ஓ.டி.டி. உலா: தி குயின்ஸ் கேம்பட்- சதுரங்க ராணியின் சதிராட்டம்

ஓ.டி.டி. உலா: தி குயின்ஸ் கேம்பட்- சதுரங்க ராணியின் சதிராட்டம்

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உள்ளரங்க விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றன. கரோனாவால் ஏற்பட்டிருக்கும் சாதகமான விஷயங்களில் ஒன்று இது. குறிப்பாக, ஒரு நெட்ஃப்ளிக்ஸ் தொடர் தந்த தாக்கத்தில், சதுரங்க விளையாட்டின் மீதான ஆர்வம் பலரைத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 24-ல் வெளியான ‘தி குயின்ஸ் கேம்பட்’ என்ற அந்த குறும் வலைத்தொடர், ஒரே மாதத்தில் உலகில் அதிகம் பார்க்கப்பட்ட நெட்ஃப்ளிக்ஸ் தொடராகச் சாதனை படைத்திருக்கிறது. கூடவே, சதுரங்க விளையாட்டு குறித்த புத்தகங்கள், ஆன்லைன் கேம்ஸ், கூகுள் தேடுதல்கள் அதிகரிக்கவும் இந்த வலைத்தொடர் காரணமாகி இருக்கிறது. விளையாட்டு தொடர்பான ஒரு வலைத்தொடர் சாமானிய ரசிகர்களைக் கவர்ந்ததன் பின்னணியில் அதன் அழுத்தமான திரைக்கதைக்கும் பங்குண்டு.

கனவில் முளைக்கும் கனவு

பெத் ஹர்மன் என்ற ஒன்பது வயது சிறுமி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுவதிலிருந்து தொடங்குகிறது கதை. கண்முன்பாகக் கார் விபத்தில் தாயைப் பறிகொடுத்த சோகம் அவளை வாட்டியெடுக்கிறது. ஒருநாள் விடுதிப் பணியாளர் ஒருவர் தனிமையில் சதுரங்கம் விளையாடுவதைப் பார்க்கும் பெத்துக்கு அந்த விளையாட்டு மீது ஆர்வம் பிறக்கிறது. ஒருமுறை, மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கொடுக்கப்படும் ஊக்க மாத்திரைகளைச் சேர்த்துவைத்து விழுங்கிவிடுகிறாள். அதன் விளைவாக மண்டைக்குள் மாயாஜாலம் நடப்பதை அவள் உணர்கிறாள். அப்போதெல்லாம் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களைக் காட்சிபூர்வமாய் கணிப்பதற்கான உள்முக ஆற்றல் அவளுக்குச் சித்திக்கிறது.

உள்ளூர் சதுரங்கப் போட்டிகளில் பெத் ஜெயிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே, பதின்ம வயதில் நுழையும் அவளை ஒரு தம்பதியினர் தத்தெடுக்கிறார்கள். புதிய தாயாரின் உதவியோடு தேசத்தின் சாம்பியனுடன் மோதுகிறாள். சதுரங்கத்தில் உலக சாம்பியனாக வேண்டும் என்பது அவளின் புதிய கனவாக முளைக்கிறது. உலக சாம்பியனான ரஷ்ய வீரரிடம் அடுத்தடுத்து மோதி தோற்கவும் நேரிடுகிறது. இதற்கிடையே ஊக்க மாத்திரைகளுடன், தாயின் குடிப்பழக்கமும் ஒட்டிக்கொள்ள, போதையில் சறுக்குகிறாள். பிஞ்சு வயதில் பறிகொடுத்த தாய்மையின் ஏக்கம், துரத்தும் தனிமை, மூழ்கடிக்கும் போதை, உலகச் சாம்பியன் கனவுகளின் துரத்தல் எனப் பல அலைக்கழிப்புகளின் மத்தியில் இளம் சதுரங்க ராணி சாதித்தாளா... என்பதே ‘தி குயின்ஸ் கேம்பட்’ வலைத்தொடர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு எத்தனையோ திரைப்படங்கள், தொடர்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், உணர்வுபூர்வமான காட்சிகளைச் சித்தரிப்பதற்கு வாய்ப்பு குறைவான சதுரங்க விளையாட்டை முன்னிறுத்தி, அதில் சுவாரசியமான கதையைப் பிணைத்திருப்பது இந்தத் தொடரின் சிறப்பு. இதே தலைப்பில் 1983-ல் வால்டர் டெவிஸ் என்பவர் எழுதிய நாவலைத் தழுவி இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது. மையப் பாத்திரமான பெத் ஹர்மனாக ஆன்யா டெய்லர் நடித்துள்ளார். பில் காம்ப், இஸ்லா ஜான்ஸ்டன் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். வலைத்தொடருக்காக எழுதி, தயாரித்து, இயக்கியிருப்பவர் ஸ்காட் ஃபிராங்க்.

