உலகம் சுற்றும் சினிமா - 17: சமூகத்தின் ஒட்டுண்ணிகள்! 

பாராஸைட் (2019)
உலகம் சுற்றும் சினிமா - 17: சமூகத்தின் ஒட்டுண்ணிகள்! 

கதாபாத்திரங்களின் அறிமுகம், அவர்கள் வாழும் சூழல், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, அந்தப் பிரச்சினைக்கான தீர்வு - இதுதான் பெரும்பாலான படங்களின் திரைக்கதையின் பொதுவான அமைப்பு. நுட்பமான பார்வை கொண்ட திரைக் கலைஞர்களால் இந்தச் சட்டகத்துக்குள் ஜாலங்கள் காட்டி அற்புதமான படைப்புகளைத் தர முடியும். திரைக்கதையை வித்தியாசமான முறையில் இயக்குநர்கள் கையாளும்போதே நாம் அத்திரைப்படத்துடன் ஒன்றி பயணிக்க முடியும். அந்த வகையில், வழக்கமான திரைக்கதையில் சின்ன மாற்றங்கள் செய்து, திரைமொழியின் வாயிலாக அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று ‘பாராஸைட்’ (Parasite) படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் கொரிய இயக்குநர் பொங்-ஜுன்-ஹோ.

‘மெமரிஸ் ஆஃப் மர்டர்’ (2003), ‘தி ஹோஸ்ட்’ (2006) போன்ற இவரது வெற்றிப் படங்களின் வரிசையில் உலக சினிமா ஆர்வலர்களின் பாராட்டுகளை வெகுவாக அள்ளியது ‘பாராஸைட்’. கொரிய மொழியில் ‘கி செங் சுங்’ என்ற பெயரில் வெளிவந்த இத்திரைப்படம், உலக அரங்கில் ‘பாராஸைட்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘கி செங் சுங்’ என்றால் ஒரு வகை குடற்புழு வகை. பணக்காரக் குடும்பத்தினரின் செல்வத்தை அவர்களுடன் இருந்துகொண்டே, அவர்களுக்குத் தெரியாமலேயே உறிஞ்சி எடுக்கும் ஒட்டுண்ணிகளைப் பற்றிய கதைதான் இது.

கதைக் களம் என்ன?

தென் கொரியாவில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் கி-வூ. அவனுடைய அப்பா, அம்மா, அக்கா என்று அந்த நால்வரின் வாழ்க்கையும் மிகச் சிறிய வீட்டின் அறைகளில் முடங்கிவிடும். கி-வூ வின் நண்பன் ஒருவன், பெரும் பணக்காரரான பார்க்கின் பெண்ணுக்கு ‘டியூஷன்’ ஆசிரியராக இருப்பான். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்ததும், அந்த வேலையை கி-வூக்கு சிபாரிசு செய்வான். போலிச் சான்றிதழுடன் அந்த வேலையைப் பெறும் கி-வூ, சாமர்த்தியமாகத் தன் அக்காவை, பார்க்கின் மகனின் ஓவிய ஆசிரியையாக வேலைக்குச் சேர்த்துவிடுவான்.

அதைத் தொடர்ந்து அக்கா – தம்பி இருவரும் பல சதிகள் செய்வார்கள். பார்க் குடும்பத்தின் டிரைவரைத் தந்திரமாக வேலையை விட்டு விரட்டிவிட்டு, தங்கள் அப்பாவை அந்த வேலையில் சேர்த்துவிடுவார்கள். பல ஆண்டுகளாகப் பார்க் குடும்பத்தின் பணிப்பெண்ணாக இருக்கும் கூக் மூனையும் வேலையைவிட்டு அகற்றிவிட்டு, தங்கள் தாயையே அந்தப் பணிக்குச் சிபாரிசு செய்து சேர்த்துவிடுவார்கள்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பார்க்கின் மனைவிக்குத் தெரியாது. பார்க்கின் குடும்பம் வெளியூர் போயிருந்த ஒரு நாள் இரவில், கி-வூவின் குடும்பம் அந்தப் பெரும் வீட்டில் சுகபோகமாகக் குடித்து மகிழ்ந்துகொண்டிருக்கும். அப்போது அவர்களால் வேலையைவிட்டு விரட்டப்பட்ட கூக் மூன் அங்கே வருவாள். அவளிடமும் ஒரு ரகசியம் இருக்கும். கடனாளிகளுக்குப் பயந்து தன்னுடைய கணவனை அந்த வீட்டினுள் இருக்கும் பதுங்கு குழியில் மறைத்து வைத்திருப்பாள் கூக் மூன். அப்படி ஒரு பதுங்கு குழி இருப்பது பார்க்கின் குடும்பத்துக்கே தெரியாது. இதைத் தெரிந்துகொள்ளும் கி-வூவின் தாய், இருவரையும் போலீஸில் பிடித்துக்கொடுக்கப்போவதாக மிரட்டுவாள். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அப்போதுதான் அறிந்துகொள்வாள் கூக் மூன். பதிலுக்கு அவளும் அவர்களை மிரட்டுவாள்.

