மஞ்சள் எங்களுக்கு அவலம்!  - துப்புரவுத் தொழிலாளர்களின் துயரம் சொல்லும் நாடகம்

மஞ்சள் எங்களுக்கு அவலம்!  - துப்புரவுத் தொழிலாளர்களின் துயரம் சொல்லும் நாடகம்

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in


மஞ்சள் நிறத்தை மங்களகரமானதாகக் கருதிக்கொள்வது பெரும்பாலானோரின் வழக்கம். பலருக்கு மஞ்சள் நிறம் என்பது தங்கத்தின் குறியீடாக இருக்கலாம். ஆனால், மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் பார்வையில் மஞ்சள் என்பது மங்களம் அல்ல; அவலம். இந்த உண்மையைத்தான்,  சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் நடந்த ‘மஞ்சள்’ நாடகம், மனித மனங்களை அதிரவைக்கும் வகையில் பேசியிருக்கிறது.

மேடையைக் கவ்வியிருந்த இருளைத் துடைத்தகற்றும் பிரகாசத்துடன் மஞ்சள் வெளிச்சம் வியாபிக்க… தோல் கருவிகள் பின்னணியில் அதிர… தொடங்கிய இந்த நாடகம், மலம் அள்ளும் தொழிலாளர்கள் படும் துயரத்தைப் பாசாங்கற்ற மொழியில் பதிவுசெய்தது. நாடகவியலாளர் ஜித் சுந்தரம் இயக்கிய இந்த நாடகத்தை ‘ஜெய்பீம் மன்றம்’, ‘அரும்பு’ மாத இதழ், ‘கட்டியக்காரி’ நாடகக் குழு ஆகியவை இணைந்து வழங்கின.

பல்வேறு மாநிலங்களில் வாழும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுத்தாளர் பாஷா சிங் ‘Unseen: The truth about India's Manual scavengers’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்ற தலைப்பில் அதை மொழிபெயர்த்திருக்கும் ஜெயராணி, அந்த அவல ஆவணத்தின் கலைவடிவமாக இந்த நாடகத்தை எழுதியிருக்கிறார். இந்நாடகத்தின் ஒருங்கிணைப்பாளரும் இவர்தான்.
இந்தியா முழுவதும் இருக்கும் துப்புரவுப் பணியாளர்கள், மலம் அள்ளுபவர்களின் ஆற்றாமையை எதிரொலித்த இந்நாடகத்தின் வசனங்கள், ‘சாமானியர்கள்’ எனும் பொதுவான பதத்தின் கீழ் வாழும் பலரது  மனதின் அடியாழத்தில் உள்ள சாதிப் பற்றை நிச்சயம் அசைத்துப் பார்த்திருக்கும்.

“எங்கள் கைகளில் மலம் இருக்கும் வரை உங்கள் தட்டில், உடையில், உடம்பில்… எங்கே மஞ்சள் இருந்தாலும் அது எங்களுக்கு மலம்தான்” என்ற வசனமே ‘மஞ்சள்’ நாடகத்தின் அடிநாதம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in