அதிபர் படுகொலை... அடங்காத அதிருப்தி அலை!- ஹெய்ட்டியின் பரிதாபக் கதை

அதிபர் படுகொலை... அடங்காத அதிருப்தி அலை!- ஹெய்ட்டியின் பரிதாபக் கதை

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

‘பொருளாதாரச் சீரழிவின் மத்தியில் பெட்ரோலிய விலையைத் தாறுமாறாய் உயர்த்தியது, சர்வதேச சமூகத்தின் கோவிட் உதவிகளை நிராகரித்தது, ஊழலை மறைக்க உள்நாட்டு மோதல்களை ஊக்குவித்தது, இறுதியாய் அரசியல் சட்டத்தையே திருத்த முயன்றது...’ - இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், ஹெய்ட்டி தேசத்தின் அதிபர் நாற்காலியில் பிடிவாதமாய் வீற்றிருந்த ஜொவினெல் மொய்ஸ் அண்மையில் படுகொலை மூலம் அகற்றப்பட்டிருக்கிறார். பெருந்தொற்றுப் பரவல், எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார நசிவு எனத் தடுமாறிக்கொண்டிருக்கும் பல நாடுகளையும், பல்வேறு வகைகளில் இந்தச் சம்பவம் உலுக்கிப்போட்டிருக்கிறது.

நூற்றாண்டுகளின் பேரிடர்கள்

கரீபியன் கடல் தேசங்களில் ஒன்றான ஹெய்ட்டி குடியரசின் அதிபராகக் கடந்த 5 ஆண்டுகளாகப் பதவி வகித்தவர் ஜொவினெல் மொய்ஸ். தலைநகர் போர்ட் அயு பிரின்ஸில் உள்ள அதிபரின் வீட்டுக்குள் ஜூன் 7 நள்ளிரவில் புகுந்த கூலிப்படையினர் மொய்ஸை சராமாரியாய் சுட்டுக்கொன்றனர். படுகாயங்களுடன் தப்பிய அவரது மனைவி மார்டின் மொய்ஸ், “இது உள்நாட்டு அரசியல் எதிரிகளின் சதி” என்றார். தாக்குதலில் 26 கொலம்பிய முன்னாள் ராணுவத்தினரை உள்ளடக்கிய தொழில்முறை கொலைப் படை ஈடுபட்டதும், அவர்களுக்கு மூளையாக ஹெய்ட்டியின் 3 முக்கியப் புள்ளிகள் செயல்பட்டதும் முதல் சுற்று விசாரணையில் தெரியவந்திருக்கின்றன.

‘வெளிநாட்டு கூலிப்படை வைத்து நாட்டின் அதிபரைக் கொல்லும் அளவுக்கு அங்கே அப்படி என்ன மோசம் போனது?’ என்ற கேள்வியின் பின்னே, மண்ணின் மக்களை வதைத்துவரும் பல நூற்றாண்டு விரக்தி புதைந்திருக்கிறது.

கறுப்பர் சுதந்திரத்தின் முதல் வித்து 

கரீபியன் கடல் தீவுகளில் க்யூபாவுக்கு அடுத்து அளவில் பெரிதான ஹிஸ்பானியோலா தீவை, டொமினிக் குடியரசுடன் பகிர்ந்துகொள்ளும் தேசமே இன்றைய ஹெய்ட்டி. அக்காலத்தில் கறுப்பின ஆதிகுடிகள் நிறைந்திருந்த இப்பகுதி, கொலம்பஸ் கடற்பயணம் வாயிலாகவே ஐரோப்பியர் பார்வைக்குக் கிடைத்தது. ஸ்பெயினும், பிரெஞ்சும் அடுத்தடுத்து இங்கே காலனியாதிக்கத்தை நிறுவியதில், நிறவெறி அடிமைத்தனம் தலைவிரித்தாடியது.

