வனமே  உன்னை வணங்குகிறேன்..! - 1

வனமே  உன்னை வணங்குகிறேன்..! - 1

“பயணங்கள் ஒருவரை அடக்கம் உள்ள மனிதராக மாற்றும். நீங்கள் இவ்வுலகில் எவ்வளவு சிறிய இடத்தை ஆக்கிரமித்திருக்கிறீர்கள் என்பது நீங்கள் பயணப்படும்போதுதான் உங்களுக்குத் தெரியும்” என்று பிரெஞ்சு புதின ஆசிரியர் கஸ்தவ் ஃப்ளொபெர் (Gustave Flaubert ) கூறியிருக்கிறார். பயணங்கள் அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்தவை. ஆனால், அந்தப் பயணத்தின் தாத்பரியத்தை நாம் முழுமையாக உணர்ந்திருக்கிறோமா?

வெளிநாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இன்றும்கூட சுற்றுலாப் பயணத்துக்காகக் கடன் வாங்கும் (travel loan) போக்கு அதிகமாக இருக்கிறது. உலகைச் சுற்றிப் பார்க்க அவர்கள் அவ்வளவு விரும்புகிறார்கள். தற்போது, இந்தியாவிலும் இந்தப் போக்கு வந்திருக்கிறது. பலரும் ‘டிராவல்’ நிறுவனங்கள் வழங்கும் சலுகைத் திட்டங்களில் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்’ என்று முழங்கிக்கொண்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்பவர்களும் அதிகம். ஆனால், பலர் எந்த சீஸனில் எங்கு செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்ற எவ்விதப் புரிதலும் இல்லாமல் சென்று திரும்புகின்றனர்.

இன்னும் சிலர் 'சூழல் இணக்கச் சுற்றுலா' (Ecotourism) என்று பயணப்படுகின்றனர். மலைப்பிரதேசம், வனம், பாலைவனம், அருவி, நீரூற்றுகள், கடற்கரைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் எனச் செல்கின்றனர். இது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், சூழல் இணக்கச் சுற்றுலா எனும் பெயரில் இயற்கையைப் பற்றிய புரிதல் எள்ளவும்கூட இல்லாமல், இயற்கைக்கு இடையூறு செய்வதில் ஈடுபடுகிறார்கள். சூழல் இணக்கச் சுற்றுலா என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி இந்தத் தொடரில் அலசுவோம்.

‘ரெஸ்பான்ஸிபிள் டூரிஸ்ட்'

சூழல் இணக்கச் சுற்றுலா செல்வதில் அனுபவம் மிக்க இளைஞரான குமார் சொல்வதைக் கேளுங்கள் – “பொழுதுபோக்குக்காகச் சுற்றுலா செல்லும் பயணிக்கும், சூழல் இணக்கச் சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. சூழல் இணக்கச் சுற்றுலாப் பயணியை ‘பொறுப்பான சுற்றுலாப் பயணி’ (Responsible Tourist) என்றே நான் அழைப்பேன். இயற்கையைக் காணச் செல்வது என்பது ஒரு தேடல். விலங்குகளின் உலகத்துக்குள் நாம் செய்யும் பிரவேசம் அது. அங்கே நாம் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும்.”
ஆம், வாழிடத்தில் எத்தனை பொறுப்புடன் நடந்துகொள்கிறோமோ, அதே பொறுப்புணர்வை வனத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். சரி, இதை எப்படிப் பின்பற்றுவது? குமார் விளக்குகிறார்.

“சூழல் இணக்கச் சுற்றுலாப் பயணியாக நான் ஒரு வனப்பகுதிக்குச் சென்றால் அங்குள்ள பச்சை வாசனையை உணர்வேன், அடர்த்தியான அமைதிக்கு நடுவே கேட்கும் வண்டின் ரீங்காரம் தொடங்கி, புலியின் உறுமல் வரை உன்னிப்பாகக் கேட்பேன். கண்களுக்குள் அடக்க முடியாத அளவுக்குக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பேன். ஆனால், இந்த அனுபவங்களைப் பெறுவதில் எந்த வகையிலும் இயற்கைக்கு இடையூறு செய்துவிட மாட்டேன்.



வனத்துக்குச் செல்லும்போது நான் வாசனை திரவியம் பூசிக்கொள்வதில்லை. அடர் நிறங்களில் ஆடை அணிவதில்லை, பெரிய சுமைகளைத் தூக்கிச் செல்வதில்லை. சிறிய அளவில்கூட குப்பையை அங்கு விட்டு வருவதில்லை. என் கேமரா ஷட்டர் எழுப்பும் ஓசைகூட பறவைகளுக்கு இடையூறாக அமைந்துவிடலாம் என்பதில் கவனமாக இருப்பேன். அப்படி இருப்பவர்கள்தான் பொறுப்பான சுற்றுலாப் பயணிகள். அவர்கள்தான் சூழல் இணக்கச் சுற்றுலாவை உண்மையாகவே உணர்ந்துகொண்டிருப்பவர்கள்” என்கிறார் குமார்.

