போலீஸ்காரரை வைத்து கட்சி நடத்துவது பெருமையான விஷயமா?- பாஜகவுக்கு எதிராக படபடக்கும் மயூரா ஜெயக்குமார்

போலீஸ்காரரை வைத்து கட்சி நடத்துவது பெருமையான விஷயமா?- பாஜகவுக்கு எதிராக படபடக்கும் மயூரா ஜெயக்குமார்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

‘மும்முனைப் போட்டி’ என்று சொல்லப்பட்ட கோவை தெற்குத் தொகுதியில், மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார். காங்கிரஸில் கோஷ்டிப் பூசல், பாஜகவின் அணுகுமுறை, திமுக ஆட்சி என எதைப் பற்றிக் கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்லும் ஜெயக்குமாரிடம் ஒரு பேட்டி:

உங்களுடைய தோல்விக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்தீர்களா?

அதிமுக ஆட்சியில் கோவை பகுதியின் அமைச்சராக இருந்தவர் பல ஆயிரம் கோடி ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படிக் குவித்த பெரும்பணத்தைச் செலவழித்து என்னுடைய வெற்றியைப் பறித்துவிட்டார் என்பதுதான் என் தொகுதி மக்களின் கருத்து. வானதி சீனிவாசனின் வெற்றி மக்கள் கொடுத்த வெற்றியல்ல, அந்த அமைச்சரால் வாங்கித் தரப்பட்ட வெற்றி. என்னுடைய தொகுதியில் மட்டுமல்ல, கொங்கு மண்டலம் முழுவதும் அதுதான் நடந்தது.

கமல்ஹாசன் கட்சி தேய்ந்துகொண்டே போகிறதே, என்ன காரணம்?

கட்சி என்றால் கொள்கை வேண்டும். அந்தக் கொள்கைக்காகக் கட்சியின் தலைவர்கள் தியாகம் செய்திருக்க வேண்டும். மக்களுக்குப் பணியாற்றியிருக்க வேண்டும். வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் கொண்டவர்கள் ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்தப் புகழ் வெளிச்சம் மங்குகிறபோது தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சியைவிட்டு விலகத்தான் செய்வார்கள். அதுதான் மக்கள் நீதி மய்யத்திலும் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும்.

காமராஜர் பிறந்தநாள் விழாவில் வழக்கம்போல,  “காமராஜர் ஆட்சியமைப்போம்” என்று பேசியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அதற்கு காங்கிரஸ் என்ன மாதிரியான முயற்சிகளை செய்கிறது?

ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் அடிமனதிலும் மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த எண்ணத்தில்தான் ஒவ்வொரு பிறந்தநாளிலும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அதற்கான முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்துப் போராடுவது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்கிறோம். நிச்சயம் ஒருநாள் அந்தக் கனவு கைகூடும்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். இளைஞர்களை ஏன் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்க முடியவில்லை?

பெட்ரோல் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள்தான். எனவே, மூத்தவர்களோடு இளைஞர்களும் ஆர்வமாகப் பங்கேற்றார்கள். பல இடங்களில் போராட்டத்தை முன்னின்று நடத்தியதே இளைஞர் காங்கிரஸார்தான். எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாகப் பெண்களும் அதிகளவில் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்பதுதான் உண்மை.

கட்சியில் சேர்ந்த இரண்டே வருடத்தில், 37 வயதேயான இளைஞர் அண்ணாமலை பாஜக தலைவராகியிருக்கிறார். உங்கள் கட்சியில் எந்தப் பின்னணியும் இல்லாத இளைஞர்கள் முன்னுக்கு வரவே முடிவதில்லையே... ஏன்?

ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் கட்சிக்குப் பணியாற்றியிருக்க வேண்டும், மக்களுக்கும் பணியாற்றியிருக்க வேண்டும். எங்கள் கட்சியில் அப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 40, 50 ஆண்டு கால இயக்கப் பணியில் இருந்துதான் தலைமைப் பொறுப்புக்கு வருவார்கள், வர முடியும். இதேபோலத் தான் திமுக, கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களிலும். ஒரு ரசிகர் மன்றத்துக்குத் தலைவராக வேண்டும் என்றால்கூட சில தகுதிகள் உண்டு. அப்படி எதுவுமே இல்லாத கட்சி பாஜகதான். நேற்று கட்சியில் சேர்ந்த ஒருவரை இன்று தலைவராக்கும் துர்பாக்கிய நிலையில் பாஜக இருக்கிறது. ஒரு போலீஸ்காரரை வைத்து கட்சியை நடத்துவதை எப்படிப் பெருமையாகச் சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை.