பின்னர் பிரெஞ்சு புரட்சி உருவான போது, அதன் பாதிப்பில் காலனி அடிமைத்தனத்துக்கு எதிரான புரட்சி ஹெய்ட்டியில் தனியாக வெடித்தது. பிரெஞ்சு ராணுவத்தில் இருந்த ஹெய்ட்டி வீரர்கள் ஒன்று திரண்டு தாய் நாட்டுக்கான விடுதலை யில் கைகோத்தனர். நெப்போலியன் படைகளுடனான மோதல்களில் 1804-ல்,கரீபியனில் முதல் சுதந்திரக் காற்றை சுவாசித்த தேசமாகியது ஹெய்ட்டி. அந்தவகையில் உலகின் முதல் கறுப்பின குடியரசு என்றபெருமையும் ஹெய்ட்டிக்கு உண்டு. சுதந்திர தேசத்தின் தலைவர்கள் அனைவருமே முன்னாள் அடிமைகள்!

கருவறுத்த கடன்

சுதந்திர ஹெய்ட்டியில் மன்னராட்சி தொடங்கியபோது அந்நாட்டின் கறுப்பு வரலாறு தொடங்கியது. டொமினிக் குடியரசு தனியாகப் பிரிந்தது, ஸ்திரமில்லாத அரசுகளின் ஊழல் நிர்வாகம், சர்வதேச சமூகத்தின் புறக்கணிப்பு ஆகியவற்றுடன் பெரும் கடன் விவகாரம் ஒன்றும் ஹெய்ட்டியைப் பெரிதாய் முடக்கிப்போட்டது. ஹெய்ட்டியிலிருந்த பிரெஞ்சு தேசத்தின் சொத்துகளைக் கையளிப்பதில் ஹெய்ட்டி-பிரெஞ்சு தளபதிகள் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

பொறுமையிழந்த பிரெஞ்சு போர்க் கப்பல்கள் ஹெய்ட்டியை முற்றுகையிட, 15 கோடி பிராங்க் மதிப்பிலான கடன் தொகையைத் தவணைகளில் செலுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஹெய்ட்டி. இந்தப் பெரும் கடன் சுமையே ஹெய்ட்டியின் பொருளாதாரச் சீரழிவின் தொடக்கப் புள்ளியானது. கடன் தவணை களுக்காக அவ்வப்போது மேற்கத்திய வங்கிகளிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியதில் நாட்டின் பொருளாதாரம் மேலும் திணறியது. கடன் தேனில் ஆட்சி யாளர்கள் தனியாக ருசி கண்டனர். கி.பி.1900 பிறந்தபோது நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 80 சதவீதம் கடனுக்கே போனது.

அமெரிக்காவின் தலையீடு

விடுதலைக்கு முன்பு வரை அப்போதைய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட தேசங்களில், விவசாய உற்பத்தியால் உலகின் செழிப்பான தேசமாக பெயர் பெற்றிருந்தது ஹெய்ட்டி. சுதந்திரம் கிடைத்த வேகத்தில் பல தவறுகளைச் செய்து பெயர் கெட்டது. கறுப்பின மக்களுக்குத் தோள் கொடுத்தோர் உட்பட ஆயிரக்கணக்கான வெள்ளையின மக்கள் குடும்பத்தோடு கொல்லப்பட்டனர். இதனால் சர்வதேச சமூகத்தில் அவப்பெயர் சேர்ந்ததுடன், அருகமை தேசங்கள் ஹெய்ட்டியை அங்கீகரிக்க மறுத்தன.

ஹெய்ட்டிக்குக் கடன் வழங்கியதிலும், அதிக முதலீடு செய்ததிலும் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஜெர்மனி - அமெரிக்கா இடையே உரசல் ஏற்பட்டது. ஜெர்மனியின் இடையீட்டை ரசிக்காத அமெரிக்கா, ஹெய்ட்டி கஜானாவைத் துடைத்தெடுத்து நியூயார்க் பாதுகாப்புப் பெட்டகத்தில் பராமரித்தது. அப்போது (1915) முதல், சுமார் இருபதாண்டுகள் அமெரிக்க அரவணைப்பிலேயே ஹெய்ட்டி சற்று தழைத்தது. அதன் பின்னரும் ஆட்சி அதிகாரங்களில் தொடர்ந்த அமெரிக்காவின் தலையீட்டில், ஹெய்ட்டியில் கம்யூனிஸம் பரவாது தடுப்பது, இன்னொரு க்யூபா உருவாகாதிருப்பது என தனி நோக்கங்கள் மறைந்திருந்தன.