கட்டுப்பாடு அவசியம்

ஆக, சூழல் இணக்கச் சுற்றுலா செல்பவர்களுக்குச் சுயக் கட்டுப்பாடு மிக அவசியம். எழுத்தாளரும் இயற்கை ஆர்வலருமான நக்கீரன் இதைத்தான் வலியுறுத்துகிறார்.

“காடு, மலை, கடல் போன்ற இடங்கள் வெறும் சுற்றுலாத் தலம் என்ற நினைப்பு மக்கள் மனங்களிலிருந்து ஒழிய வேண்டும். இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள். இயற்கையைக் காதலிக்காதவர்கள் சூழல் இணக்கச் சுற்றுலாவுக்குச் செல்லாமல் இருப்பதே நலம். சூழல் இணக்கச் சுற்றுலா செல்வோருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே இயற்கை ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான இடமாக மட்டும் இயற்கைப் பிரதேசங்கள் இருக்கும்.

இயற்கையைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் சூழல் இணக்கச் சுற்றுலாவை அரசு ஆரம்பித்திருக்கலாம். ஆனால், அதை வணிகமயாக்கும் சிலரால் இயற்கைக்கு அச்சுறுத்தல் உருவாகிவிட்டது. காடுகள் சார்ந்த இடங்களில் நிறைய சாலைகள் போடப்பட்டுவிட்டன. உதாரணத்துக்கு மூணாறு ஒட்டிய பல பகுதிகளில் சாலை வசதிகள் வந்துவிட்டன. இதனால், வனத்துக்குள் அத்துமீறி நுழைவதும் எளிதாகிவிட்டது.

வனத்துக்குள் நுழைய மிகக் கடுமையான கெடுபிடிகளை விதிக்க வேண்டும். சிலர் காட்டுக்குள் சென்று மது அருந்துகின்றனர். காடு ஒன்றும் ‘பார்’ அல்ல என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவர்கள் பொறுப்பற்றவர்கள்தானே? அவர்களுக்கு இயற்கைப் பிரதேசங்களில் என்ன வேலை?” என்று கேட்கும் நக்கீரன், நாம் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு எப்படி நடந்துகொள்வது என்பதையும் விளக்குகிறார்.
“காட்டுக்குள் செல்லும்போது வனவிலங்கு களிடமிருந்து எப்படித் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று பலருக்குத் தெரிவதில்லை. காட்டுத் தீ ஏற்பட்டால் எப்படித் தப்பிப்பது என்று எந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் செல்பவர்கள் பலர். வனம் வேறு, விலங்கியல் பூங்கா வேறு. இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு கோயிலுக்குச் செல்லும்போது ஆடைக் கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு என நாம் பல நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம். அதேபோல், வனத்துக்குள் செல்லும்போதும் சுயக் கட்டுப்பாட்டுடன் செல்ல வேண்டும். சூழல் இணக்கச் சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புபவர்களுக்குக் குறைந்தபட்சம் ஓரிரு நாளாவது விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரே அவர்களை உள்ளே அனுப்ப வேண்டும்.

இவ்விஷயத்தில், நாம் கேரள அரசிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். கேரள வனப்பகுதிகளில் சூழல் இணக்கச் சுற்றுலா செல்பவர்களுக்கு அங்குள்ள பழங்குடிகள்தான் வழிகாட்டியாக உடன் செல்கின்றனர். நான் ஒருமுறை அப்படிப் பயணம் செய்தபோது, என்னுடன் வந்த பழங்குடி அன்பர், கையில் ஒரு கோணிப்பையை வைத்திருந்தார். ‘பொறுப்பற்ற பயணிகள்’ பலர் வனப் பாதையில் விட்டுச் சென்ற குப்பைகளை அப்புறப்படுத்தி, அந்தப் பையில் சேகரித்துக்கொண்டே வந்தார். மீண்டும் நாங்கள் சமவெளிக்கு வந்தபோது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் அதைக் கொட்டினார். அவர்களுக்கு வனத்தின் அருமை தெரிந்திருக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை” என்கிறார் நக்கீரன்.

இயற்கையைப் பொறுப்புணர்வுடன் அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும். அடிப்படை இயற்கைக் கல்வி இல்லாததால்தான் குரங்கணியில் தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்ப்பது குறித்து இந்தத் தொடரில் விவாதிப்போம். சூழல் இணக்கச் சுற்றுலா செல்வோருக்கான ஆலோசனைகள் மட்டுமல்லாமல், நம் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வளமான இயற்கைப் பிரதேசங்கள் குறித்த அறிமுகத்தையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்!

(பாதை நீளும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in