கரோனா மூன்றாவது அலையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம்!

கரோனா மூன்றாவது அலையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம்!

கரோனா மூன்றாவது அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் தொடங்கி, மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் வரை அனைவரும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் அனைவரும் பொதுமுடக்கத் தளர்வுகளைச் சலுகையாகக் கருதாமல் முன்பைவிடவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம். மூன்றாவது அலை விரைவில் ஏற்படலாம் என இந்திய மருத்துவ சங்கம், கான்பூர் ஐஐடி போன்றவை எச்சரித்திருக்கின்றன. இதுபோன்ற தருணத்தில் ஆபத்தை உணராமல், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் பெருமளவில் கூட்டம் கூடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் எனப் பல்வேறு இடங்களில் மக்கள் நெருக்கியடிக்கின்றனர்.

மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கைகளை, வானிலை அறிக்கைகளைப் போல எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மத்திய சுகாதாரத் துறையும் சற்றுக் கடுமையாகவே சுட்டிக்காட்டியிருக்கிறது. பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக உள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் எச்சரித்திருக்கிறார். ஏற்கெனவே, இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கை உணர்வின்மையால் நாம் அனுபவித்த இழப்புகள் பாரதூரமானவை. அதை உணர்ந்ததால்தான் அரசு, தனியார் மருத்துவமனைகள் மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன. இந்நிலையில், இவை அனைத்துமே அரசுகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் கடமை என்று பொதுமக்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. பொதுமுடக்கத் தளர்வுகள் நமது வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவே அமல்படுத்தப்படுகின்றன. அவற்றை நாம் சலுகையாகக் கருதிக்கொள்ளக் கூடாது. வருமுன் காப்பது என்பது நமது வாழ்க்கையின் பாலபாடம் என்பதால், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தையும் நாம் முறையாகப் பின்பற்றியே ஆக வேண்டும். கூடவே, தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் முன்வர வேண்டும். அரசுத் தரப்பில் இவை அனைத்தையும் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in