புயலுக்கு அப்பால் ஒரு பொதுசேவை!- பள்ளிக்கு மைதானம் தந்த பாக்கியலட்சுமி

புயலுக்கு அப்பால் ஒரு பொதுசேவை!- பள்ளிக்கு மைதானம் தந்த பாக்கியலட்சுமி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

‘அண்ணன் பிள்ளையை வளர்ப்பதைவிட ஒரு தென்னம்பிள்ளையை வளர்ப்பதுதான் சாலச் சிறந்தது’ என்பது கிராமப்புறத்து சொலவடை. ஆனால், தென்னம்பிள்ளை வளர்ப்பின் மூலம், தனது மகளையும், தன் அண்ணனின் மக்களையும் சேர்த்து வளர்த்து ஆளாக்கி வருகிறார் பாக்கியலட்சுமி. அத்துடன், கஜா புயலில் தனக்குக் கிடைத்த இழப்பீட்டைக் கொண்டு அரசுப் பள்ளியில் வாலிபால் மைதானம் அமைத்துத் தந்திருப்பதன் மூலம், சமூகத்தின் மீதான அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நாடாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. 36 வயதான இவர் தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த அன்புக் கணவன் திருநீலகண்டன் இறந்துவிட்ட நிலையில், ஒன்பது வயது மகள் சாம்பவியுடன் தாய் வீட்டில் வசிக்கிறார். கணவர் இறந்த பிறகு இவர் எதிர்க்கொண்ட துயரங்கள் ஏராளம். எனினும், வலியின் சாரம் படியாத வார்த்தைகளிலேயே அவற்றைப் பகிர்ந்துகொள்கிறார் பாக்கியலட்சுமி.

நிலைகுலைந்த வாழ்க்கை

“நான் பிறந்த ஆறாவது மாசத்திலேயே எங்க அப்பா இறந்துட்டார். கூலி வேலைக்குப் போய்த்தான் என் மூன்று அண்ணன்களையும் என்னையும் எங்க அம்மா வளர்த்தாங்க. அண்ணன்கள் திருமணமாகி தனித்தனியா ஆளுக்கொரு தொழில பார்த்துக்கிட்டு இருக்காங்க. கஷ்டத்துக்கு இடையே என்னைக் கல்லூரிவரை படிக்க வைச்சதோட, பி.எட்., படிப்பும் படிக்க வைச்சாங்க அம்மா. கல்லூரி படிக்கறப்ப என்னோட பெரிய அண்ணன் வேலைக்குப் போய் கொண்டுவரும் காசை வச்சுத்தான் சமாளிச்சோம். பலமுறை ஃபீஸ் கட்ட முடியாமல் தவிச்சிருக்கேன். அப்பல்லாம் கல்லூரி முதல்வராக இருந்த மெய்ப்பொருள் சார்தான் ஃபீஸ் கட்டியிருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு உதவும் அவருடைய குணம் எனக்குள்ளயும் பதிஞ்சது.

படிச்சு முடிச்சுட்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக வேலைக்குப் போனேன். மாசம் 500 ரூபாய் சம்பளம். அஞ்சு வருசம் வேலை பார்த்தேன். இந்த நிலையில் எனக்குத் திருமணம் ஆயிடுச்சு. ரொம்ப அன்பான கணவர். அவரோட தென்னந்தோப்புலயே கூரை வீடு கட்டிக்கிட்டு வாழ்ந்தோம். அன்பின் பரிசா சாம்பவி பிறந்தாள். ஒரு தனியார் பள்ளியில் வேலைக்குப் போனேன். எங்களுக்குக் கிடைச்ச வருமானத்தை வச்சு சந்தோஷமா இருந்தோம்.

ஆனால், விதி எங்க வாழ்க்கையில் குறுக்கிட்டது. எதிர்பாராதவிதமா மின்சாரம் பாய்ந்து எனது கணவர் இறந்தார். பிறந்த ஆறே மாசத்தில் தந்தையை இழந்த நான், கல்யாணமாகி ஆறே வருசத்தில் கணவனையும் இழந்தேன். வாழ்க்கையில் எல்லாம் முடிஞ்சது என்று முடங்கிக் கிடந்த எனக்கு, வாழணும்ங்கிற உத்வேகத்தைத் தந்தது சாம்பவியோட அன்புதான். தன்னந்தனியே இந்தத் தோப்பில் வாழ முடியாது என்பதால் அம்மா வீட்டுக்கு போய் அவருடன் தங்கிக்கொண்டேன்” என்கிறார் பாக்கியலட்சுமி.

