தொடாமல் தொடரும் - 5

தொடாமல் தொடரும் - 5


தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த ரொஸாரியோ கோபமாக வந்து, “குடு போனை…” என்று வேகமாக வாங்கினார்.
ஏதோ கோபமாகப் பேச வந்தவர் அப்படியே மனதிற்குள் விழுங்கிக் கொண்டு, முகத்தை சாந்தமாக வைத்துக்கொள்ள முயன்றபடி, “இல்
லப்பா... நான் கோபமால்லாம் போகல. இங்க வாசல்ல யாரோ வந்த மாதிரி சத்தம் கேட்டுச்சி. அதான் அம்மாட்ட குடுத்துட்டுப் போனேன்'' என்றார்.



“ஏம்ப்பா இந்த வயசுல பொய் சொல்லிக்கிட்டு… சமாளிக்காதிங்கப்பா. எனக்குத் தெரியாதா? இது இன்னிக்கு இந்த விஷயத்துக்காக வந்த கோபம் இல்லப்பா. எனக்குத் தெரியும். நான் உங்களை விட்டுட்டு இங்க வந்ததுல ஏற்பட்ட ஒரே கோபம்தான். அந்தக் கோபம்தான் அப்பப்ப வேற வேற ரூபத்துல எல்லா விஷயத்துலயும் சீறிப் பாய்ஞ்சிட்டிருக்கு.''

“இப்ப நீதான்ப்பா கோபமா பேசறே…” என்றார் ரொஸாரியோ அமைதியாக. 

போன் கவர் செய்யாத எதிர்ப்புறத்தில் நின்ற நான்சி, “கொஞ்சம் அமைதியாப் பேசுங்க” என்று ஜாடை காட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

“இல்ல…தெரியாமதான் கேக்கறேன். நான் ஒரே நாள்ல அந்த முடிவெடுத்தனா? லவ் பண்றவங்க சொல்லாம ஓடிப் போவாங்களே, அந்த மாதிரி திருட்டுத்தனமா நாங்க புறப்பட்டு வந்தமா? இந்த ஜாப் எனக்கு பெட்டர் ஆப்பர்சூனிட்டின்னு விபரமா எடுத்துச்சொல்லி உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுதான வந்தோம்?''

“இப்ப ஏன்ப்பா அதைப் பத்திப் பேசிக்கிட்டு?”

“எப்பப் பாரு… ஏதாச்சும் குத்திக்காட்டிக்கிட்டே இருக்கிங்க…உங்களுக்கு ரிஸ்க் எடுக்க பயம். கடைசி வரைக்கும் கவர்மென்ட் ஜாப்ல அந்த ஒரே நாற்காலிய தேய்ச்சிட்டு வந்துட்டிங்க. அதே மாதிரிதான் நானும் செய்யணுமா?”

“என்ன பண்ணச் சொல்ற? அப்போ வீட்ல எங்கப்பா, அம்மா இருந்தாங்கப்பா. திடீர்னு அனாதையாகி நின்ன உன் சித்திய வேற கூட்டிட்டு வந்து நம்ம வீட்ல தங்கவெச்சி காலேஜ்ல படிக்க வெச்சேன். நீ அப்ப ஸ்கூலுக்குப் போயிட்டிருந்த. எனக்கும் லண்டன்ல வேலை கிடைச்சிச்சிப்பா. அந்தக் காலத்துல அவங்க தர்றதா சொன்ன சம்பளம் ரொம்பப் பெரிய சம்பளம்.”

“அப்பா…இந்த ஃப்ளாஷ்பேக் கதைய அம்பது தடவை கேட்டுட்டேன். ஏன் போகல? போயிருக்கணும். போயிருந்தா உங்க திறமைக்கு எங்கயோ போயிருப்பிங்க. ஊர்ல நாலு ப்ராப்பர்ட்டி வாங்கிப் போட்ருப்பிங்க. நான் பணத்தத் துரத்திக்கிட்டு இங்க வந்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது”

“எங்கப்பா பராலிசிஸ் வந்து படுத்துட்டாரு. தினம் அவருக்கு எல்லாம் நான்தான் பாக்கணும். பெட் மாத்தி, குளிப்பாட்டணும். உங்கம்மா ஸ்கூல்ல டீச்சர் வேலையும் பாத்துக்கிட்டு குடும்பத்தையும் கவனிக்க முடியாதுப்பா. உனக்கு இந்த ஃப்ளாஷ்பேக்கும் தெரியும். ஒரு நர்ஸ் போட்டுக்க வேண்டியதுதானன்னு சர்வ சாதாரணமா சொல்லிடுவே. உனக்கு சில வேல்யூஸ் புரியாது. நீ வளர்ந்த விதம் வேற. நான் வளர்ந்த விதம் வேற. விட்ருப்பா. இதுக்கு மேல இதைப் பத்திப் பேச வேணாம். வெச்சிடறேன்.''

