வலி இல்லாமல் ஊசி போடுவது எப்படி?

வலி இல்லாமல் ஊசி போடுவது எப்படி?

கணேசகுமாரன்

தனது முதல் தொகுப்பிலேயே கவனத்துக்கு வந்த கவிஞர் ஷக்தியின் இரண்டாவது தொகுப்பு. முன்பை விட  இலகுவாக்கியிருக்கிறேன் என்னெழுத்தை என்று தன்னுரையில் கூறியிருந்தாலும் முந்தைய தொகுப்பின் கூறுகள் நிறைய தென்படுகின்றன. ஒருவேளை ஷக்தியின் தனிபாணி அதுதானோ என்னவோ... ஷக்தி தான் ஒரு மருத்துவர் என்பதை கவிதைகளில் பல இடங்களில் அடையாளப்படுத்தியிருந்தாலும் சில வரிகளில் தென்படும் கவிதை மீறிய அதிர்ச்சி வாசகரை உலுக்கத்தான் செய்கிறது.// எனது குருதி பாகிரதி போல மெளனமாய் பயணிக்கிறது// சலனமற்று செல்லும் எந்நதியினை இனி பார்ப்பினும் இவ்வரி ஞாபகமாய் ஒருமுறை முங்கிக் குளிக்கும்.

 //சவங்களோடு புழங்குகையில் பயனற்றது கருணை// வரியினை அழுந்த எழுதி இதயத்தின் அருகில் மாட்டி வைத்துக்கொள்ளலாம். இங்கே எங்கு திரும்பினும் சவங்களே. கருணை என்பதும் காதல் என்பதும் என்றோ எங்கோ புழங்கிய வார்த்தைகளாய் ஆகிவிட்டன. தோற்றுப்போன பூர்வகுடியின் மிச்சம் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கவிஞன் ஓர் அதிசயப் பிறவி. ஆனால் அவனுக்கும் தினம் உடைக்க ஒரு மண்டை ஓடு கிடைத்துவிடுகிறது. பிணத்தின் உறவுக்காரர்கள் தரும் கருணைப் பணத்தை மறுக்கும் மருத்துவமனைக்காரன் ஒன்றை வசதியாக மறந்துவிடுகிறான். மகளுக்கு கிண்டர்ஜாயும் மனைவிக்கு கல்தோசையும் தந்தது அந்தப் பிணம்தான் என்பதை. கவிஞனாய் வெல்லும் ஷக்தி சராசரி மனிதனாய் தோற்கும் இடம் அதுதான். மேலும் சற்றே நகைமுரண். பிரேதத்துக்கான அழுகை, துயரை அலங்கரிக்கும் செயல் எனக் கூறும் கவிதையாசிரியர் நிறைய அழ வைக்கிறார் தொகுப்பு முழுவதும். உணர்வினைத் தொடாமல் வெறும் காட்சிப் பதிவுகளாய் விரிவது தொகுப்பின் பலவீனம்.

பித்த ஊளை என்று தலைப்பிடப்பட்ட கவிதை சொல்லும் நோய் அரசியல் மிகச் சொற்பக் கவிதைகளிலே தென்படுகின்றது. பிற கவிதைகளில் வலி மட்டுமே பிரதானப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் வாசிக்கத் தூண்டும் வலி என்பது மருத்துவர் ஷக்தியின் வெற்றிதானே தவிர கவிஞர் ஷக்திக்கான தோல்வி. இரண்டு வெள்ளெலிகள் கவிதையெல்லாம் தொகுப்புக்கு திருஷ்டி. இன்னும் மருத்துவ வசதி கிட்டாத வாக்குச் சேகரிப்புக்கு மட்டும் குளோரின் பவுடர் தூவப்படும் கிராமங்களை ஆவணப்படுத்திருக்கிறார் கவிஞர். நம்பிக்கையூட்டும் கவியாசிரியர் ஷக்தியிடம் வாசகர் எதிர்பார்ப்பது மருத்துவ வாழ்வு அல்ல. புரையோடிய சமூகத்துக்கான கவிதை வழி மருத்துவ தீர்வு. ரகசிய அமைதி என்றொரு வார்த்தை ஒரு கவிதையில் தென்படுகின்றது. நோய்மை மூலம் இச்சமூகத்தின் கன்னத்தில் அறைய முற்படும் கவிதையாசிரியர் தொகுப்பு முழுவதும் அந்த அமைதியைக் கையாண்டிருக்கலாம். பிணவறையின் நெடியும் மருத்துவமனையின் அலறலும் பகலும் இரவும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. என்றோ யாருக்கோ செலுத்தப்பட்ட, மயக்க மருந்து இன்றும் துளைக்கும் ஒரு தண்டுவடத்தின் வலியை வாசகரின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஷக்தி. காட்சிக்குக் கிடைத்திருப்பது குருதி நழுவும் தண்டுவடம் மட்டுமே. வலி அல்ல.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in