இனி எல்லாமே ஏ.ஐ - 1: என்ன அது, செயற்கை நுண்ணறிவு?

இனி எல்லாமே ஏ.ஐ - 1: என்ன அது, செயற்கை நுண்ணறிவு?

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்த தகவல்களை எளிய தமிழில் பதிவுசெய்வதில் சைபர்சிம்மன் ஒரு நிபுணர். இனி நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் இடம்பெறப்போகும் தொழில்நுட்பமான ஏ.ஐ குறித்து ஆழமாகத் தெரிந்துகொள்ள இவர் எழுதும் கட்டுரைகள் நமக்கு வழிகாட்டும். வாருங்கள் வாசிக்கலாம்...

ஒரு காலத்தில் கருதப்பட்டது போல ஏ.ஐ என்பது கைக்கு எட்டாத தொழில்நுட்பப் புதுமையோ அல்லது வியக்கவைக்கக்கூடிய எதிர்காலச் சாத்தியமோ அல்ல. ஆய்வுலகிலிருந்து நடைமுறை உலகுக்கு அது வந்துவிட்டது. நவீன வாழ்க்கையை மேம்படுத்தி, புதிய தீர்வுகளைத் தரவல்ல நுட்பமாக அது உருவெடுத்துள்ளது.

பல்வேறு துறைகளில்…

ஏ.ஐ நுட்பம் நுழையாத துறையே கிடையாது எனலாம். அன்றாட வாழ்க்கையிலும் ஏ.ஐ திறன் கொண்ட புரோகிராமின் பலன்களைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், நோய் கண்டறிதல், புதிய மருந்து கண்டுபிடிப்பு என பலவிதங்களில் இந்தத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

இப்படி எல்லையில்லா சாத்தியங்களைக் கொண்டிருந்தாலும், எண்ணற்ற சவால்களையும் கொண்டிருக்கிறது ஏ.ஐ. இவற்றைப் புரிந்துகொள்ள, முதலில் ஏ.ஐ என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

சிந்திக்கும் இயந்திரங்கள்

ஏ.ஐ என்று சொல்லும்போது, மனதுக்குள் பல்வேறு கற்பனைகளும், சித்திரங்களும் நமக்குத் தோன்றும். அறிவியல் புனைகதைகளும், அவற்றின் அடிப்படையில் உருவான பல ஹாலிவுட் திரைப்படங்களும் நம்முள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அப்படியானது. பொதுவாக, மனிதர்கள் போலவே சிந்தித்துச் செயல்படக்கூடிய திறன் கொண்ட இயந்திரங்கள்தான் ஏ.ஐ என புரிந்து
கொள்ளலாம். இயந்திரம் என்று சொல்லும்போது, இங்கு பெரும்பாலும் கணினிகளையும், அவற்றை இயக்கக்கூடிய 
மென்பொருள் புரோகிராம்களையுமே குறிப்பிடுகிறோம்.

ஆக, தானாகச் செயல்படுவது, சிந்திக்கும் திறன் கொண்டிருப்பது ஆகியவற்றை ஏ.ஐ-க்கான ஆதார அம்சங்களாகக் கொள்ளலாம். ஆனால், இந்தப் புரிதலில் நிறைய போதாமைகள் இருப்பதையும் உணரலாம். இயந்திரம் தானாகச் செயல்படுவது என்பது இனியும் ஓர் அதிசயம் அல்ல. தொழிற்சாலை ரோபோக்கள் இதைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கின்றன. இவை புரோகிராமிங் சொல்வதைக் கேட்டு நடப்பவை. இந்த வகை இயந்திரங்களுக்கு எந்தப் புத்திசாலித்தனமும் கிடையாது. இவற்றைத் தானியங்கிகள் என்று குறிப்பிடலாமே தவிர அறிவுத்திறன் கொண்டவை என்று சொல்ல முடியாது. தானியங்கி இயந்திரங்களுக்கு, குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பணியைச் செய்யத் தெரியும். அதில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டாலும் அவை ஸ்தம்பித்துவிடும். எனில், இயந்திர புத்திசாலித்தனம் என எதைக் கொள்வது?

இந்த இடத்தில், ஜான் மெக்கார்த்தியை (John McCarthy) துணைக்கு அழைத்துக்கொள்ளலாம். அவர்தான் இத்துறையின் தந்தை என போற்றப்படுகிறார். 1950-களில், ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ எனும் பதத்தை முதன்முதலில் முன்வைத்தவர் அவர்தான். 1956-ல் அவர் முன்னின்று நடத்திய மாநாட்டில்தான், ஏ.ஐ ஆய்வு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. ஏ.ஐ தொடர்பான கோட்பாடுகளையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக்கொடுத்த மெக்கார்த்தி, இதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.
“ஏ.ஐ என்பது, புத்திசாலித்தனமான கணினி புரோகிராம்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்” என்று விளக்கம் தருகிறார் மெக்கார்த்தி. மனிதர்கள் போலவே, உலகில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய, இலக்குகளை அடையக்கூடிய திறன் கொண்ட கணினி புரோகிராம்களை உருவாக்குவதுதான் ஏ.ஐ-யின் இறுதி நோக்கம் என்றும் கூறுகிறார்.

