நாவல் போன்ற கவிதைகள்

நாவல் போன்ற கவிதைகள்

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

அழகியல், படிமம், உருவகம் என்ற கவிதைக்கான பொது விதிகளை உடைத்து, தான் பார்த்த மனிதர்களின் வாழ்வியலை தனக்கு நேர்ந்த அனுபவங்களை அச்சு அசல் எழுத்தில் வழங்கியிருக்கிறார் ஜெயாபுதீன். முதல் தொகுப்பு என்பதே தெரியாதபடி சொல்லாட்சியில் பல ஆச்சரியங்களை போகிறபோக்கில் அள்ளித் தந்து போகிறார்.

தயிர் வியாபாரத்துக்கும் பழ வியாபாரத்துக்கும் இடையில் வாழ்ந்து போகும் அத்தையின் வாழ்வில்தான் எவ்வளவு விநோத அனுபவங்கள். அதேபோல்  ‘அத்தை’ என்ற தலைப்பில் வந்திருக்கும் கவிதையில் வரும் அத்தனை அத்தைகளும் ஒவ்வொரு நாவல்.  ‘பாலு வாத்தியார்’ கவிதையில் வரும் // கையிலிருக்கும் குச்சியை மேசை மீது வைத்துவிட்டு// திருகுவதற்கு மாணவனின் காதைத் தேடுவார்// காது கிடைப்பதற்குள் அழுதுவிட்டால் // அடிக்காமல் விட்டுவிடுவார்// அப்புராணி வாத்தியார்... என்ற விளக்கத்தில் நம் பால்யத்திலும் இப்படி ஒரு ஆசிரியரைச் சந்தித்திருப்பது ஞாபகத்துக்கு வந்து போகிறது. பக்கவாதத்தால் பாதித்த  ‘பாயம்மா’ ஒவ்வொரு முறை எடுக்கும் தற்கொலை முயற்சியும் தோல்வியடைதலும் அது சமயம் கிடைக்கும் ஆயுசு கெட்டி ஆறுதல் வார்த்தைகள் பாயம்மாவுக்கு எத்தனை வலி தந்திருக்கும் என்பதை பாயம்மா இடத்திலிருந்து உணர முடிகிறது. எல்லோரையும் ஏமாத்திட்டு போயிட்டா ஒரு நாளு என்ற வரி தரும் அதிர்வும் சரி // சாவுக்குத் துணிஞ்சா போதுமா// வர வேண்டாமா சாவு..?// என்ற அங்கலாய்ப்பும் பெரும் வாதையைத் தருகிறது.

‘வீடு’ கவிதையை சிறுகதை, நாவல், சினிமா என்று எதிலும் பொருத்திப் பார்க்கலாம். அந்த அளவுக்கு விவரணைகள் பேரனுபவத்தைத் தருகிறது.  ‘பிரதிகள்’ கவிதையில் வரும் // தாத்தாக்களின் பெரிய சப்பாத்துகளில்// கால்களை நுழைத்து// காலத்தை // இழுத்துக்கொண்டு நடக்கிறார்கள் பேரன்கள் // வரி உண்டாக்கும் இமேஜ் இன்பம் வேறு எதிலும் கிடைத்துவிடுமா என்ன? // வெளுத்த மயிரடர்ந்த கிழம் தாடைகளை // இளம் சிவப்பு உதடுகளால்// ஆசிர்வதிக்கிறார்கள்// என்ற வரியும் அலாதி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in