சுபவிரயம்

சுபவிரயம்

ம.காமுத்துரை
makamuthurai@gmail.com


எச்சில் இலைகளின் மீது இரண்டு நாய்கள் ஒன்றையொன்று சண்டையிட்டுப் புரண்டுகொண்டிருந்தன. பந்தல் தடுப்பின் பின்னால் நடக்கும் அந்த அமளி, பந்தலின் உள்ளும் எதிரொலித்தது.



வசந்த விழா (காதணி விழா) வைபவம் முடிந்து மொய்ப் பணம் சாமியறைக்குள் வைத்து எண்ணப்பட்டுக்கொண்டிருந்தது, பத்து நிமிடத்துக்கொரு முறை மனோகரனின் மனைவி கௌசல்யா எனும் கௌசி, சாமிப் படத்துக்கு ஏதோ செய்வதுபோல அறைக்குள் போவதும் வருவதுமாய் இருந்தாள். கௌசியின் தம்பி செந்திவேலுக்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட்டது. “நோட்டுல எழுதுனதத்தான் எண்ணிகிட்டிருக்கம். யாரும் வாய்க்குள்ள போட்டு, மெண்டு முழுங்கீற மாட்டம்” என சுள்ளென சத்தம்போட, கெளசி நடமாட்டத்தைக் குறைத்தாள். ஆனாலும் கவனம் முழுக்க சாமியறையிலேயே குடிகொண்டிருந்தது. இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் இப்படியொரு விசேசம் வைத்தால்தான், ஊரில் செய்த மொய்ப் பணத்தை வசூலிக்க முடிகிறது. நாளானால் ஜனங்கள் மறந்துவிடுகிறார்கள்.

நாய்களின் முழக்கம் கௌசிக்கு எரிச்சலூட்டியது. “இந்தச் சனியன்கள அடிச்சுப் பத்திவிடாம என்ன பண்ணிட்டிருக்கீக” என்று சத்தம் போட்டுக்கொண்டே வெளியில் வந்த கௌசி, அங்கே மனோகரனின் போர்க்கோலம் கண்டு தன்னிலை மறந்தாள்.

பந்தலுக்கு வெளியே நின்றிருந்த லாரியில் சமையல் பாத்திரங்களும், சேர், டைனிங் டேபிள் உள்ளிட்ட பொருட்களும் ஏற்றிக் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. சமையல் குழுவினர் ஆங்காங்கே சிதறித் திரிந்தனர். மாஸ்டர், மனோகரனிடம் ஏதோ வாது செய்துகொண்டிருந்தார்.

கெளசியைப் பார்த்துக்கொண்டே, “மாஸ்டர் கணக்கு வாங்க மாட்டேங்கிறார்டி” என்றான் மனோகரன் சலிப்புடன்.
“மொதல்ல எனக்கு – நா, எடுத்துவந்த பொருள ஒப்படைக்கணும்மா. ரெண்டாவதுதான் சம்பளம்” ஏதோ ஒன்றின் முடிச்சை இறுக்குவதுபோல பேச்சை நறுக்கென முடித்தார் மாஸ்டர்.

கௌசிக்குக் குழப்பம் அதிகரித்தது. அனேகமாய் லாரியில் மாஸ்டர் கொண்டுவந்த பொருட்கள் எல்லாம் ஏற்றப்பட்டிருக்கிறது. வேறு என்ன?

“கொண்டுவந்த சேர்ல அஞ்சு, ஒடஞ்சு போச்சுல்லங்கம்மா” என்றார் மாஸ்டர்.

“ஒடஞ்சு போகல, உள்ள வரும்போதே ஒடச்சுதான கொண்டு வந்தீக” மாஸ்டரை முடிக்கவிடாது முந்திக்கொண்டு பேசினான் மனோகரன்.
“சார், நாங்க கடைல ஏத்திவிடும்போது எப்பிடி சார் இருந்திச்சு. நீங்களும் வந்துதான ஏத்துனீங்க.”