கஜா புயலும் கருணை உள்ளமும்

தாய் வீட்டிலிருந்தபடியே, தோப்பையும் கவனித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமியின் வாழ்க்கையில் கஜா புயல் மூலம் இன்னொரு இடி இறங்கியது. அந்தப் புயலில் இவரது ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பும் உருக்குலைந்துபோனது.
அதைப் பற்றிச் சொல்லும் பாக்கியலட்சுமி, “புயல்ல சாய்ஞ்ச மரங்களை அகற்றவே நாலு மாசத்துக்கு மேலாகிடுச்சு. நாலு பெண்களை வைச்சுக்கிட்டு தோப்பைச் சுத்தப்படுத்தி, அரசு கொடுத்த கன்றுகளை நட்டு திரும்ப தோப்பை உருவாக்கியிருக்கேன். இந்த நிலையில்தான் தென்னை மரங்களுக்கு அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையா சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கெடைச்சது.
‘பொம்பளப் புள்ள வைச்சிருக்க. இந்தப் பணத்தை வைச்சு நகை வாங்கி வை’ன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா, எனக்குள்ள வேறொரு எண்ணம் ஓடுச்சு. பேராவூரணியில் இருக்கிற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில வாலிபால் மைதானம் இல்லை. ஆனாலும் இந்தப் பகுதியில இருந்து நிறைய புள்ளங்க மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாங்க. அவங்களெல்லாம் வெளியூர் போய்ப் பயிற்சி எடுத்துக்க வேண்டியிருக்கு. நல்லா விளையாடற பல புள்ளைங்கள வெளியூர் போவணும்ங்கிறதால அவங்களோட பெற்றோர் அனுப்பறதில்லை.

நம்ம ஊர் பள்ளியிலேயே மைதானம் இருந்தா, அதிகமான பெண் பிள்ளைகள் விளையாட்டுக்கு வருவாங்க... மேல் படிப்புக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைக்கும்... அதனால அவங்க வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதத்தை அளிக்க முடியும்னு நிறைய யோசனை வந்துச்சு. அதுக்கு எவ்வளவு செலவாகும்னு விசாரிச்சேன். ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும்னு சொன்னாங்க. நேரா ஸ்கூலுக்குப் போய், தலைமை ஆசிரியை சுகுணா மேடத்தைப் பார்த்து, ‘வாலிபால் கோர்ட் ரெடி பண்ணுங்க, அதுக்கான செலவை நான் ஏத்துக்கிறேன்’னு சொன்னேன். ஆனா, என்னோட பொருளாதார நிலையைப் பார்த்துட்டு, அதை ஏற்க அவங்க மறுத்துட்டாங்க. நான் உறுதியா நின்னேன். ஒருவழியா அரை மனசோட சம்மதிச்சாங்க. கருவக்காடா இருந்த மைதானத்தைச் சுத்தப்படுத்தி வேலைகளைத் தொடங்கினோம். 90 சதவீதப் பணிகள் முடிஞ்சுடுச்சு. பள்ளி திறந்தால் மீதமுள்ள பணிகளையும் முடிச்சுடலாம்.

இனிமேல் எங்க ஊரு புள்ளைங்க விளையாட வேற எங்கயும் போக வேண்டாம். துயரங்களையே பார்த்த என் மனசுக்கு, நாமளும் இந்த உலகத்துக்கு எதையாவது செஞ்சிருக்கோம்னு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைச்சிருக்கு” என்றார்.

நம்பிக்கை நாயகி

ஆனால், இவ்வளவு பெரிய தொகையில் கொஞ்சமேனும் எதிர்காலத்துக்காகச் சேமித்து வைத்திருக்கலாமே எனும் கேள்வி இயல்பாக எழுந்தது. அதைக் கேட்டதும், “தன் கணவரை இழந்து கஷ்டப்பட்டபோதும், கல்வியறிவு இல்லாத என் அம்மா என்னையும், மூணு பசங்களையும் வளர்த்து ஆளாக்கினாங்க. படித்து விவரம் தெரிஞ்ச என்னால் என் பிள்ளையை வளர்க்க முடியாதாங்கிற நம்பிக்கையில்தான் அந்த முடிவை எடுத்தேன்” எனப் பளிச்சென்று பதில் வருகிறது பாக்கியலட்சுமி யிடமிருந்து.

தென்னந்தோப்பில் ஊடுபயிராக, இயற்கை முறையில் சாகுபடி செய்திருக்கும் காய்கனிகளை விற்றுக் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் எல்லா செலவுகளையும் ஈடுகட்டி வருகிறார். தனது படிப்புக்கு உதவியாக இருந்த மூத்த அண்ணன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுவிட, அவரது இரண்டு மகள்களையும் வளர்த்து, படிக்க வைத்துவருகிறார். பெரிய பெண் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவமும், அடுத்த பெண் பத்தாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

விருட்சங்கள் தரும் பலன்களுக்குக் கணக்கு ஏது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in