சட்டென்று போனை அணைத்த ரொஸாரியோ, அமைதியாக ஜன்னலுக்குச் சென்று திரைச்சீலையை நகர்த்தி வெளியே பெய்துகொண்டிருக்கும் மழையைப் பார்க்கத் தொடங்கினார்.

நான்சி அவர் அருகில் வந்து அமைதியாக நின்றாள்.

“என்னங்க செய்யல அவனுக்கு? கான்வென்ட்ல படிக்க வெச்சோம். பெரிய காலேஜ்ல படிக்க வெச்சோம். ஒவ்வொரு தடவ காலேஜ்க்கு ஃபீஸ் கட்றப்பவும் நம்ம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும். பாசமா பேசறேன், அக்கறையா கேக்கறேன்னு அவன் வாய்தான் சொல்லுதே ஒழிய… கொஞ்சம்கூட மதிக்க மாட்டேங்கறானே… ஏங்க அவன் இப்டி இருக்கான்?''

“நான்சி…இந்த மழை மாதிரி நமக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லைன்னா ஏமாற்றம் இல்ல.”

“ஆனா சொந்தப் புள்ளகிட்ட எப்படிங்க எதிர்பார்க்காம இருக்கறது? பணத்தையா எதிர்பாக்கறோம்? பாசத்தை மட்டும்தான எதிர்பாக்கறோம்?”

“டிட்டாச்டு அட்டாச்மென்ட்தான் எல்லா உறவுக்கும் நல்லதுன்னு சொல்றாங்க. விலகலுடன் கூடிய நெருக்கம்! அதெப்படின்னுதான் எனக்கும் புரியல. விலகியாச்சுன்னா அப்பறம் எப்படி நெருக்கம் சாத்தியம்? ரத்த பந்தம் மேல எப்படி மனசுல தீர்மானிச்சுக்கிட்டு அந்த விலகல் நெருக்கம் காட்றது?''

“சரி…டின்னர் ரெடி பண்ணிட்டேன். வாங்க…சாப்புடலாம்.”

ரொஸாரியோ மெல்லச் சிரித்து, “நான் நாலு ப்ராப்பர்ட்டி வாங்கிப் போட்ருக்கணும்னு சொல்றான் பாரு…அங்கதான் வலிக்குது. அப்பாவ ஒரு பணம் சம்பாரிக்கிற மெஷினா மட்டும்தான் பார்க்கத் தோணுதா?”

“சின்னப் பையன்…ஏதோ யோசிக்காம பேசிட்டான். விடுங்க.”

“சின்னப் பையனா? ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா நான்சி. எனக்கு என்ன கவலைன்னா இவன் பேசறதையெல்லாம் பக்கத்துல இருந்து அந்தப் புள்ளைங்களும் கேக்கும்ல? ஒரு அப்பாகிட்ட இப்படித்தான் பேசணும் போலருக்குன்னு அவங்க மனசுல தப்பாப் பதியாதா? பக்கத்துல அவன் பொண்டாட்டியும்தான இருப்பா. அப்பறம் அவ நம்மளை எந்த அளவுக்கு மதிப்பா?”

“எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.”

“நாளைக்கு மொத காரியமா ஒண்ணு செய்யப் போறேன்.

நீ வேணாம்னு தடுக்கக் கூடாது. சொல்லிட்டேன்.”

“என்னங்க?”

“அவன் என் கணக்குல அப்பப்போ பணம் போட்டுட்டு வர்றான்ல… அதை நான் செலவு பண்றதே இல்ல. பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட்டாதான் போட்டு வெச்சிருக்கேன். இதுவரைக்கும் நீ அனுப்பிச்ச பணம் இவ்வளவுப்பான்னு கணக்குப் போட்டுத் திருப்பி அனுப்பி வெச்சிடப் போறேன்.”

“அய்யோ! என்னங்க இது…பிரச்சினை பெரிசாயிடுங்க.''

“என்ன பெரிய பிரச்சினை? வாரம் ஒரு தடவ பேசறான் இப்போ. இனிமே மாசம் ஒரு தடவ பேசுவான். இல்ல சுத்தமா பேசவே மாட்டான். அவன் பேசுனாலும் பேசாட்டாலும் இங்க நம்ம வாழ்க்கைல ஏதாச்சும் மாறப் போகுதா சொல்லு.”

