சிறகை விரி உலகை அறி 07:  அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஆய்வாளர்

சிறகை விரி உலகை அறி 07:  அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஆய்வாளர்

அறிவியல் ஆராய்ச்சிக்காக, மாணவர் நலனுக்காகத் தம் உயிரைப் பெரிதென எண்ணாது செயல்படுகிறவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களின் பாதம் கடந்த பாதையில் நடப்பதும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களைத் தொடுவதும் அருகில் அமர்ந்து அவர்களுடன் கைகுலுக்குவது போன்றது. நாகசாகியில் அத்தகைய ஒரு மனிதருடன் நான் கைகுலுக்கினேன்!

அணுகுண்டு அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு உலவித் திரிந்தபோது, ‘நாகாய் தகாஷி நினைவு அருங்காட்சி
யகம்’ என் கண்களில் பட்டது. பார்ப்பதற்கு வீடு போலத்தான் இருந்தது. முகப்பு மண்டபத்தின் (Portico) மேற்சுவரில் ஆடம்பரமின்றி பெயர் எழுதப்பட்டிருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்றே தெரியாமல், தயக்கத்துடனேயே நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்ளே சென்றேன். ஒரு பெரிய அறை. அறை முழுவதும் கறுப்பு வெள்ளைப் படங்கள், அவற்றின் கீழே குறிப்புகள். அருகிலேயே காணொலித் திரை. குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன்.

தகாஷி நாகாய்

நாகசாகியில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் மட்சியூ (Matsue) என்னும் ஊரில், 1908 பிப்ரவரி 3-ல் பிறந்தவர் தகாஷி நாகாய். ‘நாகாய்’ என்பது குடும்பப் பெயர். இருபது வயதில் நாகசாகி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த தகாஷி, முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, வலது காதில் கேட்கும் திறனை இழந்தார்.

‘கேட்கும் திறனை இழந்துவிட்டதால் ஸ்டெதாஸ் கோப்பைப் பயன்படுத்த இயலாது. எனவே, மருத்துவ மனையில் உங்களுக்கு வேலை இல்லை. நீங்கள் விரும்பினால், பேராசிரியர் சொட்சுகு (Suetsugu) உடன் இணைந்து கதிரியக்கவியல் துறையில் உதவியாளராக வேலை செய்யுங்கள்’ என நிர்வாகம் பரிந்துரைத்தது.

நம்பிக்கை ஒளியேற்றிய பேராசிரியர்

பேராசிரியர் சொட்சுகு, ஜெர்மனியில் கதிரியக்கவியலில் ஆய்வு முடித்தவர். நாகசாகி மருத்துவக் கல்லூரிக்கு 1932-ல் புதிதாக வந்தவர். கதிரியக்கத் துறை ஒன்று தொடங்க வேண்டும் என்பது அவர் கனவு. ஆனாலும், உலகில் 1895-ல்தான் கதிரியக்க வரலாறு தொடங்கியது என்பதால், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய அளவில் புரிதலோ ஆர்வமோ இல்லை. இதன் மத்தியில், நம்பிக்கையோடு பேராசிரியரைச் சந்தித்தார் தகாஷி.

“கதிரியக்கத் துறையில் ஏற்கெனவே 40 ஆண்டுகள் ஜப்பான் பின்தங்கி உள்ளது. எதிர்காலத்தில் இது மிக முக்கியத் துறையாக வளரும். ஆனால், கதிர்வீச்சைக் கட்டுக்குள் வைக்கும் முறை இன்னும் முழுமையாக வரவில்லை. இதோ பார், இவர் என் பேராசிரியர் மருத்துவர் ஹோல்ஸ்நெட் (Holzknecht). கதிர்வீச்சு ஆராய்ச்சியில், முதலில் அவரின் ஒரு விரல் அகற்றப்பட்டது. பிறகு அடுத்த விரல், கடைசியில் வலது கை முழுவதுமே அகற்றப்பட்டது. ஆனாலும், கதிர்வீச்சிலிருந்து மருத்துவர்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்வது எனும் பெரும்பாலான குறிப்புகளைத் தன் இடது கையாலேயே எழுதி வைத்திருக்கிறார்” என்று தகாஷியிடம் பேராசிரியர் சொன்னார்.

உத்வேகம் பெற்ற தகாஷி, கதிரியக்கச் சிகிச்சைப் பிரிவில் (X-Ray) சேர்ந்தார். மீண்டும் படித்தார். பட்டம் பெற்றார். 1934-ல் கதிரியக்கத் துறையின் துணைப் பேராசிரியரானார். மருத்துவமனையில் சிகிச்சை, கல்லூரியில் கற்பித்தல், கதிரியக்கம் சார்ந்த ஆய்வு என அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார்.

தன்னையே கையளித்தவர்

சீனா மற்றும் ஜப்பான் இடையே போர் நடைபெற்ற போது எண்ணற்றோர் காசநோய்க்கு உள்ளானார்கள். அவர்களுக்காக, தினந்தோறும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாகக் கதிர்வீச்சு நிறைந்த ஆய்வகத்தில் பணியாற்றினார் தகாஷி.

போர்க்காலத்தில் போதுமான எக்ஸ்-ரே படச்சுருள் கிடைக்கவில்லை. நோயாளியின் உடலில் எக்ஸ்-ரே கதிர் செலுத்தி, படச்சுருள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் இன்றி நேரடியாகப் பார்த்துக் கண்டறிந்தார். உலக அளவில் அன்று புற்றுநோய் – கதிரியக்க சிகிச்சையில் சிறந்த 10 வல்லுநர்களில் ஒருவராக உயர்ந்தார் தகாஷி. தொடர்ந்து பல மணி நேரங்கள் செய்த கதிரியக்கப் பணி மற்றும் ஆராய்ச்சியால், 1945 ஜூன் மாதம் எலும்பு மஜ்ஜை ரத்தப் புற்றுநோய்க்கு ஆளானார்.

