நிழற்சாலை...

நிழற்சாலை...

குரல் நுட்பம்

ஜோடியின் பிரிவில்
வேப்பமரக் கிளையமர்ந்தது
தனித்த புறா.
இசைக் கருவிகளில்
இறந்த புறாவின் குரலை
இசைக்கத் தெரியாமல்
புறாவின் குரலைத் தேடி
கைப்பேசியில் இசைத்தும்
சலனமில்லை அதனிடம்.
அதன் ஜோடிக் குரலில்
இருக்கும் நுட்பம்
யாருமறிய வாய்ப்பில்லை
அந்தப் புறாவைத் தவிர.
            - ஏந்தல் இளங்கோ
சொல்லின் இடைவெளிகள்...

வீட்டின் ஈசான மூலையில்
இடைவிடாத பல்லிச் சத்தம்.
குலதெய்வமான
கருப்பண்ணசாமியின்
அருள்வாக்கு
என்கிறார் அப்பா.
தீய நிமித்தத்துக்கான
அறிகுறி என்கிறாள் அம்மா.
இறந்துபோன தாத்தாவின்
திருவலம் என்கிறாள் பாட்டி.
பாவம் வாலறுந்து துடிக்கும்
பல்லியின் துன்பத்தை
யாரறிவார் என் வீட்டில்?
               - வெ.தமிழ்க்கனல்


நெகிழி மனிதர்கள்

அவனிடம் தூண்டில் வாங்கினேன்
அதோடு ஒரு குப்பியும் கொடுத்தான்
உள்ளே நெகிழி புழுக்களாம்.
மண்ணைத் தோண்டினாலும்,
நெகிழி குப்பைகளைத் தோண்டினாலும்
கிடைக்காதாம்.
வாய்க்கால்களையும்,
குளங்களையும், ஆறுகளையும்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
அடுத்த முறை தூண்டிலோடு
அவனே தருவான்
நெகிழி குப்பிகளில் தண்ணீரும்
நெகிழி தொட்டியும்
சில நெகிழி மீன்களும்.
நாமும் இனி கவனமாக இருக்கவேண்டும்
மாறலாம் இல்லை மாற்றப்படலாம்
நெகிழி மனிதர்களாக.
              - வலங்கைமான் நூர்தீன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in