ரஜினி சரிதம் 25: ஆறிலிருந்து எழுபது வரை- எம்.ஜி.ஆரிடம் விருதுபெற்ற ரஜினி

ரஜினி சரிதம் 25: ஆறிலிருந்து எழுபது வரை- எம்.ஜி.ஆரிடம் விருதுபெற்ற ரஜினி

பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’ ஆகிய படங்கள் ரஜினியை ஸ்டைல் வில்லனாக எடுத்த எடுப்பிலேயே முன்னிறுத்திய படங்கள். ஆனால், நான்காவதாக அவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்தார் பஞ்சு அருணாசலம். ரஜினி மீது நேர்மறை எண்ணைத்தை உருவாக்கி அவரை ஒருபடி மேலே உயர்த்திய அந்தப் படம் ‘கவிக்குயில்’. இந்தப் படத்தைப் பார்க்கும் யாருக்கும் சேரனின் ‘பாரதி கண்ணம்மா’ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. குல வழக்கம் என்கிற பெயரால் பெண்டாள நினைக்கும் கிராமத்து நிலக்கிழாரிடமிருந்து தங்கையை மீட்கும் ஒரு அண்ணனின் கதை.

ஸ்ரீதேவிக்கு அண்ணனாக, பண்ணையார் வீட்டு வண்டிக்காரன் முருகனாக, பண்ணையார் மகளின் காதலை அவளது மனம் புண்படாத வகையில் தவிர்க்கும் கண்ணியத்துடன் கோபக்கார கிராமத்து இளைஞனாக கவுரவமான கதாபாத்திரத்தை ரஜினிக்கு எழுதியிருந்தார் கதாசிரியர் பஞ்சு அருணாசலம். அதன் பின்னர் ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘காயத்ரி’ என்று ரஜினிக்கு மாறுபட்ட கதாபாத்திரங்களை எழுதிய அவர்தான், ரஜினியை முழுமையான கதாநாயகனாக வைத்து ‘ப்ரியா’ என்கிற பிரம்மாண்டமான படத்தை எழுதி, சிங்கப்பூரில் படம்பிடித்தார்.

அப்போது, “சிங்கப்பூரில்தான் அதிக நாள் படப்பிடிப்பு, லொக்கேஷன் பார்ப்பதற்காக எஸ்பிஎம்மும் ஒளிப்பதிவாளர் பாபுவும் சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள்” என்று பஞ்சு அருணாசலம் சொன்னதைக் கேட்டு துள்ளிக் குதித்தார் ரஜினி.

“ஏனோ தெரியல சார்... சிங்கப்பூரை அதோட அசுர வளர்ச்சிக்காக நேசிக்கிறதா... சீனர்கள், மலாய்ஸ், தமிழர்கள்... இன்னும் பல சமூக மக்கள் இங்க இவ்வளவு அன்போட ஒற்றுமையா வாழ்றாங்களே அதுக்காக நேசிக்கிறதான்னு தீர்மானிக்க முடியல” என்று ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பிடிப்புக்காகச் சென்றிருந்தபோது பார்த்து வியந்த சிங்கப்பூரை யும், அங்கே தன்னைக் கவர்ந்த இடங்களையும் சொல்லி வியந்தார் ரஜினி.

பாடலின் சூழ்நிலை மாறியது

சிங்கப்பூர் குறித்து ரஜினி இவ்வளவு நெகிழ்வதையும் மகிழ்வதையும் கண்ட பஞ்சு அருணாசலம், காதும் காதும் வைத்ததுபோல் இளையராஜவைச் சந்தித்தார். அதுவரை கிராமத்து கீதங்கள்தான் தன்னுடைய அடையாளம் என்றிருந்ததை ப்ரியா படத்தில் அப்படியே மாற்றிக்காட்டினார் ராஜா. அவரிடம், “ ப்ரியா படத்தில் இண்டோ - சீனப்பெண்ணும் ரஜினியும் நடிக்கவிருக்கும் டூயட் பாடலின் சூழ்நிலையை மாற்ற வேண்டும்” என்ற பஞ்சு அருணாசலம், “தனது காதலியுடன் கதாநாயகன் சிங்கப்பூரைச் சுற்றிவந்து அதன் அழகை ரசித்துப் புகழ்ந்து அந்தப் பாடலைப் பாடவேண்டும்” என்று கேட்டார். அதுதான் ‘அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே...’ பாடல். ‘ப்ரியா’வைக் கொண்டாடிய சிங்கப்பூர் மக்கள், அந்தப் பாடலை எழுதியதற்காக பஞ்சு
அருணாசலத்தை அழைத்து விருதும் கொடுத்தார்கள். சிங்கப்பூர் ரசிகர்கள் பலர் ரஜினிக்கு அங்கே ரசிகர் மன்றம் தொடங்கி இன்னும் அதிகமாக அவரை நேசிக்கத் தொடங்கினார்கள்.

