பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்!- பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் வகுக்கும் வியூகம்

பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்!- பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் வகுக்கும் வியூகம்

குள.சண்முகசுந்தரம்

நிச்சயம் மத்தியில் மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பெருத்த நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறது பாஜக. நாம் வராவிட்டாலும் மோடியின் ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் காங்கிரஸ், அதற்கான ஆயத்தப் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டது.

இப்போதே, தங்களை ஆதரிக்கக்கூடும் என எதிர்பார்க்கும் கட்சிகளுடன் காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதி மாலை இந்தியா முழுவதும் உள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தேசிய, மாநிலக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருக்கிறார் சோனியா. ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மம்தா, அகிலேஷ், மாயாவதி மட்டுமல்ல... பாஜகவை ஆதரிக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டவர்களையும் இந்தக் கூட்டத்துக்கு அழைத்திருக்கிறது காங்கிரஸ்.

“400 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெறுவோம்” என்று மிதமிஞ்சிய நம்பிக்கையில் சொல்லிக் கொண்டிருக்கிறார் மோடி. ஆனால், 400 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டாலும், “நாங்கள் 150 முதல் 200 தொகுதிகளுக்கு குறையாமல் ஜெயிப்போம்” என தன்னடக்கத்துடன் சொல்கிறது காங்கிரஸ். ஒட்டுமொத்த தேசத்தின் மனநிலை எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், மாநிலக் கட்சிகளில் பெரும்பாலானவை இந்தமுறை மோடிக்கு எதிராக திரும்பி நிற்கின்றன. ஆனாலும், மோடியின் ஒரு கட்சி ஆட்சி; ஒரே தலைமை என்ற கோஷத்தை ஏற்காத அந்தக் கட்சிகள் எல்லாம் பலவாறாக சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் சில தங்களது மாநிலங்களில் காங்கிரஸோடு இந்தத் தேர்தலில் கடுமையாக மோதியும் இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in