முதுமை எனும் பூங்காற்று - 7

முதுமை எனும் பூங்காற்று - 7

பொழுதுபோகாதது ஒரு பிரச்சினையா?

இன்றைக்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி முணுமுணுக்கும் வார்த்தை, ‘பொழுதுபோகவில்லை’ என்பதுதான். மற்றவர்களுக்கு எப்படியோ, பணி நிறைவு பெற்று வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு, பொழுதுபோகவில்லை எனும் கவலை பல்வேறு சங்கடங்களை உள்ளடக்கியது.
ஒருகாலத்தில் காலையில் பரபரப்பாக எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு, வீட்டு வேலை, பிள்ளைகளின் படிப்பு என ஓடியாடி வேலை செய்தவர்கள், பணி நிறைவு பெற்றதும் என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். வேலைக்குச் செல்லும்போது, “நிற்கக்கூட நேரம் இல்லை”என வருந்தியவர்கள் ஓய்வுபெற்ற பின், இருக்கும் நேரத்தை எப்படிச் செலவு செய்வது என்று தவித்து நிற்கிறார்கள்.

அதிகாலை விழிப்பு

முதியோரின் மிகப் பெரிய பிரச்சினை அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிடுவதுதான். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கெல்லாம் விழித்துக்கொண்டு, படுக்கையிலேயே புரண்டுகொண்டிருப்பார்கள். வாழ்க்கையின் கடினமான நாட்கள், கசப்பான தருணங்கள் என்று பல நினைவுகள் அப்போதுதான் அவர்களைப் பீடித்துக்கொள்ளும். அதிலிருந்து விடுபட வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் என்று அன்றைய நாட்களைத் தொடங்கிவிடுபவர்கள் உண்டு. என்ன செய்வது என்று தெரியாமல் டீக்கடைகளை நோக்கி நடக்கத் தொடங்குபவர்களும் உண்டு.

ஒரு சிலர் அதிகாலை நடைப்பயிற்சி, யோகா, தியானம் என்று இறங்கிவிடுவார்கள். நகரங்களிலோ கிராமங்களிலோ இன்று மருத்துவரின் அறிவுரையினால் பெரும்பாலான பெரியவர்கள் தங்களால் இயன்ற அளவு கிடைக்கும் இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால், அங்கும் பலவிதமான பிரச்சினைகள். நகைப் பறிப்பு, சாலை விபத்துகள் எனப் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்பான செய்திகள், பிள்ளைகளை மிரளச் செய்கின்றன. இதனால், பெரியவர்கள் நடைப்பயிற்சி செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால், தூக்கமும் வராமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டிய நிலையில் எத்தனையோ முதியவர்கள் இருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு சாதனங்கள்

இன்றைய நவீன உலகில், பொழுதைப் போக்க பல்வேறு சாதனங்கள் வந்துவிட்டன. செய்திகள், நெடுந்தொடர்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பார்த்துக்கொண்டே நேரத்தைப் போக்க வழிகள் இருக்கின்றன. மனம் விரும்பும் படங்கள், பாடல்கள், ஆன்மிக உரைகள், ஆரோக்கிய ‘டிப்ஸ்’ என்று உட்கார்ந்த இடத்தில், பல்வேறு விஷயங்களைப் பார்த்துக் களிக்க ஸ்மார்ட்போன் இருக்கிறது.

இதுதவிர, ஓய்வு நாட்களைப் பயனுள்ள வழிகளில் கழிக்கும் பெரியவர்களையும் பார்க்கிறோம். 75 வயது பெரியவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், தனது நேரத்தைச் செலவழிக்க, அவர் மேற்கொள்ளும் விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். வீணை, கீபோர்டு போன்ற இசைக் கருவிகளை, ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு வெறும் ஒரு ரூபாய் தட்சணையுடன் கற்றுத்தருவதாகவும், மற்ற நேரங்களில் நூலகத்துக்குச் செல்வது, புத்தகம் எழுதுவது என்று நேரத்தைச் செலவிடுவதாகவும் கூறியிருந்த அவர், இதில் தனக்கு மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகவும் நெகிழ்வுடன் சொல்லியிருந்தார்.

இப்படியான வாய்ப்புகள் எல்லோருக்கும் அமைவதில்லை. எனினும், நூலகம், கோயில் போன்ற இடங்களுக்குச் செல்வது மன அமைதியையும் விசாலமான பார்வையையும் கொடுக்கும்.

