ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு ஏன்?- அமெரிக்காவில் தனது ரசிகர்களிடம் மனம்விட்டுப் பேசிய ரஜினி

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு ஏன்?- அமெரிக்காவில் தனது ரசிகர்களிடம் மனம்விட்டுப் பேசிய ரஜினி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

ரஜினியின் அரசியல் செயல்பாடுகளுக்காகவே உருவாக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் தற்போது கலைக்கப்பட்டு, ரசிகர் நற்பணி மன்றம் மட்டுமே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற அமைப்பாளரும் அமெரிக்கவாழ்த் தமிழருமான கே.கே.முருகுபாண்டியனிடம் பேசினோம். ரஜினியை அமெரிக்காவில் சந்தித்துப் பேசியவர்களில் முருகுபாண்டியனும் ஒருவர் எனும் முறையில், இந்த முடிவுக்கு ரஜினியைக் கொண்டுசென்ற காரணி எது என்று அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
 அமெரிக்காவில் ரஜினியைச் சந்திக்க எப்படி அனுமதி வாங்கினீர்கள்?

தலைவர் அமெரிக்கா வருகிறார் என்றதும் அவரை மருத்துவமனையில் சந்திக்க அவரது உதவியாளர்களிடம் அனுமதி கேட்டேன். ஆனால், மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு அமெரிக்காவிலேயே ஒரு மாதம் தங்கப்போகிறார்; அப்போது சந்திக்கலாம் என்று சொன்னார்கள். அதனால் காத்திருந்தேன். ஜூன் 30-ம் தேதி இரவு 12 மணிக்கு, “நாளை மாலை நீங்கள் குடும்பத்தினருடன் வந்து தலைவரைச் சந்திக்கலாம்” என்று எனக்கு அழைப்பு வந்தது. நான், எனது மனைவி, மகன் மூவருடன் நியூஜெர்சி மாநில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஐந்து பேரும் நான்கு மணி நேரம் பயணம் செய்து தலைவரைச் சந்தித்தோம். முப்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்தபோது இருந்த அதே எளிமை, அதே புன்னகை, அதே சிநேகம் என்று அசரடித்தார் ரஜினி. எங்கள் எல்லோரிடமும் அத்தனை அன்புடன் பேசிக்கொண்டிருந்தார்.

ரஜினியின் உடல்நலம் எப்படி இருக்கிறது?

பூரண உடல்நலத்துடன் இருக்கிறார். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் அது நல்ல பலன் அளித்திருக்கிறது. உயர் ரத்த அழுத்தமும் சரியாகிவிட்டது. அதனால் மிக மிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். ஒரு மாதம் தங்குவதாக இருந்தவர் உடல்நிலை நன்றாக இருப்பதால் பதினைந்து நாட்களிலேயே இந்தியா திரும்பிவிட்டார்.

உங்களது சந்திப்பில் அரசியல் குறித்து என்ன பேசினீர்கள்?

நான் தலைவரை எப்போதெல்லாம் சந்திக்கிறேனோ அப்போதெல்லாம் எனது கருத்துகளை ஒளிவுமறைவு இல்லாமல் அப்படியே சொல்லிவிடுவேன். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் பேசியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவர் தனது பதிலுரையில் ஆறு நிமிடங்கள்வரை ஒதுக்கி எனக்குப் பதில் சொன்னார். அதேபோல இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் நான் எனது கருத்தைத் தலைவரிடம் தெரியப்படுத்தியிருக்கிறேன்.

அதனால் இந்த முறை அமெரிக்காவில் அவரைச் சந்தித்தபோது அரசியல் குறித்தும் பேச்சு வந்தது. தன்னுடைய வயது, உடல்நிலை, கரோனா பெருந்தொற்று ஆகியவை குறித்து மிகுந்த குழப்பத்தில் இருந்ததாகவும், ஆனாலும் ஒரு தெளிவான முடிவை எடுத்து ‘அரசியலுக்கு வரவில்லை’ என்று அறிவித்ததாகவும் தலைவர் சொன்னார். பின்னர் அவரே, “அப்படி நாம் அரசியலுக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்று கேட்டார். “30 முதல் 40 தொகுதிகள் வரை நாம் பெற்றிருப்போம். அது திமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்” என்று வெளிப்படையாகவே அவரிடம் சொன்னேன்.

வேறு என்னென்ன பேசினீர்கள்?