இந்த வரிசையில் 1994-லும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் ஹெய்ட்டியில் நுழைந்துஆட்சி அதிகாரத்தைச் சீரமைத்தன. ஆபத்து காலங்கள் தோறும் அபயமளிக்கும் அமெரிக்காவைத் தற்போதைய அதிபர் படுகொலையான இக்கட்டிலும் ஹெய்ட்டி கோரியது. ஆனால், எஃப்பிஐ விசாரணை உதவிக்கு அப்பால் அமெரிக்கா இன்னமும் பிடிகொடுக்கவில்லை.

ஊழலை மறைக்க உள்நாட்டு மோதல்

ஹெய்ட்டியின் மன்னராட்சி காலம் தொட்டு ஜனநாயகத் தின் பேரில் ஹெய்ட்டியை ஆண்டவர்களில் பலரும் ஊழலில்
ஊறியவர்கள். எதிர்க்கட்சிகள் மற்றும் ராணுவத் தலையிடலால் ஆட்சியைக் கவிழ்க்கும் புரட்சிகள், கிளர்ச்சிகள் அங்கே சாதாரணம். சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்படி 32 புரட்சிகள் தேசத்தைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. இதுதவிர ஆட்சியாளர்கள் ஆசிர்வாதத்திலான ‘கேங் வார்’ மோதல்களும், ஆட்கடத்தல் பணம் பறிப்புகளும் மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருந்தன. பணவீக்கம் வானத்துக்கு எகிறியதில், எரிபொருள், உணவு தட்டுப்பாடு அதிகரித்தது.

ஹெய்ட்டியின் 1.1கோடி மக்கள் தொகையில் 60 சதவீதத் தினர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளார்கள். இதில் 2010 நில நடுக்கம், 2016 சூறாவளி என புத்தாயிரத்தின் இயற்கைப் பேரிடர்கள் நாட்டை மேலும் உருக்குலைத்தன.

இந்தச் சூழலில் ஏராளமான வாக்குறுதிகளோடு ஆட்சியைப் பிடித்த மொய்ஸ், ஜனநாயகத்தின் பெயரால் எதேச்சதிகாரத்தை ஏவி மக்களுக்கு ஏமாற்றம் தந்தார். தனது ஊழல்களை மறைக்க உள்நாட்டு ஆயுதக் குழு மோதல்களை உசுப்பிவிட்டு, மக்களைத் திசை திருப்பினார். இந்த பிப்ரவரியோடு பதவியிறங்க வேண்டிய மொய்ஸ், தாமதமாகப் பதவி ஏற்றதைச் சுட்டிக்காட்டி மேலும் ஓராண்டுக்கு நாற்காலியை விட்டுத்தர மாட்டேன் என்று அடம் பிடித்தார். உச்சமாய் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவும் அவர் முன்வந்தது எதிர்கட்சிகளையும், கிளர்ச்சியாளர்களையும் கொந்தளிக்கச் செய்தது.

பெருந்தொற்றும் பெட்ரோல் விலை உயர்வும்

எரியும் நெருப்பில் எண்ணெய்யாக 51 சதவீத்துக்கு உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையில் நாடே பற்றிக் கொண்டது. பெருந்தொற்றுப் பரவலை முன்னிட்டு செப்டம்பரில் திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை ஒத்திவைக்கவும் அதிபர் முடிவு செய்தார். மறுபுறம், ‘எங்கள் மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம்’ என்று சொல்லி, உலக சுகாதார நிறுவனம் வழங்க முன்வந்த ஏழரை லட்சம் தடுப்பூசிகளை நிராகரித்தார். இப்படி அதிருப்தியின் உச்சத்திலேயே அதிபர் மொய்ஸ் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.

கறுப்பின அடிமையிலிருந்து உலகின் முதல் விடுதலையை முரசு கொட்டி அறைந்த ஹெய்ட்டி, சுதந்திர மண்ணில் சொந்த மக்களை அடிமைப்படுத்தியதற்கு விலை கொடுத்து வருகிறது. உலக நாடுகளுக்குப் பாடமும் தந்திருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in