பாத்திரக்கடைப் பையன் போலிருக்கிறது. இள வயசாய் இருந்தான். பேன்ட் சட்டை இன் செய்து மரியாதையான வார்த்தைகளையே பயன்படுத்தினான்.

நேற்றைக்கு இதேநேரம் மனோகரன்தான் நேரில் போய் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்து முதலில் பாத்திரங்கள், அடுப்புகளை இறக்கிவிட்டு டைனிங் டேபிள்களைக் கட்டி இருந்த கயிறுகளை அவிழ்த்தபோது டேபிள்கள் சரிந்ததில் அவற்றை அண்டி நின்றிருந்த சேர்கள், ஒட்டுமொத்தமாய் லாரியிலிருந்து தரைக்குத் தள்ளிவிடப்பட்டன. நல்லவேளையாய் சமையலாள் சமயோசிதமாய்க் குதித்துவிட்டான். டேபிளுக்கடியில் சிக்கியிருந்தால் அவனும் சிதறியிருப்பான். அச்சம்பவத்தில் ஐந்து சேர்கள் உடைந்துபோயின.
“அது நம்ம பொறுப்பா?” ஏதுறியா பேதையைப் போல் கேட்டாள் கௌசி.

“கடையிலிருந்து வெளியேறிட்டாலே உங்கதுதானங்க” - கடைப் பையன்.

“அதெப்பிடி, வீட்டுக்குள்ள வந்த பொருளுக்குத்தான், பொறுப்பு ஏத்துக்கலாம். சேரைக் கண்லகூடப் பாக்காம தெண்டம் கட்டணும்னா, கேனத்தனமாவுல்ல இருக்கு.”

உடைந்த சேர்களை வீட்டுக்குள் சேர்க்காமல் பக்கத்து வீட்டு மாட்டுத் தொழுவத்தின் நிழலில் தூக்கிப் போட்டிருந்தான் மனோகரன்.

“அதான ? எசகுபெசகா ஒக்காந்ததுல ஒடஞ்சுபோச்சு…இல்ல, சின்னப் பிள்ளைக ஏறி வெளாண்டு ஒடிச்சு விட்ருச்சுகன்னா பரவால்ல. இத எந்தக் கணக்குல சேக்க முடியும்?” புருசனுக்கு இணக்கமாய்ப் பேசினாலும், இதற்கும்கூட ஏதாவது சுளீரென விழுந்துவைப்பான் என்பதால் மனோகரனை அண்டாமல் எட்டியே நின்று பேசினாள் கௌசி.

“நீங்க முடியாதுன்னா கடைக்காரருக்கு நாந்தே தெண்டம் கட்டணும்க்கா” ஏழெட்டு வயது சின்னவளாய் இருந்தாலும் தொழிலுக்காக மரியாதை கொடுத்துப் பேச வேண்டியிருந்தது மாஸ்டருக்கு.

“அதுக்காக, வல்லடியா நீங்க ஆயிரம் ஐநூறு கேப்பீக… குடுக்க முடியுமாண்ணே?”

“ஆயிரம் ஐநூறா? மூவாயிரம் கேக்கறார்டி.”

கௌசிக்கு மயக்கம் வந்துவிட்டது. “என்னது முவ்வாயிரமா?”

“புது சேர் அறநூறு சில்லறக்கா. நாங்க மொத்தமா எடுத்ததால அறநூறு ரூபா. வெறும் அஞ்சு ரூவா வாடகைக்கு வந்து, மூவாயிரத்த எழக்க முடியுமாக்கா” கடைக்காரப் பையன் பவ்யமாய் எடுத்துரைத்தான். கடைக்காரர் அப்படித்தான் பேசச் சொல்லியிருந்தார். ‘கஸ்டமர்தான் நாம கும்பிடுற கடவுள்’.

