இந்தியன் நெ.1: இந்திய கிரிக்கெட்டின் தந்தை

இந்தியன் நெ.1: இந்திய கிரிக்கெட்டின் தந்தை

இந்தியாவில் இன்றைய தினம் கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்கள் மிகவும் குறைவு.  சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது.  ஆனால்,  கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பே, இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வெற்றிக்கொடி நாட்டியவர் மகாராஜா ரஞ்சித் சிங்ஜி. இந்திய கிரிக்கெட்டின் தந்தையாகவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய முதல் இந்தியராகவும் விளங்கும் மகாராஜா ரஞ்சித் சிங்கை (ரஞ்சி)  பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

1872-ம் ஆண்டில் கத்தியவாரில் ரஜபுத்திர குடும்பம் ஒன்றில் ரஞ்சி பிறந்தார். இவரது தந்தை ஜிவான்சிங்ஜி ஒரு விவசாயி. இருப்பினும் இவரது குடும்பம், ரஞ்சியின்  தாத்தா வழியில் நவாநகர் அரசகுடும்பத்துக்கு உறவினர்களாக இருந்தனர். பிற்காலத்தில் நவாநகர் அரசராக இருந்த விபாஜிக்கும், அவரது மகன் கலூபாவுக்கும் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து மகன் கலூபாவை அரண்மனையில் இருந்து விபாஜி வெளியேற்றினார். பின்னர் ரஜபுத்திர குடும்பங்களில் உள்ள வழக்கப்படி, தனது தூரத்து உறவினரின் மகனான ரஞ்சியைத் தத்தெடுத்தார் விபாஜி. அக்காலத்தில் நடந்த போர் ஒன்றில் விபாஜி வெற்றிபெற ரஞ்சியின் தாத்தா உதவியதாகவும், அதன் பிரதிபலனாகவே ரஞ்சியைத் தனது வாரிசாக  விபாஜி அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அரச குடும்பத்தின் வாரிசாக தத்தெடுக்கப்பட்ட ரஞ்சி,  மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு சென்ற ரஞ்சிக்கு, படிப்பைவிட  அந்நாட்டில் பிரபலமாக இருந்த கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் பிறந்தது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவரது வழக்கமாகிப் போனது.
நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவதோடு  நிறுத்திக்கொள்ளாமல், உள்ளூரில் சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்துக்குள் நடந்த பல போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரஞ்சி, பின்னாளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியில் இடம் பிடித்தார். இந்த அணிக்காக ரஞ்சி ஆடிய ஆட்டங்கள், இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த சசெக்ஸ் கவுண்டி அணியின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக இவரை தங்கள் கிளப்புக்காக ஆட  ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

1895-ம் ஆண்டு சசெக்ஸ் அணிக்காக ஆடிய முதல் கவுண்டி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 77 ரன்களையும், 2-வது இன்னிங்ஸில் 150 ரன்களையும் குவித்து அனைவரையும் திகைக்கவைத்தார் ரஞ்சி. இதைத்தொடர்ந்து பல கவுண்டி போட்டிகளிலும் ரஞ்சி கலக்க, இங்கிலாந்தின் மூலை முடுக்கெல்லாம் இவரது புகழ் பரவியது.

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த வழக்கப்படி சசெக்ஸ் அணிக்காக ரன்மழை பொழிந்துவரும் ரஞ்சியை, அணியில் சேர்த்தால் என்ன என்ற கேள்வி இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழுவில் ஒலித்தது.   என்னதான் சிறப்பாக ஆடினாலும், ரஞ்சி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்றும்,  அவர் ஒரு இந்தியர் என்றும் கூறி சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இறுதியில்  நீண்ட விவாதத்துக்குப் பிறகு ரஞ்சியை இங்கிலாந்து அணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.

1896-ம் ஆண்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட ரஞ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிக்கெட்டில்  இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டங்களில் எப்படி அனல் பறக்குமோ, அதே போலத்தான் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும்போதும் அனல் பறக்கும். யாரிடம் தோற்றாலும் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கக் கூடாது என்பது இங்கிலாந்து ரசிகர்களின் எண்ணமாக இருக்கும். இந்நிலையில் தனது ஜென்ம வைரியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஞ்சியைக் களம் இறக்கியது இங்கிலாந்து.

1896-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாகக் களம் இறங்கினார் ரஞ்சி. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேநேரத்தில் இந்த ஒரு சாதனையுடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில்   62 ரன்களைக் குவித்த ரஞ்சி, 2-வது இன்னிங்ஸில் 154 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன்மூலம், அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ரஞ்சியை இங்கிலாந்து தேர்வுக் குழுவுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ரஞ்சியும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரன் மழை பொழிந்தார்.  இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக உருவெடுத்தார்.  அப்போதுதான் கிரிக்கெட் விளையாட்டின் அரிச்சுவடிகளைப் படித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டனர்.
கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில்  நவாநகரின் ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்கவேண்டிய சூழல் வந்தது. இதைத்தொடர்ந்து 1904-ம் ஆண்டில் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துவிட்டு இந்தியா திரும்பினார் ரஞ்சி.

1907-ம் ஆண்டில் நவாநகரின் அரசராகப் பொறுப்பேற்ற ரஞ்சி, மக்கள் பணியில் ஈடுபட்டதுடன் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார். 1933-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி அவர் காலமானார். அவர் மறைந்தாலும் கிரிக்கெட் உலகில் அவர் படைத்த சாதனைகள் இன்னும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்கை போற்றும் வகையில் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடராக இது இன்றும் விளங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in