மகா பெரியவா 47: அருளே ஆனந்தம்

மகா பெரியவா 47: அருளே ஆனந்தம்

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

 உ ணவு உரிய நேரத்தில் உள்ளுக்குள் செல்லவில்லை என்றால், எந்த ஒரு செயலிலும் வேகம் இருக்காது. சிலரை மந்தமாக்கி விடும்.
தனி மனிதன் ஒருவன் தொடர்ந்து பல நாட்கள் மேற்கொள்ளக்கூடிய உபவாசம், உடலுக்கு ஒரு விதமான அயர்ச்சியைக் கொடுத்துவிடும். உடல் நலனை பாதித்து விடும். ‘உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்வழி’ என்று பல நாட்கள் ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்றவர்களை ஒரு கட்டத்தில் மீட்டெடுத்து ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறது அரசாங்கம். காரணம், அவர்கள் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!

மனிதர்களுக்கு வேளா வேளைக்குச் சாப்பாடு அவசியம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். அதனால்தான், உணவு உட்கொள்ளும் வேளை என்று வந்து விட்டால் யாரை எங்கே பார்த்தாலும் பரஸ்பரம் விசாரிக்கக் கூடிய கேள்வி  ‘சாப்பாடு ஆகி விட்டதா?’

‘மனுஷன் சாப்பிட்டானான்னு இல்லையானுகூட ஒரு விசாரிப்பு இல்லை’ என்று பலரும் குறைப்பட்டுக் கொள்வதும் இதுபோன்ற எண்ணத்தால்தான்! பசி நீடித்திருக்கின்ற வேளையில் மனிதனால் எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக ஆற்ற முடியாது.
கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்களின்போது மற்றவர்கள் சாப்பிட்டாகி விட்டதா என்று விசாரிப்பதும் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்கிற நற்சிந்தனையால்!

உடன் இருப்பவர்கள் சாப்பிட்டார்களா என்கிற விருந்தோம்பல் குணம் குறைந்து வருகின்ற இந்தக் காலத்தில் ‘மகா பெரியவா சாப்பிட்டாரா? எல்லோரையும் காத்து ரட்சிக்கின்ற அந்த மகான் அதிக நேரம் பசியோடு இருக்கக் கூடாது. அவர் தினமும் நன்றாகச் சாப்பிட வேண்டும்’ என்றெல்லாம் கவலைப்பட்ட ஒரு ஜீவனும் உண்டு.
யார் அந்த ஜீவன் தெரியுமா?  அன்னதான சிவன்.

ஊருக்கே அன்னதானம் போட்டு தன் வாழ்நாளில் பல லட்சக்கணக் கானவர்களின் பசியையும் போக்கிய சிவன், மகா பெரியவா சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறார் என்ற தகவல் கேட்டதும், மனம் துடிதுடித்துப் போய்விட்டார். சாதாரணமான மனிதரைப் போல் மகா பெரியவாளும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

யாத்திரையின்போது சில காலம் மகா பெரியவா சரியாக அன்ன பிஷை (உணவு) எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். மடத்தின் மேனேஜரும், மற்றும் சில முக்கியஸ்தர்களும் இது பற்றி மகானிடம் மெள்ளக் கேட்டபோது தான் உபவாசம் இருந்து வருவதாகத் தெரிவித்தார். தவிர, இது தொடர்பான அடுத்தடுத்த கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த ‘சப்ஜெக்ட்’டில் இருந்து வேறு ‘சப்ஜெக்ட்’டுக்கு மகா பெரியவாளே தாவி விட்டார்.

உபவாசம் இருப்பது என்றால், தினமும் ஒருவேளை ஏதேனும் ஆகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும், பகலில் முழு உணவோ அல்லது இரவு வேளையில் பலகாரமாகவோ அந்த உபவாசம் அமையலாம். உபவாசத்தின் தன்மையைக் கூட்ட வேண்டும் என்றால், இரவு வேளைகளில் மட்டும் பால் மற்றும் பழங்களை ஆகாரமாக எடுத்துக் கொள்ளலாம் (இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது).

ஆனால், மகா பெரியவா எடுத்துக் கொண்டதோ கடுமையான உபவாசம். எதையுமே உட்கொள்ளவில்லை. அனைத்தையும் துறந்து சில காலம் இருந்தார். பால், பழம் போன்ற எந்த ஒரு உணவுப் பொருளையும் அவர் சாப்பிடவில்லை. எல்லாவற்றையும் தவிர்த்தார். மடத்து அதிகாரிகளும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் மகானிடம் சென்று ஆகாரம் ஏதேனும் எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவார்கள். அக்கறையுடன் வந்து அவர்கள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வார் மகான். பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் பூத்துவிட்டு, அவர்களை நைச்சியமாகப் பேசி அனுப்பி விடுவார்.

இதனால், ‘ஏதேனும் ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று மகானிடம் உரிமையாகக் கேட்கிற தைர்யம் யாருக்கும் இல்லை.
யார் சொன்னால் மகான் கேட்பார்? மகா பெரியவாளிடம் சென்று உரிமையாகப் பேசுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும் அல்லவா?

இந்த நிலையில், இதைக் கையில் எடுத்துக் கொண்டவர் அன்னதான சிவன். அவருக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தியதே ஸ்ரீமடத்தில் இருக்கிற சில கைங்கர்யதாரர்கள்தான்!

