Published On : 26 May 2020

க்ரைம் மன்னன் காசி: 1- பெண் பித்தனாக வளர்ந்த கதை!

kasi-series

என்.சுவாமிநாதன்      
                                
கடந்த நாடாளுமன்றத்தேர்தல் நேரம் அது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தனர். வீடு வீடாகப்போய் தன் தேர்தல் அறிக்கையைக் கொடுத்தவாறே பிரச்சாரத்தில் இருந்தார் பொறியாளர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுபி. இத்தனைக்கும், தொகுதிக்குள் அவருக்கோ அவரது ’வருங்கால இந்தியா கட்சி’க்கோ பெரிய அளவில் அறிமுகமோ, ஆதரவோ இல்லை.          

“பெண்களின் பாதுகாப்புக்காக, அவர்களை நோக்கி வரும் ஆபத்துகளை தானாக அறிந்து செயல்படும் வசதி கொண்ட கருவியைக் குறைந்த செலவில் வடிவமைத்து அனைவருக்கும் வழங்க வழிவகைசெய்வேன். இதனால் பெண்களுக்கு எதிரான 80 சதவீதக் குற்றங்கள் குறையும்” எனப் பேசியது சுபியின் தேர்தல் வாக்குறுதி மைக்.  தனது சொந்த வீட்டுக்குள் இருக்கும் சகோதரனைப் பார்த்து சுபி இத்தகைய வாக்குறுதியை வாரி வழங்கினாரோ என்னவோ. ஆம், பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்து சீரழித்துவிட்டு தற்போது சிறைக்குள் இருக்கும் நாகர்கோவில் காசியின் உடன்பிறந்த அண்ணன்தான் சுபி.

தேர்தலில் சுபிக்கு 820 வாக்குகள் விழுந்திருந்தன. தேர்தல் முடிந்து முடிவுக்காக காத்திருந்த தருணத்தில் கல்லூரி மாணவிகள் சிலரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்டேன். அவர்களில் சிலர் , “ஹெல்மெட் சின்னத்துக்கு” எனப் படக்கெனச் சொன்னார்கள். செய்தியாளராக களத்தில் நிற்கும் நமக்கேகூட பரிச்சயம் இல்லாத சுபிக்கு கல்லூரி மாணவிகள் வாக்களித்ததாக எப்படிச் சொன்னார்கள்? முகநூலில் மிஸ்டர் க்ளீன் இமேஜுடன் வலம்வந்து கொண்டிருந்த காசியின் பதிவுகள் தான் பெண் பிள்ளைகளிடம் சுபியைச் சேர்த்திருந்தது. ஆனால், காசியின் சுபாவத்தில் இருந்து முற்றாக மாறுபட்டவர் அவரது சகோதரர்  சுபி. இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது முன்வரிசையில் நின்று உரிமைக்குரல் கொடுத்த சுபி, புற்றுநோயாளிகளுக்கு விக் செய்வதற்காக அவ்வப்போது தனது தலைமுடியையையும் தானம் செய்பவர். இதனால் எப்போதுமே மொட்டைத் தலையோடு இருப்பார் சுபி. ஆனால், அவருக்கும் சேர்த்து முடிவளர்த்துக்கொண்டு வலம்வரும் காசி, சுபியின் மாற்று அரசியல் சித்தாந்தத்தையும் கேள்விக்குள்ளாக்கி அவரது அரசியல் கனவையும் அஸ்தமனமாகியிருக்கிறார்.

என் மகனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்ய முயற்சிக்கிறார்கள் என திகில் கிளப்பினார் காசியின் தந்தை. ஆனால், சகோதரன் சுபியோ இவ்விஷயத்தில் எதிர்வினை எதுவும் காட்டவில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள்!                

காசியின் ஒரே சகோதரிக்கும் திருமணமாகிவிட்டது. வீட்டில் மூன்று பிள்ளைகளில் காசிதான் கடைக்குட்டி. காசிக்குப் பெண் என்றால் பெண்தான்! சொந்தங்கள், அவர்களோடு நெருங்கியவர்கள் என பாரபட்சமே பார்க்காமல் இஷ்டத்துக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பதில் கில்லாடி.            