இதற்கிடையே, முதலாளியின் குடும்பம், சுற்றுலா ரத்தாகித் திரும்பிவிடும். அதற்குப் பின் அவ்வீட்டிலிருந்த கி-வூவின் குடும்பம், பாதாள அறையில் வாழும் கூக் மூனின் கணவன்… அனைவரும் என்னவானார்கள் என்பதை யாருமே கணிக்க முடியாத திரைக்கதையுடன் சொல்லி, பார்வையாளர்களைத் திகைக்க வைத்திருப்பார் இயக்குநர் பொங்-ஜுன்-ஹோ.



திரைக்கதை திருப்பம்

ஆரம்பம் முதல் மெல்லிய நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாகச் செல்லும் திரைக்கதையின் இறுதி இருபது நிமிடங்களில் கோரமும் வன்முறையும் தாண்டவமாடும். இறுதிக்காட்சியில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். ஒரே திரைக்கதையை இப்படிப் பல ‘ஜானர்’களின் படிநிலைக்குக் கடத்திச் செல்லும் சோதனை முயற்சியாக உருவான இப்படம், உலக சினிமா ரசிகர்களை ஒருசேரக் கவர்ந்தது. அதன் காரணமாகவே கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘பால்மி டி-யோர்’ விருது பொங்- ஜுன்-ஹோவுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற முதல் கொரிய இயக்குநரும் இவர்தான்.

“ரசிகர்களைத் திரைக்கு முன்பு ஒரே மனநிலையில் வைத்திருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அவர்களைத் திரைமொழியின் வழியாக ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுதான் என்னுடைய கடமை என்று கருதுகிறேன்" என்று ஒரு முறை கூறியுள்ளார் பொங்-ஜுன்-ஹோ.

திரைக்கதையில் நாம் கணிக்க முடியாத இடத்தில் திருப்பத்தை வைத்து, கதையோட்டத்தின் பாதையையே லாவகமாக, தலைகீழாக மாற்றும் அவரது பாணி அனைவருக்கும் பிடித்த ஒன்றாகிவிட்டது. உலக சினிமா அரங்கில் கொரியத் திரைப்படங்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதில் சக இயக்குநர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் பொங்-ஜுன்-ஹோ.

வசதியான வாழ்க்கை வாழ, நலிந்தவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்பட்சத்தில் அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் செய்யும் தந்திரங்கள் எந்த எல்லை வரை செல்லும் என்று பேசும் படம் இது. பணம் படைத்தவர்களின் பார்வையில் ஏழைகள் அற்பப் பூச்சிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதையும் சமரசம் இன்றி பதிவுசெய்திருப்பார் பொங்-ஜுன்-ஹோ. இதில் யார் மேல் குற்றம் என்ற குறுக்கு விசாரணை நடத்தவே முடியாத வண்ணம், சந்தர்ப்ப சூழ்நிலையை மட்டுமே திரைக்கதையின் பிரதான கருவியாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருப்பார். அதனால்தான், இந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள் உலக சினிமா ரசிகர்கள்!

கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இல்லாமல் தனித்துவமான படங்கள் உருவாவதில்லை. பெரும் முயற்சியாக 12 வருடங்கள் படப்பிடிப்பு நடத்தி எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in