“அரசியலுக்கு வரவில்லை என்ற உங்கள் முடிவு சரியானதுதான். அப்படி வந்திருந்தால் நம்முடைய நிர்வாகிகள் சிலரை நாம் இழந்திருக்க நேரிடும்” என்றும் குறிப்பிட்டேன். “அதெப்படி?” என்று கேட்டார். “கரோனா முதல் அலை அதிக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், இரண்டாவது அலை அதிகப்படியான உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் நான் இரண்டாவது அலையின்போது மக்களுக்கு நிவாரண உதவிகளைக்கூட வழங்கவில்லை. நமது நிர்வாகிகள் உதவிச் செய்யப்போய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துவிட்டார்கள் என்றால் நம்மால் அதை ஈடுசெய்ய முடியாது” என்று சொன்னேன். உடனே, “வெரிகுட், வெரிகுட்! யாரும் உயிரிழக்க நாம் காரணமாக இருக்கக் கூடாது. நமது நிர்வாகிகளின் உயிர் முக்கியம்” என்றார் தலைவர்.

“நமது நிர்வாகிகள் தேர்தலைச் சந்திப்பது முதல்முறையாக இருப்பதால் மக்களுடன் நெருங்கிப் பழகுவதாக நினைத்துக்கொண்டு பாதுகாப்பைக் காற்றில் பறக்க விட்டிருப்பார்கள். அதன்மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு என்னைப் போன்ற சில நிர்வாகிகள்கூட உயிரிழந்திருக்கக் கூடும். உங்களது அறிவிப்பின் மூலம் அப்படி நடக்காமல் நிறைய பேரின் உயிரைக் காப்பாற்றி நல்லதுதான் செய்திருக்கிறீர்கள்” என்று நான் சொன்னதை சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு கேட்டவர், அப்படியே தலையை ஆட்டி ஆமோதித்தார்.

ரஜினி மக்கள் மன்றம் தொடர்பாக என்ன சொன்னார்?

“இனி நம்முடைய மன்றத்தை என்ன செய்யலாம்?” என்று என்னிடம் கேட்டார். “நீங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. மக்களுக்கான நற்பணிகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் காமராஜரைப்போல, எம்ஜிஆரைப்போல உங்களுடைய பெயரும் புகழும் தமிழகத்தில் நிலைத்து நீடித்திருக்க வேண்டும். அதற்கு மக்களுக்கான நற்பணிகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று சொன்னேன்.

மேலும், “மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் பலரும், நம்முடைய ரசிகர்கள் ஆயிரக் கணக்கானோரும் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களை நாம் கைதூக்கிவிட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கின்ற நேர்மையான நபர்களை மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அவர்கள் மூலமாக நமது ரசிகர்களுக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று தலைவரிடம் எடுத்துச் சொன்னேன்.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், “மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து இதுபற்றி முடிவெடுப்போம்” என்று சொல்லி எங்களை வீட்டின் வாசல்வரை வந்து வழியனுப்பினார். இப்போது அவர் மக்கள் மன்றத்தைக் கலைத்திருப்பதையும், இனி எப்போதும் அரசியல் இல்லை, நற்பணிகள் தொடரும் என்று அறிவித்திருப்பதைப் பார்த்ததும், நம்முடைய வார்த்தைகளையும் தலைவர் பொருட்படுத்துகிறார் என்று பெருமையாக இருக்கிறது.

அரசியல் பாதை இல்லை என்று ரஜினி உறுதிபடச் சொல்லிவிட்ட நிலையில், அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்த உங்களது எதிர்காலம்?

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உட்பட பலரும் என்னை அதிமுகவிற்கு அழைத்தார்கள். சென்றிருந்தால் சீட்டும் கொடுத்திருப்பார்கள். அதேபோல், எனது சகோதரர் கே.கே.செல்லப்பாண்டியன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கிறார். அதனால் திமுகவில் சேர்ந்துகூட சீட்டை வாங்கியிருக்க முடியும். ஆனால், தலைவர் வருவார், அவரோடு நேர்மையான ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்றுதான் நான் காத்திருந்தேன். அவர் சொன்னதால்தான் நாங்களும் மக்கள் மன்றம் மூலம் அரசியல் களத்துக்குத் தயாரானோம். இனி அரசியல் இல்லை என்று முடிவாகிவிட்டாலும் மக்களுக்கான பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in