உலகம் சுற்றும் சினிமா - 4: சமூக விரோதிகளை வதம்செய்த சாமானியன்!

டெத் விஷ் (1974)
உலகம் சுற்றும் சினிமா - 4: சமூக விரோதிகளை வதம்செய்த சாமானியன்!

‘ராபின்ஹூட்’ கதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் உத்தமத் திருடன் பற்றிய கதை அது. அந்த பாணியில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில், ‘விஜிலான்ட்டி’ வகைப் படங்களும் முக்கியமானவை. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சமூக விரோதிகளை வதம் செய்யும் நாயகர்களைப் பற்றிய படங்களே ‘விஜிலான்ட்டி’ வகைப் படங்கள். நம்மூரில், ‘நான் சிகப்பு மனிதன்’ தொடங்கி,  ‘இந்தியன்’, ‘அந்நியன்’ வரை பல படங்கள் இந்த வகைமையில் அடங்கும். இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்த படம் ‘டெத் விஷ்’ (Death Wish).

பொதுவாகவே, பழிவாங்கும் கதைகள் பெரும்பாலும், கதாநாயகன் தனக்கோ தனக்கு நெருக்கமானவர்களுக்கோ அநீதி இழைத்தவரை மட்டுமே பழிவாங்கும் வகையில் அமைந்திருக்கும். ‘டெத் விஷ்' படத்தின் நாயகனோ தனக்கு ஏற்பட்ட அநீதியின் மூல காரணம், தான் வாழும் சமூகத்தில் நிலவும் ஒழுங்கீனமே என்று முடிவுக்கு வருகிறான். சமூகத்தைத் திருத்தப் புறப்படுகிறான். அதற்குத் துணையாக அவன் தேர்ந்தெடுப்பது ஒரு துப்பாக்கியை. 1972-ல், பிரையான் கேர்ஃபீல்டு எனும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

பிரிட்டன் திரையுலகிலும், பின் ஹாலிவுட்டிலும் பின்னியெடுத்த மைக்கேல் வின்னர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ‘சேட்டோஸ் லேண்ட்' (1972), ‘தி மெக்கானிக்’ (1972), ‘தி சென்டினல்' (1977) போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்றவர் வின்னர்.
‘தி மெக்னிஃபீஷியன்ட் செவன்’ (1960), ‘தி கிரேட் எஸ்கேப்’ (1963). ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் தி வெஸ்ட்’ (1968) போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்த சார்லஸ் பிரான்ஸன்தான் இந்தப் படத்தின் நாயகன். வின்னரும் பிரான்ஸனும் ஏற்கெனவே சில படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அடித்த மெகா சிக்ஸர்தான் ‘டெத் விஷ்’!

கதை என்ன?

நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளரான பால் கெர்ஸி (சார்லஸ் பிரான்ஸன்) அமைதியான மனிதர். ஒரு நாள்  சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்பும் அவரது மனைவி ஜோனாவையும், திருமணமான மகள் கேரோலையும் பின்தொடரும் சமூக விரோதிகள், வீட்டுக்குள் புகுந்து திருட முயல்வார்கள். பின்னர், கேரோலைப் பாலியல் பலாத்காரம் செய்து, ஜோனாவை அடித்தே கொன்றுவிடுவார்கள். கேரோல் அதிர்ச்சியில் சுயநினைவிழந்து படுத்த படுக்கையாகிவிடுவாள்.