“அதுக்காக இப்படிச் செய்யணுமா? உன் உறவே வேணாம்னு ஒதுக்கி வைக்கிற மாதிரி ஆயிடுங்க.”

“இடுப்பொடிஞ்சு நீ ஹாஸ்பிடல்ல இருந்தப்ப உன் மருமக வந்தாளா, இல்ல நமக்கு உறவே இல்லாத அந்த அஞ்சலி வந்தாளா? சொல்லு. அன்பு காட்றவங்கதான் சொந்தம். நமக்குப் பொறந்துட்டதால பட்டும் படாம தொடர்ந்துட்டிருக்கற உறவைச் சொந்தம்னு சொல்றது அபத்தமா இருக்கு.''

“புரியுது. இப்ப நீங்க இருக்கற மனநிலையில எந்த முடிவும் அவசரப்பட்டு எடுத்துடாதிங்க. நாளைக்கு சர்ச்சுக்குப் போயிட்டு வருவோம். அப்ப உனக்கு மனசு தெளிவா இருக்கும். இப்ப சாப்புட வாங்க'' என்று ரொஸாரியோவின் கையைப் பற்றி டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள் நான்சி.

வீட்டுக்குள் வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் தன் ஸ்கூல் பேகை எடுத்துத் தரையில் அமர்ந்து புத்தகங்களைப் பரப்பிக்கொண்டு ஹோம்வொர்க் செய்யும் பரணியைச் சமையலறை வேலைகளைக் கவனித்தபடியே பார்த்தாள் அஞ்சலி.

பாவம்… சின்னப் பையன்… என்ன தெரியும்? அப்பாவைப் பற்றித் தவறாகச் சொன்னதும் பொங்கிவிட்டான். காரணத்தை விசாரிக்காமல் நானும் அடித்தது நியாயமே இல்லை.

நறுக்கென்று சத்யா கேட்டதைப் போல… நமக்குச் செல்லுபடியாகும் இடத்தில் மட்டும்தானே கோபத்தைக் காட்டுகிறோம்?

என் கோபம் இவன் மீதா? இப்படியான ஒரு சூழ்நிலையின் மீதா? இல்லை, இந்தச் சூழ்நிலைக்கான காரணகர்த்தாவின் மீதா? பரணி ஹோம்வொர்க் முடித்துவிட்டு புத்தகங்களை ஸ்கூல் பேகிற்குள் வைத்துவிட்டு, ரிமோட்டை எடுத்து டிவி போட… மழை காரணமாக டிவியில் காட்சிகள் வராததால் அணைத்தான். அடுத்து என்ன செய்வதென்று யோசித்து, ஒரு மர அலமாரியைத் திறந்து டிராயிங் நோட்டும், க்ரையான் பென்சில்களும் எடுத்துக்கொண்டு வந்து வரையத் தொடங்கினான்.

தட்டில் சுடச்சுட இட்லிகளும், சட்னியும் வைத்து அவனருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.

“நான் உன்னை அடிச்சது தப்புடா. சாப்புடு.”

“அப்பா எங்க இருக்காருன்னு சொல்லு. அப்பதான் சாப்டுவேன்” என்றான் பரணி வரைவதிலிருந்து நிமிராமல்.

“அமெரிக்கால.''

“நான்சி பாட்டியோட பையன் ஆஸ்திரேலியாலேர்ந்து போன்ல பேசறார்ல? அப்பா ஏன் போன்ல பேசவே இல்ல?”

“அதான் சொல்லிருக்கனே… இங்க பகல்னா அங்க ராத்திரி. நீ முழிச்சிட்டு இருக்கறப்ப அவரு தூங்கிட்டிருப்பார். அப்பப்ப எங்கிட்ட பேசிட்டுதான் இருக்கார்.''

“எங்கிட்ட பேசணும்னு அவருக்கு ஆசையா இருக்காதா? அவருக்கு இல்லன்னாலும் எனக்கு இருக்காதா?''

அவனுடைய கேள்வியால் உடைந்துபோன அஞ்சலி விம்மலுடன் அமைதியாகச் சொன்னாள், ‘‘ உண்மைய சொல்றேன். உனக்குப் புரியாது. ஆனா புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. உன் அப்பா அமெரிக்கால இல்ல. சென்னையில இருக்கார். ஆனா.. என்னோடயும் உன்னோடயும் அவர் பேச மாட்டார்.''

“ஏன்?”

“நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம்” என்றவள் அவனை இழுத்து அணைத்துக்கொண்டு வாய்விட்டு அழத் தொடங்கினாள்.

(தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in