ஒப்பந்தப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும்!- தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் பேட்டி

ஒப்பந்தப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும்!- தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவரான ம.வெங்கடேசன், பதவியேற்ற குறுகிய காலத்திலேயே தனது துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். மதுரையில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து, பதவியேற்ற மறுநாளே மதுரைக்கு விசாரணைக்கு வந்தது வெங்கடசனின் வேகத்தைக் காட்டியது. தூய்மைப் பணியாளர்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மோதவும் தயங்காதவர். ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் இயங்கிவரும் வெங்கடேசன், ‘இந்துத்துவ அம்பேத்கர்' உள்ளிட்ட புத்தகங்களுக்காகப் பேசப்படுபவர். அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்கள் குடும்பப் பின்னணி குறித்து சொல்லுங்கள்...

சென்னை திருவல்லிக்கேணியில் கூவக்கரையோரம் பிறந்தவன் நான். அப்பாவும் அம்மாவும் படிப்பு வாசனையற்றவர்கள். நான் அரசியலுக்கு வரக் காரணம் ஆர்எஸ்எஸ்தான். 4-ம் வகுப்பு படித்தபோது எங்கள் குடிசைப் பகுதிக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பதற்காக ஆர்எஸ்எஸ் ஆட்கள் வந்தார்கள். பாடத்துடன், அவர்களது பேச்சும் என்னைக் கவர்ந்தது. அதன் பிறகு அவர்களில் ஒருவனாகிவிட்டேன். எனது 19 வயதில் அப்பா இறந்துவிட்டார். என்னைப் படிக்கவைத்தது எல்லாமே அவர்கள்தான். ஆர்எஸ்எஸ் அமைப்பின் எல்லா பரிவாரங்களிலும் வேலை பார்த்திருக்கிறேன். ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்', ‘இந்துத்துவ அம்பேத்கர்', ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?', ‘தலித்களுக்குப் பாடுபட்டதா நீதிக்கட்சி?', ‘எம்ஜிஆர் என்கிற இந்து', ‘நான் ஒரு ஆர்எஸ்எஸ் சுயம்சேவகன்' ஆகிய 6 புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.

2013-ல் பாஜகவுக்கு வந்தேன். வரும்போதே எஸ்.சி அணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரானேன். 2016-ல் அந்த அணியின் தலைவரானேன். அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டேன். இப்போது தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவராக உயர்ந்திருக்கிறேன். இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட முதல் தமிழரும் நான்தான். முதல் இளைஞரும் நான்தான்.

தூய்மைப் பணியாளர்களுக்கென ஒரு ஆணையம் இருப்பதே உங்களது சுறுசுறுப்பான செயல்பாட்டுக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆணையத்தைப் பற்றிச் சொல்லலாமா?

இது அரசமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட ஆணையம். 1994-ல் தொடங்கப்பட்டது. இதன் தலைவரையும், உறுப்பினரையும் குடியரசுத் தலைவரே நியமிப்பார். National Commission for Safai Karamcharis என்ற பெயரைப் பார்த்து வெறுமனே இது தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டுமேயான ஆணையம் என்று நினைக்கிறார்கள். ‘சஃபாய்’ என்றால் சுத்தம், ‘கரம்சாரி’ என்றால் செய்வோர் என்று அர்த்தம். அதாவது, சுத்தம் செய்வோர், பழையதை அகற்றுவோர் எல்லோருமே இதன்கீழ் வருவார்கள்.
உதாரணமாக, உணவகங்களில் மேஜை துடைப்பவர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், தெருக்களில் குப்பை, பழைய பொருட்களைப் பொறுக்குபவர்கள், பழைய மின்சாதனங்களைப் பழுதுபார்ப்போர் என்று 45 பிரிவு ஊழியர்கள் இதன்கீழ் வருவார்கள். இவர்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஆணையம் அதில் தலையிட்டு, தீர்த்துவைக்க முடியும்.
  தினம் ஒரு ஊரில் இருக்கிறீர்கள். உங்களுக்குப் புகார் வருகிறதா அல்லது நீங்களாகவே ஒவ்வொரு ஊருக்கும் போகிறீர்களா?
தமிழகத்தைப் பொறுத்தவரை பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து நானாகத்தான் போய் நடவடிக்கை எடுக்கிறேன். இந்த ஆணையம் பற்றி யாருக்குமே விழிப்புணர்வு இல்லை என்பதே காரணம். டெல்லியில் உள்ள என்னுடைய அலுவலகத்துக்கு, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து நிறைய தொழிலாளர்கள் புகார் கொடுக்க வருவார்கள். இங்கே நானே போய்க் கேட்டாலும் புகார் தர யாரும் முன்வருவதில்லை. அதிகாரிகளோ, கான்ட்ராக்டரோ பழிவாங்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். என்னுடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு வெறும் குரல் பதிவாகப் பேசி அனுப்பினால், அதையே புகாராக ஏற்று நடவடிக்கை எடுக்கிறேன் என்று தொழிலாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

உங்கள் பணி அனுபவத்தின் மூலம், தமிழ்நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை எதுவென்று நினைக்கிறீர்கள்?

