நிழற்சாலை

நிழற்சாலை

நிழல்

நிழல் என்பது
ஊடுருவ முடியாத
ஒளியின் ஏக்கம்
அல்லது
வெளிப்படைத்தன்மையை
இழந்துவிட்ட ஒளியிடம்
நிழல் நடத்தும்
துக்க விசாரணை

- மு.ஆறுமுகவிக்னேஷ்

***

சந்தேகம்

உயிரையே தந்திருக்கிறது
‘நல்ல மீனா?’
என்கிறான் அவன்.
நான் முகத்தைத்
திருப்பிக்கொள்கிறேன்.

- ந.சிவநேசன்

****

சுற்றாத ராட்டினம்

மீசை முறுக்கிய
கருப்பசாமி கையில்
துருப்பிடித்த அரிவாள்
பொங்கிய பானைகள்
கல்தேடி அலைகிறது
குச்சி ஐஸ் தின்ற
குழந்தைகள் வந்துபோகின்றன
சவாரி இல்லாமல்
குடைராட்டினங்கள்
காலொடிந்து கிடக்கின்றன
திருவிழா இல்லாத
ஊர்களில்.

- ஞா. முனிராஜ்

***

வைராக்கியம்

கூட்டம் போட்ட
சிற்றோடைகள்
தங்களுக்குள்
முடிவெடுத்துக்கொண்டன
இனி ஒருபோதும்
நதியோடு
கலப்பதில்லையென்று...
திட்டம் செயல்படத்
தொடங்கிய சில நாட்களில்
ஓடையாயிருந்தபோது
அள்ளிப் பருகிய அத்தனை பேரும்
தேங்கி நின்றதும்
குட்டையென நினைத்து
கால்நடைகளைக் கழுவியபடியே
துணி வெளுக்கத் தொடங்கியிருந்தார்கள்
நமக்கு இந்நிலையெனில்
நதியின் கதி என்ன என
எட்டிப் பார்த்த ஓடைகள்
ஒரு கணம்
அதிர்ந்து அடங்கின
யாருக்காகவும்
காத்திராமல்
தன் பாதையில்
நகர்ந்துகொண்டேயிருந்தது
நதி.

- இனியவன் காளிதாஸ்

***

பால்வெளி

மடித்துவைத்த நினைவுகளை
பொதுவெளியில்
உதறிவிட்டுச் செல்கிறாய்.
என்னுள் விழுந்தது நெஞ்சில்
காற்றில் விழுந்தது மூச்சில்.
செல் திசையோ
விண்மீன் பேரடை,
வெண்ஒளிர் பட்டை.

- நரேன்

***

தூரதேசத்துக் காதல்

தனித்திருப்பதாக நினைத்து அழாதே
தொலைதூரத்தில் நீ இருந்தாலும்
தினமும்
உன்னைப் பார்த்தபடியே இருக்கிறேன்
உன் நிமித்தமே நான் படுக்கையை
திண்ணைக்கு மாற்றிக்கொண்டேன்
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
சுவரெழுப்ப இனி எவராலும் இயலாது
இரண்டு மலைகளைப்போல
சேர்ந்தும் சேராமலும் அருகருகேயிருக்கவே
நமக்கு விதிக்கப்பட்டுள்ளது
என்னையே நினைத்துருகும் ஆத்மவேதனை
உன் கண்சிமிட்டலில் தெரிகிறது
நானும் ஒரு நட்சத்திரமாக
மாறும் நாள்வரையில்
பொறுத்திரு அன்பே!

- அஜித்

***

விழி நீர்ச் சுவை

பாரம்பரிய விவசாயியொருவர்
நகரப் பூங்கா ஒன்றின்
தோட்டக்காரர் ஆன பின்பு
கண்ணீர் ஊற்றி
வளர்க்கப்படும்
பூச்செடிகளும்
வண்ணமயமாகத்தான்
மலர்கள் தருகின்றன
அவை தரும் வாசனையில்தான்
உறைந்து போய்விட்டது
உவர்ப்பின் சுவை.

- கி.சரஸ்வதி

***

தாய்மை

அம்மாவும் நானும்
சுள்ளி பொறுக்கப் போவோம் காட்டுக்கு...
என் காலுல முள்ளு குத்திட்டா
காட்டையே ரெண்டாக்கிடுவா அம்மா
அன்னைக்கும் அப்படித்தான்
ரெண்டு பேரும் பொறுக்குன சுள்ளிகள
கட்டாகக் கட்டிக்கிட்டு கொண்டுவந்து
வீட்டுல எறக்கிப்போட
அம்மா கொண்டுவந்த கட்டுல இருந்து
நெளிஞ்சு ஓடுச்சு ஒரு கட்டுவிரியன்
கொஞ்ச நேரம் ஆடாம அசையாம நின்ன
அம்மா சொன்னா
‘பாம்பு என் கட்டுல ஏறுச்சு
நல்ல வேளை
என் புள்ள கட்டுல ஏறல!’
அம்மான்னா யாருன்னு
அன்னைக்குத் தெரிஞ்சது
எனக்கு!

- யாழ் ஆதன்

***

கடக்க முடியாத மவுனம்

பழைய பேருந்து நிலையம்
கழிப்பறையைவிட்டு
மூக்கைப் பிடித்துக்கொண்டு
வெளியே வருகிறேன்
வெற்றிலை போட்டபடி
மவுனமாய்
உள்ளே நுழைகிறார்
துப்புரவுப் பணியாளர்
கழிப்பறையைக் கடந்து
வெகுதூரம் வந்த பின்னும்
கூடவே பேசிக்கொண்டு வருகிறது
அந்தச் சிவந்த மவுனம்.

- அய்யாறு ச.புகழேந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in