புதுவை, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரம் என்று எங்கு பார்த்தாலும் காங்கிரஸில் கோஷ்டி மோதல் கொடிகட்டிப் பறக்கிறதே?

கொள்கை ரீதியாக அனைவரும் ஒன்றுபட்டிருப்பதும், ஜனநாயக ரீதியாக வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டிருப்பதும்தான் நல்ல அரசியல் கட்சிக்கு அழகு. பாசிஸ கட்சியில் மட்டும்தான் தலைமைக்கு எதிராக எந்தக் குரலும் வராது. அப்படி யாராவது பேசினால், அவர்களைத் தூக்கு மேடையில் ஏற்றுவார்கள், அல்லது சுட்டுத்தள்ளுவார்கள். பாஜகவில் வேண்டுமானால் அப்படியிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் ஒன்றும் ஹிட்லர் கட்சியல்ல.

காந்தி காலத்திலிருந்து கருத்து மோதல் இருந்தாலும்கூட, அந்த உட்கட்சி ஜனநாயகம் தான் இந்தக் கட்சியை 100 ஆண்டுகளைத் தாண்டியும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

திமுக ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறதே?

திமுக சிறப்பான ஆட்சி செய்கிறது. கரோனாவைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்திருப்பதுடன், அதிமுகவினர் 10 ஆண்டு காலம் செய்திருந்த நிர்வாகச் சீர்கேட்டை இப்போது சரி செய்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை நடத்துகிற பாஜக அரசு, பல திட்டங்களையும், நிதியையும் தர மறுக்கிறது. எப்படி தேர்தலை ஒற்றுமையாகச் சந்தித்தோமோ, அதேபோல தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கு திமுகவுக்குக் காங்கிரஸ் துணை நிற்கும்.

இரு துருவ அரசியல்தான் தமிழகத்தில் எடுபடும் என்பதால், அதிமுகவைக் கரைக்க முயற்சிக்கிறது பாஜக என்கிறார்களே?

நாடு முழுக்க அவர்கள் அதைத்தானே செய்கிறார்கள்? பிஹாரில் எப்படி நிதீஷ் குமாரின் கட்சியைக் கரைத்தார்களோ, அதேபோல அதிமுகவைக் கரைக்க வேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அந்தக் குள்ளநரிக் கூட்டத்திடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அதிமுகவினரின் கடமை.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செயல் தலைவராக இருந்தபோது, தலைவரைவிட சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். இப்போது மண்டலத்துக்கு ஒருவரென 5 செயல் தலைவர்கள் இருக்கிறீர்கள். ஆனால், செயல்பாட்டைக் காணோமே?

ஒவ்வொரு மண்டலத்திலும் களப்பணிகளைத் தலைமையேற்று செய்வதற்குத்தான் செயல் தலைவர் பதவி. அதன்படி தலைமையின் உத்தரவுடன் களப்பணியைச் செவ்வனே செய்துவருகிறோம். ஊடக வெளிச்சம் இல்லை என்பதால், நாங்கள் வேலை பார்க்கவில்லை என்றாகிவிடாது.

மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு மக்களே தயாரானாலும்கூட, தலைமை இல்லாத காங்கிரஸ் அதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதாகத் தெரியவில்லையே?

தவறான கருத்து. இப்போதும் அன்னை சோனியா காந்திதான் காங்கிரஸ் தலைவர். காங்கிரஸ் கட்சி பழம்பெரும் கட்சி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரே நாளில் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. ஆட்சி மாற்றம் உறுதியாக நடக்கும். காங்கிரஸ் கட்சி அதற்குத் தயாராக இருக்கிறது. மக்களும் அதற்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in