இப்போது நான் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் மட்டும்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதில் ஒப்பந்தப் பணியாளர்களின் நிலைதான் மிகப் பரிதாபமாக இருக்கிறது. சம்பளமே சொற்பம்தான். அதையும் குறித்த நாளில் தராமல் இழுத்தடிப்பவர்கள் உண்டு. 8 மணி நேர வேலை, வார விடுமுறை போன்ற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இந்தக் கரோனா காலத்தில்கூட கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. பல ஊர்களில் ஒப்பந்தப் பணியாளர்களின் சம்பளத்தை முறைகேடாகப் பிடித்துக்கொள்கிற கொடுமையும் நடக்கிறது. இஎஸ்ஐ, பிஎஃப் வசதிகளும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

சமீபத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்குப் போயிருந்தேன். அங்கே கடந்த 5 ஆண்டுகளாகச் சம்பளத்தில் இருந்து பிடித்த பிஎஃப் பணத்தை தொழிலாளர்களின் கணக்கிலேயே கட்டாமல் மோசடி செய்திருக்கிறார் கான்ட்ராக்டர். எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம், இங்கே கான்ட்ராக்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஆளும் அரசியல்வாதிகளுடன் இருக்கிற கலெக் ஷன், கமிஷன் தொடர்புதான். ஒவ்வொரு மாநகராட்சியிலும் 75 சதவீதம் பேர் ஒப்பந்தப் பணியாளர்களே. எனவேதான், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியில் ஒப்பந்தப் பணியாளர் முறையையே ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறேன்.

ஒப்பந்தப் பணியாளர் முறை என்பதே மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையில் இருந்து வருவதுதானே? தமிழ்நாட்டைவிட வேறு எந்த மாநிலத்தில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியமும், பணிப் பாதுகாப்பும் இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

இந்தியா முழுக்க ஒப்பந்தப் பணியாளர் முறை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிற மாநகராட்சி எல்லாம் இருக்கிறது. கர்நாடகத்தில் நிரந்தரப் பணியாளர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் அதிக ஊதிய வித்தியாசம் கிடையாது. அங்கு ஒப்பந்தப் பணியாளர்களின் மாத ஊதியம் 18 ஆயிரம். காரணம், அங்கே தூய்மைப் பணியாளர்களுக்கென்று மாநில ஆணையம் இருக்கிறது. அது அவர்களின் பிரச்சினைகளில் தலையிடுகிறது. தமிழ்நாட்டில் இருப்பது வெறும் நல வாரியம்தான். அதற்குத் தன்னாட்சி அதிகாரம் கிடையாது. எனவேதான், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் இதுபோன்ற ஆணையம் அமைக்க வேண்டும் என்று இருமாநில ஆளுநர்களிடமும் நேரில் மனு கொடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் ஆணையம் மட்டுமின்றி தூய்மைப் பணியாளர்களுக்கென ஒரு நிதி நிறுவனமும் அமைக்க வேண்டும். தூய்மைப் பணியில் ஒப்பந்தப் பணியாளர் முறையை ஒழிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அதன் அடிப்படையில் தனிச்சட்டமே நிறைவேற்ற வேண்டும். கரோனா காலத்தில் இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்சம் நிவாரணமோ, பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத் தொகையோ கிடைக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதற்காகத் தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

உங்கள் பதவிக் காலத்துக்குள் என்னென்ன பணிகளைச் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?

ஓராண்டுக்குத்தான் நான் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். சில மாதங்கள் கரோனா ஊரடங்கால் வீணாகிவிட்டன. அதற்குள் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. கழிவுநீர்க் குழிக்குள் விழுந்தும், விஷ வாயு தாக்கியும் இறப்பவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகம். அதை முற்றிலும் குறைப்பதுதான் எனது இலக்கு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வாங்கித் தருவதுடன் நிற்காமல், ஊழியர்களை ஆபத்தான பணியில் ஈடுபடுத்தியதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்ய வைக்கிறேன். கையால் மலம் அள்ளுதல் தடைச்சட்டத்துடன், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்ததன் மூலம் சென்னையில் 2 குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் போகக் கூடுதலாக 8.25 லட்சம் ரூபாய் நிவாரணம் பெற்றுத்தந்தோம். அடுத்து நான் செய்ய விரும்புவது, குடிப்பழக்கத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களை விடுவிப்பது. தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது, விளிம்பு நிலை சமூகங்கள்தான். உடல் உழைப்பு தொழிலாளியான என் தந்தையே குடிப்பழக்கத்தால்தான் இளம் வயதிலேயே மரணமடைந்தார். இந்தப் பழக்கத்தை இம்மக்களிடமிந்து ஒழிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். அதற்காகப் பட்டியலினச் சமூகங்களுக்காகச் செயல்படுகிற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளேன்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சமூகங்களைக் குறிவைத்து பாஜக வேலை செய்கிறது என்று சொல்லப்படுகிறது. இப்போது அருந்தியர் சமூகத்தை ஈர்ப்பதற்காகவே எல்.முருகனை மத்திய அமைச்சராக்கினார்கள், ‘இந்துத்துவ அம்பேத்கர்' நூல் எழுதிய உங்களைத் தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்குத் தலைவராக்கினார்கள் என்று சொல்லலாமா?

எந்தெந்தச் சமூகத்திற்கு இங்கே அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லையோ அந்தச் சமூகங்களுக்கு பாஜக அதிகாரம் தருகிறது என்பதுதான் உண்மை. இதுதான் உண்மையான சமூகநீதி. எல்லாவற்றையும் சாதி ரீதியாகப் பார்க்கிற திராவிட இயக்கத்து ஆட்கள், ஏன் அருந்ததியரை இதுவரை அமைச்சராக்கவில்லை? தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை ஏன் கட்சித் தலைமைப் பதவியில் அமர்த்தவில்லை? அவர்கள் செய்யாமல் விட்டதை நாங்கள் செய்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in