நட்சத்திரமாக்கியவர்

பாலசந்தரின் பெருமைமிகு அறிமுகமாக ரஜினி இருந்தாலும், தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலேயே தன்னை நட்சத்திர
மாக்கியவர் பஞ்சு அருணாசலம் என்கிற புரிதல் இருந்ததால், பஞ்சு மீது ரஜினிக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. அதேபோல், ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த எஸ்பிஎம் - பஞ்சு அருணாசலம் இடையிலான நட்பையும் பெரிதும் மதிப்பவர். அப்படிப்பட்டவர் தன்னை மனதில் வைத்து எழுதிய கதை என்றபோது எந்த மறுப்பும் சொல்லவில்லை. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ திரைக்கதையின் சுருக்கத்தைக் கேட்ட ரஜினி, “டூ எமோஷனல்...” என்று பாராட்டிவிட்டு முழுக்கதையும் சொல்லும்படி கேட்டார். 3 மணிநேரக் கதையை 45 நிமிடங்களில் சொல்லி முடித்தார் பஞ்சு அருணாசலம்.

கதையில், தம்பிகள், தங்கை என எல்லோரும் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றபிறகு, வறுமை யின் உச்சத்தில் தன்னுடைய குழந்தைக்கு பால் பவுடர் வாங்கக்கூட முடியாத சூழ்நிலை. காலியான பால் பவுடர் டப்பாவில் தண்ணீரை ஊற்றி கலக்கி அதைக் குழந்தைக்கு ரஜினியின் மனைவி கொடுக்க, அதன் சுவை பிடிக்காமல், அதைக் குடிக்க முடியாமல் குழந்தை அழும் காட்சியை பஞ்சு அருணாசலம் உருக்கமான குரலில் சொல்லிக்கொண்டு வந்தார். அப்போது, ரஜினியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொள பொளவென உடைந்து அழுதுவிட்டார்.

“ஃப்யூ மினிட்ஸ் சார்...” என்று சொல்லிவிட்டுப்போய் முகத்தைக் கழுவிவிட்டுவந்து திரும்பவும் வந்து உட்கார்ந்து மீதிக் கதையையும் கேட்டு முடித்துவிட்டுச் சொன்னார். “என்னோட வாழ்க்கையில் இது முக்கியமான படமா இருக்கப்போகுதுன்னு தெரியுது. என்மேல நீங்க காட்டுற அக்கறைக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல. ப்ரொசீட் பண்ணுங்க சார்.”

படப்பிடிப்பில் ரஜினியின் கேள்வி

ஏவிஎம் ஸ்டுடியோவில் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படப்பிடிப்பு தொடங்கியது. விபத்தில் குடும்பத் தலைவனை இழந்துவிடும் ஒரு சாமானியக் குடும்பத்தின் மூத்த மகனாக நடித்தார் ரஜினி. இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என குடும்பத்தைக் காப்பாற்ற 12 வயதில் குடும்பச் சுமையை ஏற்றுக்கொண்டு அனைவரையும் கரைசேர்க்கும் சுமைதாங்கி வேடம். பேப்பர் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி, வாழ்க்கை கற்றுக்கொடுத்த அனுபவங்கள், ஒரு கட்டதில் தேசம் புகழும் எழுத்தாளராக ரஜினியை உருமாற்றுகின்றன. எழுத்தாளர் சந்தானமாக அவர் வாழ்க்கையின் உயர்ந்த அந்தஸ்தைத் தொடும்போது, உறவுகள் ஓடிவந்து உரிமை கொண்டாடும்போது அவர்களுக்கு மவுனத்தைப் பரிசாக அளித்து புன்னகையுடன் மரணத்தை தழுவும் முதிர்ச்சியின் உச்சம் கொண்ட வேடம். இந்தப் படத்தில், ரஜினியை எழுதச் சொல்லும் ஆத்ம நண்பராக சோ நடித்திருந்தார். இப்படம் ரஜினி - சோ இடையிலான நட்புக்கு பாலமாக அமைந்துபோனது.

கல்லூரியில் படிக்கும் தம்பிகளும் தங்கையும் அண்ணனை ஏமாற்றி பணம் வாங்கும் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார் எஸ்பி.முத்துராமன். ரஜினிக்குத் தம்பியாக நடித்த எல்ஐசி நரசிம்மன், அவரை எதிர்த்துப் பேசித் தரக்குறைவாக நடத்துவதுபோன்ற ஒரு காட்சியைப் படமாக்கினார் எஸ்பிஎம். அப்போது, ரஜினிக்கு மனதில் ஒரு இடறல். தம்பிகள், தங்கையின் வளர்ச்சியில் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரு அண்ணனை இப்படியெல்லாம் கூட நடத்துவார்களா என்கிற சந்தேகம் அவருக்குள் எழுந்துவிட்டது.