உடைந்துபோகும் கெர்ஸி, தன் மருமகனின் கவனிப்பில் கேரோலை ஒப்படைத்துவிட்டு, தனியே வாழ ஆரம்பிப்பார். ரவுடிகளால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக தனியே வெளியில் செல்லவே அவருக்குப் பயம் வந்துவிடும். காலில் போடும் சாக்ஸில் நாணயங்களைப் போட்டு முடிந்து, அதை ஒரு ஆயுதமாக்கிக்கொண்டு வெளியே செல்ல ஆரம்பிப்பார். ஓர் இரவில், ஒரு ரவுடி அவரிடம் பணம் பறிக்க முயலும்போது அந்த ஆயுதத்தைக் கொண்டு அவனைத் தாக்கிவிடுவார். எனினும், பயந்து போய் வீட்டுக்கு வந்து ஒளிந்துகொள்வார்.  இந்நிலையில், பண்ணை அதிபரான ஏம்ஸ் ஜேட்டோவின் அறிமுகம் அவருக்குக் கிடைக்கும். துப்பாக்கி  ‘கிளப்’பில் கெர்ஸியின் குறிபார்த்து சுடும் திறமையைக் கண்டு வியக்கும் ஏம்ஸ், ஒரு ரிவால்வரை அவருக்குப் பரிசளிப்பார்.
ஒருநாள் ஒரு வழிப்பறிக் கொள்ளையனால் துப்பாக்கி முனையில் மடக்கப்படுவார் கெர்ஸி. சிறிய யோசனைக்குப் பின் அவனைச் சுட்டுவிட்டு வழக்கம்போல் பயந்து ஓடிவிடுவார். பின்னர், கொலையின் மீது இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். சமூக விரோதிகளை ஒழிப்பது தன் கடமை என்று கருதத் தொடங்குவார். இரவு வதங்கள் இனிதே தொடங்கும்.

முதல் கொலை செய்த பின்னர் பயந்து நடுங்கும் கெர்ஸி அடுத்தடுத்த கொலைகளை அலட்சியமாகச் செய்துமுடிப்பார். இந்தக் காட்சிகளில் சார்லஸ் பிரான்ஸன் அதகளம் செய்திருப்பார்.

ஊரில் உள்ள சமூக விரோதிகளுக்கெல்லாம் தோட்டாக்களைப் பரிசாக அளித்துக்கொண்டிருக்கும் கெர்ஸியால் குற்றங்கள் குறைய ஆரம்பிக்கும். மக்களும் ஊடகமும் அவருக்கு ‘விஜிலான்ட்டி' (கண்காணிப்பாளர்) என்று செல்லப் பெயர் வைத்து அழைக்க ஆரம்பிப்பார்கள்.  ‘யார் இந்த விஜிலான்ட்டி?’ என்று நியூயார்க் போலீஸ் விசாரணையில் இறங்கும். கடைசியில் கெர்ஸி போலீஸில் பிடிபட்டாரா என்பதே மீதிக்கதை.

இந்தப் படம் வந்த புதிதில்,  ‘நியூயார்க் நகரம், ரவுடிகளால் நிரம்பியுள்ளது போல் படத்தில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது’, ‘துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது’ என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரிஜினல் நாவலை எழுதிய கேர்ஃபீல்டுக்கே படம் பிடிக்கவில்லை. ஆனாலும், ஒரு சாமானிய மனிதன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்து பழிதீர்க்கும் கதையை, நம்பகத்தன்மை கொண்ட திரைக்கதை மூலம் விறுவிறுப்பாகச் சொன்ன ‘டெத் விஷ்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்தப் படம் வெளியாகி எட்டு வருடங்கள் கழித்து 1982-ல், இதன் இரண்டாம் பாகமான, ‘டெத் விஷ்- 2’ வெளியாகி அதுவும் ஹிட் அடித்தது. 1985-ல், மூன்றாம் பாகம் வெளியானது. மூன்றாம் பாகம் வரை வின்னர் – பிரான்ஸன் கூட்டணி தொடர்ந்தது. அதற்குப் பிறகு மேலும் இரண்டு பாகங்கள் வெளியாகின. அதில் பிரான்ஸன் இருந்தார். வின்னர் இல்லை. 2018-ல்,  ‘டெத் விஷ்' படத்தின் முதல் பாகம் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த முறை துப்பாக்கி ஏந்தியவர் ஆக்‌ஷனுக்குப் பேர் போன ப்ரூஸ் வில்லீஸ். ஆனாலும், படத்தில் பழைய ‘பெப்’ இல்லையே என்று ரசிகர்களும் விமர்சகர்களும் புறக்கணித்துவிட்டனர்.

இந்த வாரம், சமூகத்தைத் திருத்த ஒருவர் தனி ஆளாகக் கிளம்பிய கதையைப் பார்த்தோம். அடுத்த வாரம் ஒரு சமூகமே காற்றோடு காற்றாகக் கலந்த கதையைப் பற்றி பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in