ஏ.ஐ தொடர்பான புரிதலில், ‘மனிதர்கள் போலவே’ எனும் குறிப்புதான் முக்கியமானது. ஏனெனில், மனிதர்கள் போலவே சிந்தித்து, மனிதச் செயல்களை அப்படியே பின்பற்றி நடக்கும் வகையிலான புரோகிராம்கள் மூலம், இயந்திரங்களில் மனித அறிவுக்கு நிகரான தன்மையை உருவாக்குவதே (simulation), செயற்கை நுண்ணறிவு என கொள்ளப்படுகிறது. கற்றுக்கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், காரண காரிய விளக்கம் ஆகியவையும் இதன் நோக்கமாக அமைகின்றன.

ஏ.ஐ-யில் மூன்று வகை

ஏ.ஐ வரையறை போலவே, அதன் வகைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஏ.ஐ என்பது, ‘குறுகிய ஏ.ஐ’(Artificial Narrow Intelligence), ‘பொது ஏ.ஐ’ (Artificial General Intelligence) மற்றும் ‘சூப்பர் ஏ.ஐ’ (Artificial Super Intelligence) என மூன்று விதமாக வகைப்படுத்தப்படுகிறது. ‘குறுகிய ஏ.ஐ’ என்பது, குறிப்பிட்ட நோக்கில் செயல்படும் ஏ.ஐ புரோகிராம்களைக் குறிக்கிறது. பலவீனமான ஏ.ஐ என இது கொள்ளப்படுகிறது. அநேகமாக, இன்றுவரை நாம் அறிந்திருக்கும் ஏ.ஐ புரோகிராம்கள் அனைத்தும் இந்த வகைதான். ‘அலெக்ஸா’ போன்ற டிஜிட்டல் உதவியாளர்கள், அரட்டை மென்பொருட்கள் எல்லாம் இதன் கீழ்தான் வருகின்றன. மனிதர்கள் போலவே செயல்படும் திறன் கொண்ட ஏ.ஐ நுட்பம், ‘பொது ஏ.ஐ’ என குறிப்பிடப்படுகிறது. இது வலுவான ஏ.ஐ என்றும் சொல்லப்படுகிறது. இந்த வகை நுட்பத்தை அடைவதை நோக்கியே ஏ.ஐ முன்னேறிக்கொண்டிருக்கிறது. தற்போதையை நிலையில், இதில் சாதனைகளைவிட, சவால்களே அதிகம் இருக்கின்றன. மனித அறிவை மிஞ்சக்கூடிய திறனே மேம்பட்ட ஏ.ஐ எனப்படுகிறது.

‘சூப்பர் ஏ.ஐ’ வகை இப்போதைக்குச் சாத்தியம் இல்லை எனலாம். எப்போதுமே சாத்தியம் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. பெரும்பாலும், ஏ.ஐ தொடர்பான ஆரூடங்களும், ஆபத்தான அச்சுறுத்தல்களும் இந்த வகை ஏ.ஐ சார்ந்த கற்பனைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாம் நடைமுறையில் ஏ.ஐ, எந்தெந்தத் துறைகளில், எப்படி எல்லாம் பயன்படுகிறது என பார்க்கலாம்.

முதலில் கல்வித் துறையிலிருந்து தொடங்குவோம்!

முதல் ஏ.ஐ புரோகிராம்!

மின்னணுக் கணினி (1941) மற்றும் புரோகிராமைச் சேமிக்கக் கூடிய கணினி (1949) ஆகியவை, ஏ.ஐ ஆய்வுக்கான அடித்தளமாக அமைந்தன. எனினும், மனித அறிவு மற்றும் இயந்திரங்களுக்கு இடையிலான தொடர்பு 1950-கள் வரை கவனிக்கப்படவில்லை. அனைத்து விதமான நுண்ணறிவும், பதில் வினை (feedback) சார்ந்தே அமைவதாக, நார்பர்ட் வெய்னர் எனும் கணித மேதை கண்டறிந்து கூறியதே, ஏ.ஐ ஆய்வுக்கான தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு, 1955-ல், நிவல் மற்றும் சைமன் உருவாக்கிய ‘தி லாஜிக்ஸ் தியரிஸ்ட்’ என்பதே முதல் ஏ.ஐ புரோகிராமாகக் கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in