தன் மனைவியை அழைத்து, 4 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு மூன்று ஆண்டுகளில் தான் இறக்கப் போவதைத் தெரிவித்தார். பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த மனைவி, “உங்கள் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் இந்த வேலையைச் செய்தீர்கள். நிச்சயம் குழந்தைகள் உங்களுக்காக இதைத் தொடர்ந்து செய்வார்கள்” என்றார். தகாஷி மனநிறைவு கொண்டார்.

இருளில் ஒரு மெல்லிய ஒளி

இரண்டு மாதங்களில் எல்லாம் மாறியது. 1945 ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதில், தகாஷியின் மனைவி பலியானார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தகாஷி மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக, ஆய்வுக்குப் பயன்படுத்திய எக்ஸ்-ரே படங்கள், குறிப்புகள், வரைபடங்கள், புள்ளிவிவரங்கள் வீட்டில் இருந்தன. போர் முடிந்த பிறகு அனைத்தையும் சேர்த்து அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்தார். அவை அனைத்தும் வீட்டுடன் சேர்ந்து தீக்கிரையாகின.

இருந்தபோதும், “என் கண் முன்னால் தெரிந்த, ஆய்வுசெய்ய வேண்டிய, முற்றிலும் புதிய நோயைப் பார்த்த பிறகு புதிய நம்பிக்கை பிறந்தது. மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில் வாழும் அறிஞர்கள் எவரும் உலகில் எங்கேயும் இதற்கு முன்னால் இந்த நோயைப் பார்த்ததில்லை. மருத்துவ வரலாற்றில் முதல் நேரடி சாட்சிகளாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இது அணுகுண்டு நோய். இந்தப் புதிய நோயைக் குறித்து நான் ஆய்வுசெய்வேன்” என்றார் தகாஷி.

ஆய்வு செய்யத் தேவையான கருவிகள் அழிந்து போயிருந்தாலும், தலையில் கட்டுப் போட்டபடி தெருக்களில் நடந்து கள ஆய்வு செய்தார். மண்ணில் வாழ்ந்த எறும்பு, மண்புழு போன்ற உயிரினங்களைக் கூர்ந்து கவனித்தார். குண்டு விழுந்த மைய இடத்துக்கு அருகில் ஏழு வாரங்களுக்குப் பிறகு எறும்புகள் பல்வேறு வரிசையில் செல்வதைப் பார்த்தார். மண் புழுக்கள் வளைந்து நெளிந்து செல்வதை மூன்று மாதங்களுக்குப் பிறகு கவனித்தார். இந்தச் சிறிய உயிரினங்கள் உயிர் வாழ்கின்றதென்றால், அவற்றைவிடப் பெரியவனாகிய மனிதனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிந்தார். நம்பிக்கையோடு திரும்பி வந்து வாழ்வைத் தொடர மக்களை அழைத்தார்.

மக்களுக்காக அர்ப்பணம்

அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்காக ‘நமது புத்தக அலமாரி’ என்னும் நூலகத்தை உருவாக்கினார் தகாஷி. போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காகத் தொடர்ந்து பேசினார், எழுதினார். உலகம் முழுவதும் போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரும் ஒரே அமைப்பாகி, உலக அமைதிக்காகப் போராட வேண்டும் என கனவு கண்டார்.

1946 நவம்பருக்குப் பிறகு படுத்த படுக்கையாகி, யோகோடோ என்னும் சிறிய கொட்டகையில் நாட்களைக் கழித்தார் தகாஷி. பரிசோதனைக்காக அவரது ரத்தம் எடுக்கப்பட்டபோது, “கூடுதலாக எடுங்கள். கொஞ்சம் எனது நோய் குறித்த பரிசோதனைக்கும், மீதம் இருப்பதை மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்கும் பயன்படுத்துங்கள்” என்றார். தனக்குக் கிடைத்த விருது பணத்தில் நாகசாகியில் செர்ரி மரங்களை நடச் செய்தார். 1951 மே 1-ல், தனது 43-வது வயதில் தகாஷி மறைந்தார். அவர் உருவாக்கிய ‘நமது புத்தக அலமாரி’ இன்று  ‘நாகாய் தகாஷி நினைவு அருங்காட்சியகம்’ எனும் பெயரில் இயங்குகின்றது.

அறிவுச் சேகரம்

பொறுமையாக வாசித்த பிறகு, காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்புகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றைப் பார்த்தேன். “வேறு பிரதி இருக்கிறதா?” எனக் கேட்டேன். “இல்லை” என்றார்கள். தமிழில் தகாஷி பற்றி எழுத விரும்புகிறேன் எனச் சொன்னதும், ஆவணத்தை நகலெடுத்துக் கொடுத்தார்கள். தகாஷி எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த Leaving my beloved children behind எனும் புத்தகத்தையும் வாங்கினேன். (‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…’ எனும் தலைப்பில் அப்புத்தகத்தை நான் தமிழில் மொழிபெயர்க்க ‘நல்லாயன்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)

குழந்தை உளவியல், குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு இல்லம், தங்கும் விடுதி, வகுப்பறை சித்தாந்தம், யுத்தம், அரசியல் அனைத்தையும் பேசும் தகாஷியின் நினைவுகளுடன் தங்கும் விடுதிக்குப் புறப்பட்டேன்.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in