னைச் சுற்றிலும் ஒளிவட்டம் வந்ததுபோல உள்ளது” என்று வெற்றி மேடையில் பேசினார் மானியா சிங்.

ஆளுமையில் பேரழகி!

எது அவரை இப்படிச் சொல்ல வைத்தது? 20 வயதில், ‘மிஸ் இந்தியா 2020 ரன்னரப்’ ஆகக் கிரீடம் சூடி இருக்கும் மானியா சிங், உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராமப்புறத்தில் வளர்ந்தவர். அப்பா ஆட்டோ ஓட்டுநர், அம்மா ஏழைக் குடும்பத்தை கட்டிக்காக்கும் இல்லத்தரசி. தற்போது மானியா ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார். ஆனால், சிறுவயதில் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக்கூட வீட்டில் வசதி இல்லை. ஒன்பதாம் வகுப்புவரை முழுநேர பள்ளிக்கு மானியா சென்றதில்லை. ஒருவேளை உணவுகூட இல்லாமல் பல இரவுகள் மானியாவுக்கு கழிந்தன. இதற்கு இடையிலும் நன்றாகப் படித்தார். 80 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பை முடித்த மானியாவை, மேற்கொண்டு படிக்கவைக்க தாய் தன்னுடைய கால் கொலுசை விற்றார்.

ஆனால், இனி இந்த ஊரும் வேண்டாம் இப்படிப்பட்ட வாழ்க்கையும் வேண்டாம் என்றது மானியாவின் மனம். 14 வயதில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி மும்பை சென்றார். மகளைக் காணாமல் பெற்றோர் பதைபதைத்தனர். “விடலை பருவப் பெண் வீட்டைவிட்டு ஓடிவிட்டாள்” என்று ஊர் புறம்பேசியது. இரண்டு நாட்கள் கழித்து தந்தையை அலைபேசியில் அழைத்த மானியா, தான் பத்திரமாக இருப்பதாகத் தகவல் சொன்னார்.

நிஜத்தில் மானியாவிடம் கைச்செலவுக்குக்கூடப் பணம் இல்லை. ஒரு பீட்சா கடையில் வேலைக்குச் சேர்ந்தார். மும்பையில் உள்ள ஜூனியர் காலேஜ் ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். கல்லூரி நேரம் போக பீட்சா கடையின் தரையைத் துடைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். கடையில் உள்ள சரக்கு அறையில் தங்கி, தூங்கி ஓராண்டு கழிந்தது. துப்புரவு வேலைகளைச் செய்யும்போதே கடைக்கு வருபவர்களின் நடை உடை பாவனைகளை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தார். பிறகு, கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்ததும் ஆங்கிலத்தில் சரளமாகவும் நயமாகவும் பேச கற்றுக் கொண்டார். படிப்படியாக வளர்ந்து பட்டப் படிப்பையும் முடித்தார் மான்யா.

ஒரே கனவு!

மும்பை வாழ்க்கை, மிஸ் இந்தியாவாக வேண்டும் என்ற கனவை மானியாவின் மனத்தில் விதைத்தது. தன்னுடைய பெற்றோரிடம் இதைத் தெரிவித்தபோது அவர்கள் பதறிப்போனார்கள். ஆனால், மானியாவுக்கோ, ‘இது இல்லாவிட்டால் அது’ என்கிற ரீதியில்கூட இரட்டை மனமில்லை. ‘மிஸ் இந்தியா’ ஆவது என்று தீர்க்கமாக முடிவெடுத்தார். தன்னுடைய தன்னம்பிக்கையால் பெற்றோரையும் சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்தார். தன்னுடைய தாயும் வீட்டில் அடைபட்டு இருக்கத் தேவை இல்லை என்று தந்தைக்கும் புரியவைத்தார். பெற்றோரையும் மும்பை அழைத்து வந்தார். தனது தாய்க்கு அழகுக்கலையில் ஆர்வம் இருப்பதைச் சரியாக அடையாளம் கண்டு, அவரை அழகுக்கலை நிலையங்களில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். மானியாவின் தாயும் நாளடைவில் அழகுக்கலை நிபுணராக மாறினார்.

தன்னுடைய திறமையை ஊக்குவித்த மகளைத் தட்டிக் கொடுக்காமல் இருக்க முடியுமா! மகளுடைய ‘மிஸ் இந்தியா’ கனவுக்குப் பெற்றோர் இருவரும் மகிழ்வுடன் பச்சைக்கொடி காட்டினார்கள். பெரிய இடத்துப் பெண்கள் மட்டுமே அழகிப் போட்டிகளில் பங்கேற்கவும் வெற்றி பெறவும் முடியும் என்ற எண்ணத்தை புரட்டிப்போட முடிவெடுத்தார் மானியா.

2016-ம் ஆண்டில் முதன்முதலில் மிஸ் இந்தியா போட்டிக்கு விண்ணப்பித்தார். அப்போது மானியாவுக்கு கிடைத்த பதில்: “ரொம்ப மாநிறமா இருக்கீங்க...நீங்களெல்லாம் மிஸ் இந்தியா ஆக முடியாது.” இதையே மேலும் பல அழகிப் போட்டி நடத்துநர்கள் மானியாவை பார்த்துச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், இதற்கெல்லாம் மானியா சோர்ந்துபோகவில்லை. தான் கற்ற அனுபவப் பாடங்களை ஒன்றுசேர்த்து, தன்னுடைய தோற்றத்தை அல்லாமல் ஆளுமையை மெருகேற்றினார்.

2020-ல் மீண்டும் மிஸ் இந்தியா போட்டிக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில், “நான் வெறுமனே உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரதிநிதியாக வரவில்லை. அனைத்துப் பெண்களின் பிரதிநிதியாக உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் வாழ்க்கையில் பெருங்கனவைச் சுமந்து கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்மாதிரியாக உருவெடுப்பேன்” என்றார் மானியா.

அவரது தன்னம்பிக்கையும் உறுதியும் தேர்வாளர் களைக் கவர்ந்தது. இதேபோன்று மானியா, மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் பல கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து முன்னேறினார். போட்டியின் இறுதிச்சுற்றில் தன்னுடைய வாழ்க்கையை விவரித்து அரங்கத்தில் கூடி இருந்த அனைவரையும் வியக்க வைத்தார். இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். தற்போது, உலகமே மானியாவின் வாழ்க்கை கதையை வியந்துப் பேசுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in