இயலாமை

“24 மணி நேரமும் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன். பொழுதுபோகவில்லை” என சில பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், வெளியில் சில இடங்களுக்குச் சென்றுவரலாம் என்று யோசனை சொன்னால், “இத்தனை நாள் குடும்பத்திற்காக உழைத்தேன். இப்போவாவது ஓய்வெடுக்க விடுகிறீர்களா?” என அலுத்துக்கொள்ளவும் செய்வார்கள். அது அவர்களின் இயலாமையின், உடல் சோர்வின் வெளிப்பாடு. வெளியில் செல்ல ஆசை இருக்கும். உடல் சோர்வு அவர்களை நகர விடாது.

மறுபுறம் உடம்பை வருத்திக்கொண்டு, “என்னால் இயலும் வரை செய்வேன்” என்று பொழுதுபோக்குக்காக வடகம் செய்தல், ஊறுகாய் செய்தல், பல வகை பொடிகளைச் செய்தல் என்று முதிய பெண்மணிகள் இறங்கிவிடுவார்கள். சிலர் தானும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்தும் எல்லைக்கும் சென்றுவிடுவார்கள். சின்னவர்கள் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கு ஆறுதலாக நிற்க வேண்டும்.



இன்றைக்கு, 40-களில் இருக்கும் தலைமுறைதான், பெற்றோர்களின் பேச்சையும் கேட்டு பிள்ளைகளின் பேச்சையும் கேட்கும் தலைமுறையாக இருக்கும். இரு தலைமுறையினருக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுவதற்கான அனுபவமும் பக்குவமும் இந்தத் தலைமுறைக்கு உண்டு. அதைப் பயன்படுத்தி, தாத்தா – பாட்டிகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் இடையிலான பிணைப்பை அவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும்.

வழியா இல்லை பூமியில்?

வயது என்பது வெறும் எண்தான். மனதில் தைரியம் இருந்தால் எந்த வயதிலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். நாம் நமக்கு எது வருமோ அதைச் செய்யலாம். இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ அருமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அருகில் இருக்கும் இடங்களிலேயே நடக்கும். அங்கெல்லாம் சென்றுவரலாம். பண வசதி உள்ளவர்கள் பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து, அதற்கு நிதி திரட்டுதல், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் என நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று ஒரு சிலர் கணக்கெழுதி தருகிறார்கள். கோயில், தேவாலயம், மசூதி என்று அவரவர் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டுத் தலங்களில் மனநிறைவுடன் சில புண்ணிய காரியங்களைச் செய்யலாம்.

அதிக வசதிகள் இல்லாத கிராமங்களில்கூட வயதானவர்கள் தென்னை ஓலையில் கீற்று கட்டுதல், பனை மட்டையிலான பொருட்கள் செய்தல் என உட்கார்ந்த இடத்திலேயே உழைத்துக்கொண்டு சொற்ப அளவிலேனும் சம்பாதித்துக்கொள்கிறர்கள். பிழைப்புக்காக இதைச் செய்பவர்களுடன், பொழுதுபோக்குக்காக இதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். பொழுதுபோக்குக்குப் பொழுதுபோக்கு. வருமானத்துக்கு வருமானம்!

தன் பிள்ளைகள் தங்களைக் கைவிட்டுவிட்டதாக வருந்திக்கொண்டிருப்பவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடலாம். நல்ல கதைகள் சொல்லுதல், பாடங்கள் சொல்லித் தருதல், கைத்தொழில் தெரிந்தால் அதைக் கற்றுத் தருதல், இசை, இலக்கியம் என்று பல்வேறு விஷயங்களை அறிமுகம் செய்தல்… என அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டும் அர்த்தமுள்ள பொழுதுகளாகச் செலவிடுவதை பலரும் கடைப்பிடிக்கிறார்கள்.

இதையெல்லாம் செய்வதற்குப் பெருமளவு பணம் தேவையில்லை. மனமிருந்தால் போதும். நாம் வாழ்ந்த இடத்தில் நல்ல தடங்களை விட்டுச் செல்வது அற்புதமான விஷயம். மனிதர்களாகப் பிறந்த நாம், இருக்கும் நாட்களை அர்த்தமுள்ளதாகச் செலவழிப்பதற்குக்கூட பொழுதுபோக்கை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம். எனவே, பொழுதுபோகவில்லை என எண்ணுவதை விட்டு நல்ல பொழுதை எப்படி உருவாக்கலாம் என்று சிந்திப்போம். பெரியவர்களின் அனுபவம் அடுத்த தலைமுறைக்கு நேர்த்தியான ஒரு பாதையை அமைத்துத் தரும். அந்தப் பாதையில் இன்றைய தலைமுறையினரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று உங்கள் பொழுதுகளை ஆக்கபூர்வமாக்கி உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!

(காற்று வீசும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in