“ஒங்க வீட்டு விசேசத்துக்கு வந்துப்புட்டு ஊர்க்காரவக தெண்டம் குடுப்பாகளாக்கா?” மாஸ்டரும் வழிமொழிய கூட்டுக்குள் சிக்கிய எலி போல தவித்தான் மனோகரன்.

மொய்ப் பணத்தை எண்ணி முடித்த குழு, அறையைத் திறந்துகொண்டு வெளியில் வந்தது. பணக்கட்டுகள் அடங்கிய பானையைத் தோளில் ஏந்திவந்த செந்திவேல், பத்திரமாய் அக்காளிடம் தந்தான்.

உடைந்த சேர்கள் சபைக்கு எடுத்து வரப்பட்டன. விவாதம் தொடர்ந்தது.

“அண்ணே, விஷேச வீட்ல இதெல்லாம் சகஜம். நெட்டையோ குட்டையோ பேசி முடிச்சு அடுத்த வேலையப் பாருங்க, லோடு ஏத்தின வண்டிய ரோட்ல நிறுத்திக்கிட்டு இப்பிடி வாதாடிக்கிட்டிருந்தா நாங்க வேற சவாரி போக வேணாமா?” - லாரி ஓட்டுநர் பீடிப் புகையோடு வந்தார்.

“காசு நான்ல குடுக்கணும்.”

“ஆமாங்க, வாடக பொருள எடுத்து வந்தம்னா நாமதே பதனமா எடுத்து, பொறுப்பா கொண்டுபோய்ச் சேக்கணும்” லாரி ஓட்டுநர் மேலும் பேசினார்.

“எல்லாத்துக்கும் விஷேச வீட்டுக்காரரே பூண் பிடிச்சுநிக்க முடியுமாய்யா, அவுக வீட்டுக்குவார ஜனங்களப் பாப்பாங்களா? கொண்டுவந்த பொருளு எங்கன ஒடையிதுன்னு உத்துப் பாத்துகிட்டு நிப்பாகளா ? அதுக்குத்தான வேலையாள்கள நியமிக்கிறது” - செந்திவேல் மச்சானின் பக்கம் வந்து ஆவேசமாய்ப் பேசினான்.

“அப்பன்னா, ஒடஞ்ச பொருளுக்கு நாங்கதே சவாப்தாரியா?” சமையல் மாஸ்டர் ஆற்றாமையுடன் கேட்டார். பொருள்களைக் கணக்கு முடித்து அனுப்பிவிட்டால் கூலியை வாங்கி ஆட்களுக்குச் சம்பளத்தைத் தந்துவிட்டு வீட்டில் போய் குளியல் போட்டு உறக்கத்தில் விழலாம். வேலையின் அலுப்பில் புலன்கள் அனைத்தும் உள்ளுக்குள் அழுது புலம்பின.

“பின்ன? வெறும் சோறாக்க, எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளமும் வாங்கிப்புட்டு, போதையில பொருள எறக்கத் தெரியாம ஒடச்சு வப்பீங்க, அதுக்கும் இளிச்சவாயெ வீட்டுக்காரெந்தே தெண்டம் குடுக்கணுமாக்கும்?” சந்தடி சாக்கில் சமையல்காரரைச் சாடிய மச்சினனைப் பெருமிதத்தோடு பார்த்தான் மனோகரன்.

“ஆமாமா…ஒங்க வீட்ல வந்து புழுக்க வேலை செஞ்சு, கஞ்சி காச்சி ஊத்துனதும் மட்டுமில்லாம… நீங்க பட்ட கடன் ஒடனெல்லா அடச்சிவிட்டும் போகணுமாக்கும். சொல்லுங்க வேற எந்த தெண்டத்த ஏத்துக்கணும்” மாஸ்டர் நேரடியாய்க் களத்தில் இறங்கியது கண்டு அவரது உதவியாளர்களும் அருகில் வந்து நின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in