பிரிட்டனில் பிறிதொரு சம்பவம் நடந்தது!- வறுத்தெடுத்த வரலாற்றுத் தமிழறிஞர் கமல்

பிரிட்டனில் பிறிதொரு சம்பவம் நடந்தது!- வறுத்தெடுத்த வரலாற்றுத் தமிழறிஞர் கமல்

சானா
readers@kamadenu.in

விடிந்தும் விடியாததுமாக ‘விக்ரம்’ (பழைய) படத்தை ஓடிடி-யில் ஓடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான் பாச்சா. ‘தஸ்தத்தோரி தஸ்தத்தோரியா...’ என்று தூய தமிழில் ஒலித்த பாடலில், துயில் கலைந்து பாச்சாவைப் பார்த்துப் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தது பறக்கும் பைக். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, “காலங்கார்த்தாலேயே கமல் படம் பார்த்துட்டு இருக்கியே... அப்புறம், அவர் மாதிரியே முக்கி முக்கிப் பேசி மூணு நாளைக் கலவரம் பண்ணுவே. அப்புறம் யாரைப் போய் பேட்டியெடுக்கிறது?” என்று காட்டமாகக் கேட்டது.

கொட்டாவியும் கோபமுமாகத் திரும்பிய பாச்சா, “கமல் படங்கள்ல செலக்டிவ்வா லிஸ்ட் போட்டு ‘களத்தூர் கண்ணம்மா’வுல ஆரம்பிச்சு ‘விக்ரம்’ வரைக்கும் வந்துட்டேன்யா. அடுத்து, ‘விருமாண்டி’ இருக்கு, ‘விஸ்வரூபம்’ இருக்கு...” என்று அடுக்கினான். “அதெல்லாம் சரி... இப்ப எதுக்காண்டி இதையெல்லாம் பார்த்துட்டு இருக்கே?” என்று பைக் கேட்க, “அதை அவர்கிட்டேயே சொல்றேன்” என்றான் பூடகப் புன்னகையுடன்!

ஆழ்வார்பேட்டை.

மநீம அலுவலகத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன், ‘பிக் பாஸ்’ டீமும் கூட்டாக அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கட்சிக்காரர்களில் ஒருவர் (ஓரிருவரில் ஒருவர்னும் சொல்லலாம்!), “இப்படி எல்லாத்தையும் ஒரே சமயத்துல பண்றாரே? எதுலதான் ஜெயிப்பாரு?” என்று கமென்ட் பண்ண, அதைக் காதில் வாங்கிய கமல், “ஜெயிப்பது நிஜம் என்று பாட்டுப் பாடி பரவசப்படுத்தியவன் நான். ஒரே படத்தில் ஒரு டஜன் உலக சினிமாவைக் காட்டிய கலைஞன். ஒரே ஒரு தேர்தலில் கிடைத்த தோல்வி என்னை ஒன்றும் செய்துவிடாது. இன்னும் நிறைய இருக்கிறது...” என்று சொல்ல, “எது... தோல்விகளா சார்?” என்றபடி என்ட்ரி கொடுத்தான் பாச்சா.

கடுப்பை வெளிக்காட்டாத கமல் அங்கிருந்த கரும்பலகையில் ‘அ’ எழுதத் தொடங்கினார். அதை அங்கு குழுமியிருந்தோர் ‘ஆ’வெனப் பார்த்துக்கொண்டிருந்தைப் பார்த்து பல் வலிக்கச் சிரித்த பாச்சா, “இப்படி அவரை அநியாயத்துக்கு ஏத்திவிட்டு ஏத்திவிட்டு, எதுக்காகத் தோத்தோம்னே தெரியாம என்னென்னமோ பேசுற அளவுக்குக் கொண்டுபோய்ட்டீங்க” என்று இடித்துரைத்தான். அதைக் கேட்டதும் ஆவேசமடைந்த கமல், அதே வேகத்தில் தமிழ் வகுப்பைத் தள்ளிவைத்துவிட்டுத் தயாரானார் பேட்டிக்கு!

“சார், நீங்க பேசுற தமிழ் புரிஞ்சாதான் தமிழ் வாழும்னு சொல்லியிருக்கீங்களே? சின்னப் புள்ளையில் நீங்க பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னால இங்கே எல்லாரும் இங்க்லீஷ்ல பேசிட்டு இருந்தாங்களா?” என்றான் பாச்சா.

“இந்தப் புரிதலில்தான் இருக்கிறது உங்கள் தவறு. நான் என் தமிழ்ப் பேச்சைச் சொல்லவில்லை. என் ஆசான்களின் தமிழைப் பற்றிச் சொன்னேன். அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சதிராடிவருகிறார்கள் சதிகாரர்கள்” என்று அதுவரை கொஞ்சம் சரியாகவே பேசிக்கொண்டிருந்த கமல், “இப்படித்தான் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. இலங்கையில் இன்னொரு சம்பவம் நடந்தது. பிரிட்டனில் பிறிதொரு சம்பவம் நடந்தது. ஆப்பிரிக்காவில் அடுத்த...” என்று அகில உலக வரலாற்றை அடுக்கியதும், அதுவரை அன்பொழுக அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் அப்படியே அப்ரட்ப்ட்டாக அப்பீட்டானார்கள்.

