களத்துக்கு வரும் காங்கிரஸ் வேட்பாளர்கள்... இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!

களத்துக்கு வரும் காங்கிரஸ் வேட்பாளர்கள்... இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!

எடுத்ததுமே கம்பு சுற்றாமல் இந்த நிமிடம் வரை கப் சிப் என்று இருக்கும் காங்கிரஸ் வட்டாரத்தில், வரும் வாரத்திலிருந்து களேபரக் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ் பட்டியலில் எதிர்பார்த்த பல தொகுதிகள் மிஸ் ஆகி இருப்பதும் முக்கியத் தலைகளுக்கு சீட் இல்லாமல் போயிருப்பதும் அந்தக் களேபரக் காட்சிகளுக்குக் காரணமாக இருக்கலாம். சிவகங்கை தொகுதியில் கடந்த முறை தனித்துப் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற கார்த்தி சிதம்பரம் இந்த முறையும் கனவுக்கோட்டை கட்டுகிறார். ஆனால், அவர் மீதுள்ள வழக்கு எந்த நேரத்திலும் சிக்கலைத் தரலாம் என்பதால் கட்சித் தலைமை கொஞ்சம் யோசிக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், “இந்த முறை கார்த்திக்கு சீட் இல்லைங்கோ” என்று தம்பட்டம் அடித்தபடி களத்துக்கு வருகிறார். ஆனால், இவருக்கு சோனியாவுடன் இருக்குமளவுக்கு ராகுல் காந்தியுடன் பரிச்சயம் இல்லாதது பெரிய வீக். ஆனாலும் தனக்கான வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார் கார்த்தி. இதனால், அவரது ஆதரவாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலையிலிருந்து கட்சியின் அத்தனை பிரிவுகளிலும் இருக்கும் தங்களது விசுவாசிகளிடம், ‘கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கை தொகுதியில் சீட் கொடுக்க வேண்டும்’ என்று கைப்பட கடிதம் எழுதி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, கார்த்திக்கே சீட் இல்லை என்றாலும் சிதம்பரம் யாரை நினைக்கிறாரோ அவர்தான் சிவகங்கை தொகுதியின் வேட்பாளர்.

விருதுநகர் தொகுதி மீண்டும் மாணிக்கம் தாகூருக்கே போகிறது. கர்நாடக மாநில கட்சிப் பொறுப்புகளைக் கவனிக்கும் அகில இந்திய செயலாளரான இவர் சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகன். நீண்ட காலமாக ராகுலின் ‘குட் புக்’கில் இருப்பவர். இவருக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் இவரது சித்தப்பா சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் கிடைப்பது சிரமமே. அதேநேரம், ஈரோடு அல்லது திருப்பூர் தொகுதி கிடைக்கும் என்று காத்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கரூருக்கும் விருதுநகருக்கும் கல்லெறிந்து பார்ப்பதாகச் சொல்கிறார்கள். தொகுதியில் பெருவாரியாக இருக்கும் நாயக்கர் ஓட்டுகளைக் கணக்கில் வைத்தே ஈவிகேஎஸ் விருதுநகரை நோக்குவதாகச் சொல்கிறார்கள்.

தேனி தொகுதிக்குப் போட்டியே இல்லை. தனது நெடுநாள் நண்பரான குலாம் நபி ஆசாத்தின் தயவில் இந்த முறையும் அலுங்காமல் குலுங்காமல் தேனியை தனக்காக வாங்கிவிட்டார் ஜெ.எம்.ஆரூண். அங்கே இந்த முறையும் அவரே போட்டியிடலாம். அல்லது இளையவரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இங்கு போட்டியிடுவதால் ஆரூணும் தனது மகன் அசன் மௌலானாவை (இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர்) நிறுத்தக்கூடும். ஆக சீட் ஆரூண் குடும்பத்தை விட்டு வெளியில் போகாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in