தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரை கிளை. மதுரையில் பள்ளி அருகே செயல்பட்டுவரும் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அறிவுரையை அரசுக்கு வழங்கியிருக்கிறது. மதுவின் தீமைகளைச் சுட்டிக்காட்டியிருக்கும் நீதிபதிகள், மதுவிலக்கு கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
பொதுமக்களும் குழந்தைகளும் புழங்கும் பகுதிகளுக்கு அருகில், மதுபானக் கடைகளைத் திறப்பது எனும் தவறான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்கிறது. இதை எதிர்த்து மறியல் நடத்துவது முதல், நீதிமன்றப் படியேறுவதுவரை தங்களால் இயன்ற அளவுக்கு மக்களும் போராடிவருகிறார்கள். இனி, இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது அரசுதான். அதற்கு முழுமுதலான ஒரே தீர்வு பூரண மதுவிலக்குதான்!