இயக்குநரைப் பார்த்து “இப்படியெல்லாம் நடக்குமா சார்..? லாஜிக் இடிக்குதுன்னு நினைக்கிறேன்?” என்றார். படப்பிடிப்பு அப்படியே நின்று, ஆரோக்கியமான.. நீண்ட விவாதமாக மாறியது. ரஜினியின் மனைவியாக நடித்த படாபட் ஜெயலட்சுமி, “முதல்ல உங்க பிரச்சினையை முடிச்சுட்டு என்னைக் கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு ஓய்வறைக்குப் போய்விட்டார். ஆஹா..! பஞ்சு அருணாசலம் செட்டுக்கு வராமல் இன்று படப்பிடிப்பு நடக்காது போலிருக்கிறதே என்று அலர்ட்டான எஸ்பிஎம், உடனே அவரை செட்டுக்கு அழைத்து வர, புரொடக்‌ஷன் மேனேஜரை அனுப்பினார்.

வாழ்க்கையில் பிரதிபலிப்பு

விரைந்து வந்தார் பஞ்சு அருணாசலம். அவரிடம் ரஜினியின் லாஜிக் சந்தேகத்தைச் சொன்னார் எஸ்பிஎம். ரஜினியிடம் பேசிய பஞ்சு, “இந்தக்கதை நிஜ வாழ்க்கை யின் பிரதிபலிப்பு. ஏன்... எனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை இதில் காட்சிகளாக மாற்றியிருக்கிறேன். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள், சிறு வயதில் குடும்பச் சுமையை ஏற்ற ஒருவருடைய தியாகங்கள் என எல்லாமே நிஜவாழ்க்கையின் அனுபவங்களைப் பிரதியெடுத்து உருவான திரைக்கதை இது. உங்களுக்கு மனம் ஒப்பவில்லை என்றால் முதலில் ஐயாயிரம் அடி படமாக்குவோம். அதை எடிட் செய்து ரஷ் போட்டுப் பார்ப்போம். உங்களுக்குப் பிடித்தால் தொடர்வோம், இல்லாவிட்டால் ட்ராப் செய்துவிடலாம்” என்றார்.

இந்த யோசனை ரஜினிக்குப் பிடித்துப்போய்விட்டது. ஐயாயிரம் அடி ஃபிலிமில் 30 சதவீத படத்தையே முடித்து
விட்டார் எஸ்பிஎம். எடிட்டர் விட்டலிடம் விஷயத்தைச் சொல்லி ரஜினி நிராகரிக்கமுடியாதபடி எடிட் செய்யும்படி சொன்னார் இயக்குநர். ரஷ் பார்த்த ரஜினி, “நீங்க சொன்னதுதான் சரி... எனக்கு தனி மரியாதையை இந்தப் படம் கொண்டுவரும்.. படத்தைத் தொடர்வோம்” என்றார்.

பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதை ஆளுமையும் எஸ்பி.முத்துராமனின் இயக்கமும் வீண்போகவில்லை. முதல் 3 நாட்களுக்கு திரையரங்கில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், நான்காவது நாளிலிருந்து தமிழகம் முழுவது ஹவுஸ்ஃபுல் காட்சிகள். பெண்கள், கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்குப் படையெடுத்தார்கள். ரஜினி, மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை 
‘முள்ளும் மலரும்’ முதலில் சொன்னது என்றால், கதாபாத்திரமாக தன்னைக் கரைத்துக்கொள்ளவும் ரஜினிக்கு தெரியும் என்பதை ‘ஆறிலிருந்து அறுபது வரை’ சொன்னது. சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதை ரஜினிக்கு கொடுத்தார் எம்ஜிஆர்.சிறந்த இயக்கத்துக்கான விருதை எஸ்பிஎம் பெற்றார்.

ரஜினிக்கு விருதுவழங்கி கவுரவித்த எம்ஜிஆர், அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக ரஜினியின் காதுபடவே சிலர் பேசினார்கள். ஆனால், ரஜினி அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ‘எம்ஜிஆர் முதலமைச்சராகி சினிமாவுக்கு விடை கொடுத்து விட்டதால், அவருக்குப் பிறகு தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனம் ரஜினியை வைத்து படமெடுக்கிறது. அதுதான் எம்ஜிஆரின் கோபத்துக்குக் காரணம்’
என்று பிரபல சினிமா பத்திரிகையில் கிசுகிசு ஒன்று வெளிவந்தது. அதை படித்துவிட்டு ரஜினி வாய்விட்டுச் சிரித்தார்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in