சதுரங்கத்தின் நுட்பம்

சதுரங்க விளையாட்டு மற்றும் அதன் நுட்பங்கள் நிரம்பிய கதையில், இளம் பெண்ணின் வாழ்வில் ஊடாடிச் செல்லும் உறவுகள், காட்சிகளின் நகர்வை ரசனையாக்குகின்றன. விளையாட்டைப் பயிற்றுவிக்கும் முதல் குருவின் வழிகாட்டுதல், தத்தெடுக்கும் தாயாரின் பாசம், நண்பர்களுடனான உறவின் படிநிலைகள் போன்றவை உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

கேரி காஸ்பரோவ் போன்ற உலக சாம்பியன்களின் ஆலோசனைகளுடன் சதுரங்கப் பலகையின் முக்கிய நகர்த்தல்களைச் செதுக்கியிருக்கிறார்கள். சதுரங்கம் விளையாடத் தெரிந்தவர்களுக்கு இந்தத் தொடர் கூடுதல் சுவாரசியம் தரும். விளையாட்டின் தனித்துவ சொற்பிரயோகங்கள், வழக்காடுகள் சாமானிய ரசிகர்களை உறுத்தவில்லை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்.

கதை களமாடும் காலப் பின்னணியும் கதையோட்டத்துக்குப் பிரத்யேக சுவை தருகிறது. கணினி பயன்பாடு, ஆன்லைன் அனுகூலம், நவீன தகவல் தொடர்பு என எதுவும் வளர்ந்திராத ‘50 மற்றும் ‘60-களில் நடக்கும் கதை, ‘பீரியட்’ படைப்புக்கான அங்கீகாரத்தைச் சேர்க்கிறது. கிராண்ட் மாஸ்டர்கள் ஒரே நேரத்தில் பலருடன் சதுரங்கம் விளையாடுவார்கள். அதைச் சித்தரிக்கும் காட்சிகள் இந்த வலைத்தொடரின் சிறப்பான இடங்கள். அனைத்தையும்விட ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அப்போதைய சதுரங்க விளையாட்டு உலகில் ஒற்றைப் பெண்ணாக நுழைவதும், சிறிது சிறிதாக ஆண்களின் கோட்டையை ஆக்கிரமிப்பதும் தொடருக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

ரசவாதம் நிகழ்த்தும் படைப்பு

ஆழமும் நுட்பமும் நிறைந்த சதுரங்க விளையாட்டுப் போட்டிகளின் சுவாரசியமான திருப்பங்களை ரசிக்கும்படி உணரச் செய்வது சவாலானது. அதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது இந்தத் தொடர். சதுரங்கப் பலகை மற்றும் காய் நகர்த்தல்களின் ஒளிப்பதிவு, அவை தொடர்பான எடிட்டிங், பின்னணி இசை என அனைத்தும் கதையின் தனித்துவப் போக்குக்குப் பலம் சேர்க்கின்றன. சதுரங்கப் பித்து கொண்ட சிறுமியின் தலைக்குள் ஓயாது நிகழும் காய் நகர்த்தல்களை அடிக்கூரையில் அனிமேஷனில் வடிவமைத்தது ஓர் உதாரணம்.

சதுரங்கப் பலகையின் பிரமையைப் பிரதிபலிக்கும் வகையிலே சுவர் தொடங்கி உடையழகு வரையிலான அலங்காரங்கள் ஆழ்ந்து கவனிப்பவரை அதிகம் ஈர்க்கக்கூடியவை. காட்சிக்குக் காட்சி அடர்த்தி கூடும் உதட்டுச் சாயம், ஆங்காங்கே பிரதிபலிக்கும் மாத்திரையின் நிறம், நிஜ விளையாட்டு வீரர்கள் தொடர்பான சித்தரிப்புகள், நுட்பமான காய் நகர்த்தல்கள், பெண்ணுலகு சார்ந்து சதுரங்கப் பலகையையும், சமூகத்தையும் கலக்கும் குறியீடுகள் போன்றவை ஆழமான ரசிகர்களுக்கானவை. இவற்றை உள்வாங்கும்போது கதை முடிப்பின் உள் அடுக்குகள் விரியும் ரசவாதத்தையும் உணர முடியும்.

சதுரங்க நகர்வுகளை பலகையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் எதிர்கொள்வோர் ரசிக்க வேண்டிய படைப்பு, ‘தி குயின்ஸ் கேம்பட்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in