சிவன் அப்போது வெளியூரில் இருந்தார். ஸ்ரீமடத்தில் இருக்கிற ஒரு சில கைங்கர்யதாரர்கள் நேரில் போய் அவரைச் சந்தித்து வலியுறுத்திச் சொன்னார்கள். தான்  உடனே மகானுக்குக் கடிதம் எழுதுவதாக அவர்களிடம் உறுதி கூறி அனுப்பினார் சிவன்.
கடந்த சில தினங்களாக மகா பெரியவா உணவே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தன்னிடம் எத்தகைய வேதனையையும் மனக் கஷ்டத்தையும் உண்டாக்கி இருக்கிறது என்பதை மகானுக்கு உணர்த்தத் தீர்மானித்தார்.

எனவே, கைங்கர்யதாரர்களிடம் தான் ஒப்புக் கொண்டபடி மகா பெரிய வாளுக்கு ஒரு கடிதம் எழுதினார். தன் மனதில் உள்ள குறையை அந்தக் கடிதத்தில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார்.

‘தாங்கள் தொடர்ந்து பல காலம் உபவாசம் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். இப்படித் தொடர்ந்து பல நாட்களுக்கு சாப்பிடாமலேயே இருந்தால் தங்களது உடல்நிலை பாதிக்கின்ற அபாயம் உள்ளது. தாங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் இந்த லோகத்துக்கு நல்லது. அருள் தேடி வருகின்ற பக்தர்களைத் தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்றால், தங்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும். எனவே, சிறிதளவேனும் அன்ன பிஷையை ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று உணவை ஏற்குமாறு வலியுறுத்தி விட்டு அதோடு மகானுக்குப் பல முன்ஜாக்கிரதை விஷயங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

அதாவது, ‘‘தங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும், சீதோஷ்ண நிலை மாறினாலும் அதற்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்க வேண்டும். யாத்திரையின்போது பல இடங்களிலும் தாங்கள் நீராட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய வேளைகளில் கடலில் ஸ்நானம் செய்யச் சென்றால், தக்க துணையுடன் செல்லுங்கள். நதிகளில் நீராட இறங்கும்போது ஆழம் பார்த்து இறங்க வேண்டியது அவசியம்.

பூஜை எல்லாம் பூர்த்தியான பின்னர் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு வேளையில் வெகு நேரம் கண் விழித்துப் படித்துக் கொண்டிருக்கக் கூடாது. சாதாரணமான ஒருவன் நமக்கு இத்தனை விஷயங்களை அறிவுரை போல் சொல்கிறானே என்று என்னைப் பற்றித் தவறாக எண்ண வேண்டாம். தங்களுக்கு அறிவுரை சொல்கிற யோக்கியதை இந்த உலகில் எவருக்கும் இல்லை. எப்போதும் தாங்கள் பரிபூரணமான தேக நலத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அக்கறையிலும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்’’ என்று மனமுருகி முடித்திருந்தார் அன்னதான சிவன்.

இந்தக் கடிதம் மகா பெரியவாளின் பார்வைக்கு வந்தது. தன் உதவியாளரை விட்டுப் படிக்கச் சொன்னார். ஒரு முறை அல்ல. இரண்டு முறை இதை நிறுத்தி நிதானமாக வாசிக்கச் சொல்லிக் கேட்டார் மகான். பிறகு அதன் அருகே இருந்த சிப்பந்திகளைப் பார்த்து, ‘‘சிவனுக்கு என் மேல அளவு கடந்த மரியாதை. பாசம். எத்தனை கரிசனமா எழுதி இருக்கார், பார்த்தேளா...’’ என்று பூரித்தார் மகான்.

பொதுவாக, ஸ்ரீமடத்துக்கு வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதிப் போடுவது வழக்கம். தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகிற ஒரு நடைமுறை. அந்த வகையில் அன்னதான சிவன் எழுதிய இந்தக் கடிதத்துக்கும் மகான் பதில் போடுவார் என்று மடத்தில் இருக்கிற தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

இப்படி அனைவரும் நினைத்ததற்கு ஒரு காரணம். பதில், சிவனுக்குச் சொல்வது மட்டுமல்ல... மகா பெரியவா இனி அன்ன பிஷையை வழக்கம்போல் ஏற்றுக் கொள்வாரா என்று அவர்களுக்கு இருக்கிற சந்தேகமும் அகன்று விடும். அதனால்தான் மகான் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லோரும் அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், மகான் பதில் சொல்லவில்லை. வழக்கம் போல் ஒரு புன்னகையை வீசி விட்டு, அடுத்து ஏதோ ஒரு ‘சப்ஜெக்ட்’டுக்குப் போய்விட்டார்.

நாட்கள் ஓடின. ஆனால், மகா பெரியவா உபவாசத்தை விடுகிற வழியாய் இல்லை. உபவாசமும் மகா பெரியவாளை விடுவதாக இல்லை.

மீண்டும் தொடர்ந்தது பட்டினி விரதம். அதே கடுமை யான நிலைப்பாடு. எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ள வில்லை.
வெளியூரில் இருந்த சிவனுக்கு இந்தத் தகவல் சில தொண்டர்கள் மூலம் மீண்டும் போய்ச் சேர்ந்தது. மகானது நிலையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார் சிவன். கிட்டத்தட்ட அழுதே விட்டார்!

அடுத்த நாளே அன்னதான சிவனிடம் இருந்து மீண்டும் ஒரு கடிதம் ஸ்ரீமடத்துக்கு வந்தது.  பெரியவாளின் பார்வைக்கும் போனது.
என்ன ஆனது? மனம் கனிந்தாரா மகான்?

(ஆனந்தம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in