தனியனாகக் கமல் முன் நின்றிருந்த பாச்சா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “உங்க கட்சியில இருந்தவங்கள்லாம் உருப்படியா ஒரு கட்சியைப் பார்த்து கரைசேர்ந்துட்டாங்க. பேசாம உங்க கலையுலக குரு சிவாஜி மாதிரி கட்சியை...” என்று கேட்கும்போதே கையை உயர்த்தி இடைமறித்தார் கமல். பின்னர் கர்ஜித்தபடியே, “இப்போதுதான் தொழிற்சங்கப் பேரவை தொடங்கியிருக்கிறோம். இனி அரசியல் தொழில் பழகுவோம். தோல்விகளை வேள்விகளாக்கித் தோள்களில் தாங்குவோம். வெற்றியை நோக்கி வெறித்தனமாக ஓடுவோம்” என்று பேசப் பேச பாச்சா தலைதெறிக்க ஓடினான்.

அடுத்து முன்னாள் (நிரந்தர) துணை முதல்வர் பன்னீர்செல்வம்.

மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்ற இளம் தலைவர்களின் முகங்களுடன் ரவீந்திரநாத்தின் முகத்துடன் ஓயாமல் ஒப்பிட்டுப் பார்த்து ஓய்ந்துபோயிருந்தார் ஓபிஎஸ். அவ்வப்போது ‘அண்ணன் ஓபிஎஸ் வாழ்க!’ என்று ‘தேவர்மகன்’ நாசர் போல ஈபிஎஸ் ஆதரவாளர்களின் மூக்கோடு மூக்கு பொருத்தி முழக்கமிடும் தன் சொந்த(!) ஆதரவாளர்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.

அவர் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்கும் நேரத்திலா, பாச்சா அங்கு செல்ல வேண்டும்? அடடா... ஒரே அழு-காட்சி!
“என்ன சார், ‘மத்திய’ அரசுக்கு ஆதரவு தெரிவிச்சு எவ்ளோ அறிக்கை விட்டாலும், அமைச்சராகும் பாக்கியம் உங்கப் பையனுக்கு அமையலையே? கேபினெட் ஆரம்பிச்சு எதிர்க்கட்சித் தலைவர் பதவிவரை எதுவுமே உங்க குடும்பத்துக்குக் கிடைக்கவே கிடைக்காதா?” என்று வினா எனும் பெயரில் வெறுப்பேற்றினான் பாச்சா.

“அதை ஏன் கேட்கிறீங்க தம்பி!” என்று சிங்கமுத்து பாணியில் சலித்துக்கொண்ட ஓபிஎஸ், “மாண்புமிகு பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா வழியில் நாமளும் ஏதாச்சும் புரட்சி பண்ணலாம்னு அப்பப்ப நினைக்கிறது உண்டுதான். ஆனா, ‘சின்னம்மா சபதம்’னு ஒரு தெலுங்கு டப்பிங் படம் பார்த்ததுல இருந்து தர்மயுத்தம் பண்ணக்கூட தனியா போக பயமா இருக்கு தம்பி. எதுக்காச்சும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்னா யாராச்சும் எதையாச்சும் ‘சீவி’விட்டு நம்ம சீக்குவென்ஸையே சிதைச்சுடுறாங்கப்பா” என்றபடி கைக்குட்டையை எடுத்து கண்ணில் வைத்துக்கொண்டார்.

“ம்க்கும். தர்மயுத்தம் செட்-அப்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சென்டிமென்ட் சீன் கூட உங்களுக்கு செட் ஆக மாட்டேங்குது சார்” என்று அவரைத் திசைதிருப்பிய பாச்சா, “அதெப்படி சார், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி துணை முதல்வரா இருந்தோம்ங்கிற நினைப்புகூட இல்லாம, புதுசா வந்த திமுக அரசைப் போட்டுப் புரட்டி எடுக்குறீங்க? கொஞ்சம் கேப் விட்டா என்னவாம்?” என்றான்.
உடனே முகம் மலர்ந்த ஓபிஎஸ், “என் கண்டனக் குரல் அவ்வளவு சத்தமாவா கேட்குது? எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காட்டாலும் எதையாச்சும் பேசி எதிர்க்கருத்து சொல்றது நல்லாருக்குல்ல... ரொம்ப நல்லாருக்குல்ல?” என்று சிரித்தார்.
அப்போது அவரது உதவியாளர் வந்து, “கட்சி விஷயமா உங்க கிட்ட பேசணும்னு ஒரு லேடி போன் பண்றாங்க தலைவரே” என்று காதில் கிசுகிசுத்தார்.

போனை எடுக்கக் கிளம்பிய ஓபிஎஸ், சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவராக, “அவங்க பேர் என்னன்னு சொன்னாங்க?” என்று உதவியாளரிடம் கேட்க, “சசிகலா” என்று பதில் வர அங்கு ஒரு நிரந்தர நிசப்தம் குடிகொண்டது.

வரும் வழியில், “யோவ். லிஸ்ட்ல அண்ணாமலை பேரும் இருக்கு. அவரையும் ஒரு எட்டுப் பார்த்துட்டுப் போய்டுவோமா?” என்று கேட்டது பைக்.

“யாரு அமித் ஷாவின் ஆதரவு பெற்ற சின்ன சங்கியா? அய்யய்யோ அவரு எவ்வளவு பெரிய ஆளு? பத்திரிகைக்காரங்கள்லாம் ஆறே மாசத்துல அவர் கன்ட்ரோல்ல போகப்போறோம். அவரே பார்த்து அறிக்கையைத் தட்டிவிட்டு நம்ம அலைச்சலைக் குறைக்கப்போறாரு. அவரைப் பார்த்து ஏன் டயத்தை வேஸ்ட் பண்ணணும். விடு ஜூட்!” என்றான் பாச்சா.

‘வலிமை’ அஜீத் பைக்கைவிட வேகமாக வானத்தில் பறக்கத் தொடங்கியது பைக்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in