 “இதெல்லாம் இன்றைக்கு நேற்றல்ல” என்று சொல்லும் காசியின் நண்பர்கள், பத்து ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறார்கள். காசி பள்ளியில் படித்துவந்த நேரம் அது. தனது தெருவைச்சேர்ந்த இரண்டெழுத்துப் பெயர் கொண்ட ஒருவரோடு காசிக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவரை ‘அண்ணா’ என்றே காசி அழைத்தாலும், இருவருக்கு இடையிலும் நட்பே மிஞ்சி நின்றது. 'தீனா' திரைப்பட அஜித் ஸ்டைலில் கழுத்தில் கெத்தாக உருட்டு செயின், கையில் தடிமனான காப்பு சகிதம் வலம் வரும் அந்த இரண்டு எழுத்து அண்ணன்தான் அன்றைய நாளில் காசியின் ரோல்மாடல். காதல் வலையில் பெண்களை வீழ்த்தி பணம்பறிக்கும் பாதையை காசிக்குக் காட்டியதும் அவரே என்கிறார்கள். ஒருகுறிப்பிட்ட வயதுக்குப் பின் பக்குவப்பட்டு(!) அதில் இருந்தெல்லாம் முற்றாக விடுபட்டு  இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிசெய்கிறார் அந்த அண்ணன். அவருக்குத் திருமணமும் முடிந்துவிட்டது.          

அந்த அண்ணன் ஒதுங்கிய தருணத்தில், முழுப்பெண் பித்தனாகவே மாறியிருந்தான் காசி. பெண்களோடு பழகுவது, நெருங்குவது, படமெடுப்பது, மிரட்டுவது என நகர்ந்த காசியின் வாழ்வில் சென்னை பெண் மருத்துவர் புகார் சொன்னதுதான் திருப்புமுனை. ஆரம்பத்தில் சிறு சிறு குற்றங்களில் மட்டுமே ஈடுபட்டுவந்த காசி, சட்டப்புள்ளி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்ட பின்னர்தான் தன்னை அதிகார மையமாக மாற்றும் முனைப்பிலும் ஈடுபடத்தொடங்கினான் .

ஒரு தொழிலாக இல்லாமல் தங்களது சுய பாதுகாப்புக்காக சட்டம் படிப்பவர்களும் உண்டு. அப்படித்தான் காசி தனது சுயபாதுகாப்புக்காக சட்டம் படிக்க முடிவெடுத்தான். தொலைதூரக் கல்வியில் சட்டம் படிப்பதாக அவரது நண்பர்களிடமும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லிவந்தான். (தொலைதூரக் கல்வியில் தொழில்முறை வழக்கறிஞர் படிப்பை படிக்க இயலாது)        

       
 
இதனிடையே, தனது பாதுகாப்புக்காக சட்டப்புள்ளி ஒருவரோடு காசி ஒட்டிக்கொண்டான். ஒரு கட்டத்தில் காசியின் நடவடிக்கைகளை அறிந்து அந்த சட்டப்புள்ளி இவனை விட்டு மெல்ல ஒதுங்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது, பெண்களை ஏமாற்றுதல், ஆபாசப் படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறான் காசி.

‘காசியின் செயல்கள் மனிதகுலத்துக்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்களும், குமரி மாவட்ட வழக்கறிஞர்களும் ஆஜராகமாட்டார்கள்’ என தீர்மானம் நிறைவேற்றி நீதியின் பக்கம் நிற்கிறது நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம்.                        

15 வயதில் தனது வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டு சாலையில் செல்லும் பெண்களை நோட்டம்விடத் தொடங்கிய காசி, பெண்களை மையப்படுத்திய க்ரைம் மன்னன் ஆனது எப்படி?  இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? பார்ப்போம்.

(தொடரும்...)

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil