ரஜினி சரிதம் 05: ஆறிலிருந்து எழுபது வரை: மூட்டை தூக்கிய ‘உழைப்பாளி’

ரஜினி சரிதம் 05: ஆறிலிருந்து எழுபது வரை:  மூட்டை தூக்கிய ‘உழைப்பாளி’

தானொரு தொழிலாளி என்கிற நினைப்பு ரஜினிக்கு எப்போதுமே உண்டு. 1997-ல், பெப்சி - படைப்பாளிகள் பிரச்சினை வெடித்து ஆறரை மாதம் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அதற்கு முன்னோட்டமாக அமைந்தது, 1992-ல் ஊதிய உயர்வு கோரி பெப்சி தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம்.

‘அண்ணாமலை’யின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பி.வாசு இயக்கத்தில், விஜயா - வாஹினி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘உழைப்பாளி' படத்துக்கு ரஜினியின் பிறந்தநாளில் பூஜை போடப்பட்டது. அதில் கலந்துகொண்டு, ரஜினிக்குக் கைநிறையத் தங்கக் காசுகளைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் பி.நாகி ரெட்டி. அட்வான்ஸ் தொகையைத் தங்கக் காசுகளாகப் பெற்றுக்கொண்ட ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான்.

தமிழ்நாட்டில் பெப்சி வேலைநிறுத்தம் என்பதால், படப்பிடிப்பு மைசூருக்கு மாற்றப்பட்டது. அங்கேயும், ரஜினிக்கு மேக்கப் மேன், டச்சப் பாய் என்று யாரும் வரவில்லை. அப்போது ரஜினி தனக்குத்தானே மேக்கப் போட்டுக்கொண்டு நடித்தார்.

பழசை மறக்காதவர்

பின்னர் மங்களூரு அருகேயுள்ள பைக்கம்பாடி என்ற ஊரில் ஸ்டீல் தொழிற்சாலை ஒன்றில் படப்பிடிப்பு நடந்தது. அங்கே, ரஜினி கூலித் தொழிலாளியாக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. மூட்டையை முதுகில் தூக்கிச் சென்று லாரியில் ஏற்றுவதுபோல காட்சி. மூட்டை தூக்குவது ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதை ரஜினிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டி, மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் பி.வாசு. அந்தத் தொழிலாளியை அழைத்து அக்கறையுடன் விசாரித்துவிட்டு, அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்ட ரஜினி, “அண்ணே... நீங்க எதுவும் சொல்லித் தர வேணாம். கேமரா பக்கத்துல நின்னு வேடிக்கை பாருங்க” என்று சொல்லிவிட்டு, அவரிடமிருந்து மூட்டை தூக்கும் கொக்கியை மட்டும் வாங்கிக்கொண்டார். அசல் மூட்டை தூக்கும் தொழிலாளியைப் போலவே கொக்கியை லாவகமாக மூட்டையில் குத்தித் திருகி, பிடிமானம் கிடைத்ததும் அலேக்காக ஒரே உந்துதலில் தூக்கி தனது முதுகில் கிடத்திக்கொண்டார்.

ஏற்கெனவே முதுகில் இருக்கும் மூட்டையின் மீது இரண்டாவது மூட்டையையும் போடச் சொன்னவர்... அப்படியே ஆடாமல், அசையாமல் இரண்டு மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு நடந்துசென்று லாரியில் ஏற்றினார். இதை சற்றும் எதிர்பாராத இயக்குநர் பி.வாசு வியந்துபோய், “எப்படி சார்?” என்றார். அதற்கு ரஜினி, “பெங்களூரு அரிசி மண்டியில் இது எனக்குப் பழகிப்போன வேலை. அப்போல்லாம் அரைநாள் செலவழிச்சு 100 மூட்டைகள் தூக்கினால் 10 ரூபாய் கூலி கிடைக்கும்” என்று பழசை நினைவுகூர்ந்தார் ரஜினி!

வியந்துபோன வாசு, ரஜினிக்காக அந்தப் படத்தில் ஒரு வசனத்தைச் சேர்த்தார். “சார்... நீங்க வேலை கொடுக்கிறேன்னு சொன்னப்போ கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சம்பளம் வாங்குற வேலைன்னு நினைச்சேன். நமக்கெல்லாம் கஷ்டப்பட்டு மூட்டை தூக்கி வேலை செய்யணும் சார். முகமெல்லாம் அப்படியே முத்து முத்தா வியர்வை வடியணும். அப்போதான் சார்... கல்லைச் சாப்பிட்டாலும் நல்லா ஜீரணம் ஆகும். முள்ளு மேல படுத்தாலும் தூக்கம் வந்துடும்...” என்று ரஜினி பேசிய அந்த வசனத்துக்கு திரையரங்கில் விசில் பறந்தது.

நெல் மூட்டையும் மெத்தைதான்!

இன்னொரு சம்பவம். ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிக்கும் தேவிக்கும் இடையிலான காதல் காட்சிகள் சிலவற்றை, அரிசி ஆலை ஒன்றில் படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். அன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, “உங்களுக்கான காட்சி மாலை 4 மணிக்குத்தான்... அதுவரை நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்” என்று ரஜினியிடம் சொன்னார் இயக்குநர். ரஜினி என்ன நினைத்தாரோ... மதிய உணவு உண்டபின் அந்த அரிசி ஆலையில் அரவைக்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மீது படுத்துத் தூங்கிவிட்டார்.

பின்னர் 3 மணிக்கு எழுந்து சுயமாகவே டச்சப் செய்துகொண்டு இயக்குநர் முன் வந்து நின்றார். அப்போது, “நெல் மூட்டைகள் மீது படுத்துத் தூங்கினீர்களே... நெல்லில் உள்ள சுனை உடம்பில் குத்தி உங்களுக்கு அரிக்கவில்லையா?” என்று கேட்டார் எஸ்.பி.எம். அதற்கு ரஜினி, “எனக்கு இதெல்லாம் சகஜம் சார்... இது மூட்டை தூக்கின உடம்பு... நெல் மூட்டை எனக்கு மெத்தை மாதிரி... நல்லா தூக்கம் வரும்” என்றார்.

சினிமாவில் நுழையும் முன்பு, ரஜினி உழைப்பின் வியர்வையில் நனைந்ததால்தான் அவரால் ‘சூப்பர் ஸ்டா’ராக உயர முடிந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த தொழிலாளி கதாபாத்திரங்களை அவர் சிறப்பாகக் கையாள்வதற்கு அவருடைய வாழ்க்கை அனுபவமே காரணமாக அமைந்திருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் சாட்சி.

உழைத்த காசில் சினிமா

முதல் முறை சென்னைக்கு வந்து பெங்களூரு திரும்பிச் சென்ற ரஜினி, அங்கு பல சரக்குக் கடை ஒன்றில் வாரச் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். “நீ பி.யூ.சி வரை படித்தது பல சரக்குக் கடையில் நிற்கத்தானா?” என்று ராணுவத்தில் சேர்ந்திருந்த ரஜினியின் சின்ன அண்ணன் நாகேஸ்வர ராவ் கடிதம் எழுதினார். அண்ணனுடைய கடிதம் ரஜினியைச் சீண்டிவிட்டது. அதனால், வாரச் சம்பளம் கிடைத்த இரவே மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறினார் 18 வயது ரஜினி. அது 1968-ம் வருடம். சென்னை வந்து வேலை தேடி அலைந்தார்.

முதலில் தச்சுப் பட்டறை ஒன்றில் ரஜினிக்கு வேலை கிடைத்தது. ஆனால், உழைப்புக்குரிய ஊதியம் இல்லை. அப்போது, அங்கே வந்த கட்டிடக் கான்ட்ராக்டரிடம், “வேலை வேணும்… நிறைய சம்பளமும் வேணும்” என்று கேட்டார் ரஜினி. அந்த நபர் சித்தாள் வேலைக்கு ரஜினியை அழைத்துச் சென்றார். பகல் முழுவதும் செங்கல், சிமென்ட் கலவை என்று கடுமையாக வேலை செய்த ரஜினிக்கு 8 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அந்தப் பணத்தில் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, தினசரி இரவுக் காட்சி படம் பார்க்கப் போய்விடுவார் ரஜினி.

பெங்களூருவில் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, கஸ்தூரி னிவாசா, விஜயலட்சுமி ஆகிய திரையரங்குகளில் நண்பர்களுடன் ராஜ்குமார் நடித்த படங்களையும், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் அங்கே வாழும் தமிழர்களுக்காக வெளியாகும் எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்களையும் வெறித்தனமாகப் பார்த்தார் ரஜினி. சென்னைத் திரையரங்குகளில் பார்த்த படங்களின் மூலம் சிவாஜியின் குணச்சித்திர நடிப்பும், எம்ஜிஆரின் சாகச நடிப்பும் ரஜினியைக் கவர்ந்தன. தமிழ் மொழியும் புரிபடத் தொடங்கியது.

சந்தேகக் கேஸ்

இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. ஒருநாள் இரவுக் காட்சி சினிமா பார்த்துவிட்டு, பேருந்துக்காக எல்ஐசி கட்டிடத்தின் முன்பிருந்த பேருந்து நிழற்குடையின் கீழே காத்திருந்தார் ரஜினி. பகல் முழுவதும் வேலை செய்த களைப்பில் அங்கேயே படுத்துத் தூங்கிப்போனார். அதிகாலை 3 மணிக்கு ரஜினியை எழுப்பிய போலீஸ் சந்தேகக் கேஸில் பிடித்துக்கொண்டுபோய் ‘லாக்கப்’பில் அடைத்தது. ரஜினி கொஞ்சம்கூட முரண்டுபிடிக்கவில்லை.

மறுநாள் விடிந்தும், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ரஜினியைத் தட்டி எழுப்பி விசாரித்தார் ஏட்டு. இம்முறை தனது அப்பாவின் பெயரைப் பயன்படுத்த ரஜினி விரும்பவில்லை. “சார்... நான் கட்டிட வேலைக்குப் போகணும். மேஸ்திரி தேடுவார்” என்று ஆங்கிலத்தில் கூற ஆடிப்போனார் ஏட்டு. ரஜினியின் கை, கால்களில் இருந்த சிமென்ட் கறைகளைப் பார்த்த ஏட்டு, எஸ்.ஐ-யிடம் சொல்ல... “இனிமே நைட் ஷோ பார்த்தா... டிக்கெட்டை தூக்கிப் போட்டுடாம, கையில பத்திரமா வைச்சுக்கோ” என்று அறிவுரை சொல்லி, ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்து ரஜினியை அனுப்பிவைத்தனர் போலீஸார்.

அன்றைக்கு ரஜினி தாமதமாகக் கட்டிட வேலைக்கு வந்தததால், “இன்னைக்கு வேலை கிடையாது. நாளைக்கு வா” என்று திருப்பி அனுப்பினார் மேஸ்திரி. தனக்குப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டதாக நினைத்த ரஜினி, மனவருத்தம் தாங்காமல் பேருந்தில் ஏறி மிட்லேண்ட் தியேட்டரில் போய் இறங்கினார். அங்கே, கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த ‘எதிர்நீச்சல்’ படம், 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. கையிலிருந்த பணத்துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் அமர்ந்தார் ரஜினி.

‘மாடிப்படி மாது’வாகத் திரையில் தோன்றிய நாகேஷின் கதாபாத்திரம் அப்படியே தன்னைப் பிரதிபலிப்பதாக எண்ணிக்கொண்டார். பல காட்சிகளில் கண்ணீர்விட்டு அழுதார். ‘பிச்சை எடுத்தாலும் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைக்கும் மாது எங்கே? கஷ்டப்பட்டு படிக்கவைத்த அப்பாவுக்கு உதவி செய்யாமல் ஓடிவந்துவிட்ட நாம் எங்கே?’ என்கிற குற்றவுணர்ச்சி ரஜினியை வாட்ட... திரையரங்கிலிருந்து நேரே சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நடந்தே போனார். ஆனால், ஊருக்கு டிக்கெட் எடுக்க கையில் பைசா பணமில்லை. நடப்பது நடக்கட்டும் என்று பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டார் ரஜினி.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in