சமயம் வளர்த்த சான்றோர் 21: ஸ்ரீ பக்த புரந்தரதாசர்

சமயம் வளர்த்த சான்றோர் 21: ஸ்ரீ பக்த புரந்தரதாசர்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

சங்கீத பிதாமகர், கர்னாடக இசையின் தந்தை, ஆதி குரு என்று அழைக்கப்படும் ஸ்ரீ புரந்தரதாசர், தனது பாடல்கள் மூலம் பக்தி மார்க்கத்தை பரவச் செய்தவர். இவ்வுலகில் அனைவரும் இறையின் ரூபம்தான் என்பதை சிந்தையில் கொண்டு வாழ்ந்து, அதை அனைவரும் அறியும் வண்ணம் பாடல்கள் புனைந்தவர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹம்பிக்கு அருகில் புரந்தரகடா என்ற ஊரில், பிராமண குலத்தைச் சேர்ந்த ரத்தின வியாபாரி மாதவராவ் - ரத்தினாபாய் தம்பதி வாழ்ந்து வந்தனர். வெகு நாட்களாக அவர்களுக்கு குழந்தை இல்லை. இதுகுறித்து வருத்தப்பட்டு, கோயில் கோயிலாக சுற்றிய இருவரும், திருப்பதி வந்தடைந்து வேங்கடமுடையானை வேண்டினர். வேங்கடவனும் அவர்களுக்கு அருள்பாலித்து, ஓர் ஆண்மகனை வரமாக அளித்தார். வேங்கடவன் அருளால் பிறந்ததால் (1484-ம் ஆண்டு) குழந்தைக்கு ஸ்ரீநிவாச நாயக் என்று பெயர் சூட்டினார்கள்.

நல்ல செல்வக் குடும்பத்தில் பிறந்ததால், செல்லப் பிள்ளையாக வளர்ந்தார் ஸ்ரீநிவாசர். இசையிலும் கன்னடம், சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சிறுவயதில் சீனப்பா, திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட இவர், விட்டலன் (பாண்டுரங்கன்) மீது கொண்ட பக்தியால் பின்னாட்களில் புரந்தரவிட்டலர் என்று அழைக்கப்பட்டார். பதினாறாவது வயதிலேயே இவருக்கு, சரஸ்வதி பாய் என்பவருடன் திருமணம் செய்விக்கப்பட்டது. இருபதாவது வயதில் தனது பெற்றோரை இழந்தார் திம்மப்பா.
தந்தையின் இறப்புக்குப் பிறகு, திம்மப்பாவே ரத்தின வியாபாரத்தை கவனித்து வந்தார். வியாபாரத்தில் பெரும் செல்வம் ஈட்டி, நவகோடி நாராயணன் என்ற பெயருடன் விளங்கினார். பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தவர், காலப்போக்கில் மிகவும் கருமியாக மாறினார். ஆனால், திம்மப்பாவின் மனைவி தான தர்மம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இறை பக்தி நிறைந்த அவர், அந்த ஊரில் உள்ள கிருஷ்ணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அந்த கிருஷ்ணரை அனைவரும் பாண்டுரங்கன் என்றே அழைத்தனர்.

ஊர் மக்கள் அனைவரும் பாண்டுரங்கனை நினைத்து தினம் பாட்டுப் பாடி ஆட்டம் ஆடுவர். நாள்தோறும் பஜனைப் பாடல்ளைப் பாடுவர். இதையெல்லாம் திம்மப்பா சட்டை செய்யவில்லை. அவரது மனம் பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. திம்மப்பாவின் கஞ்சத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இறைவன் திருவுள்ளம் கொண்டார். யாசகம் கேட்டு திம்மப்பாவின் கடைக்குச் சென்றார் பாண்டுரங்கன். ஏழு வயது சிறுவனுடன் ஒரு முதிய ஏழை பிராமணர் வேடம் கொண்டு அவர் கடை முன் நின்றார் ரங்கன். அவரை திம்மப்பா திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

மீண்டும் அந்த முதியவர் அழைத்தார். “ஐயா! இவன் எனது மகன். ஏழு வயது ஆகிறது. இவனுக்கு உபநயனம் செய்விக்க வேண்டும். அதற்கு ஏதேனும் பொருளுதவி செய்யுங்கள்” என்று திம்மப்பாவை வேண்டினார். ஆனால், திம்மப்பாவிடம் இருந்து ஏதும் பெறமுடியவில்லை. முதியவரும் விடுவதாக இல்லை. தினம் வந்து யாசகம் கேட்டார். திம்மப்பாவும் தினம் அலுக்காமல் முதியவரை விரட்டினார். ஒருநாள், “உங்களிடம் யாசகம் பெறாமல் நான் போக மாட்டேன்” என்று கூறி திம்மப்பாவின் கடை முன்பு அமர்ந்துவிட்டார் முதியவர்.

திம்மப்பாவும் வேறு வழியில்லாமல் ஒரு செல்லாக் காசை எடுத்து அவருக்கு அளித்தார். மிகவும் தேய்ந்து இருப்பதாக முதியவர் கூறியதும், தன்னால் இதுதான் முடியும். வேண்டுமானால் ஏதாவது நகையை அடகு வைத்தால் பணம் தருவதாகக் கூறினார் திம்மப்பா.

உடனே பாண்டுரங்கன் (முதியவர்), திம்மப்பாவின் இல்லம் சென்று அவரது மனைவியை சந்திக்க எண்ணினார். தன் கதையைக் கூறி, யாசகம் கேட்க முடிவு செய்தார். அதன்படி திம்மப்பாவின் இல்லம் சென்று, யாசகம் கேட்டார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் துளசி பூஜை முடித்துவிட்டு, ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தார் திம்மப்பாவின் மனைவி சரஸ்வதி. யாசகம் கேட்டு ஒரு முதியவரின் குரல் கேட்டதும் வாசலுக்குச் சென்று, “என்ன வேண்டும்?” என்று அவரிடம் கேட்டார். அவரும் தன் கதையைக் கூறினார். மேலும், ஒரு கஞ்சன் தனக்கு யாசகம் தர மறுத்ததையும் கூறினார்.

அதற்கு, தன்னிடம் பணம் இல்லை. இருக்கும் ஓரிரு காசுகளைக் கொடுத்தாலும் கணவர் திட்டுவாரே என்று அந்த முதியவரிடம் கூறினார் சரஸ்வதி. அதற்கு அந்த முதியவர், “கணவர் உங்களுக்கு கொடுத்ததை தானே எனக்கு கொடுக்கக் கூடாது. நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் போட்ட ஏதேனும் நகை இருந்தால் கொடுங்கள். அதைக் கொடுத்தால் உங்களை அவர் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.

சரஸ்வதியும், ‘உண்மைதான்... எனக்கு திருமணத்தின் போது போட்ட நகையில் ஒன்றைக் கொடுத்தால் என்ன?’ என்று நினைத்து தன் மூக்குத்தியைக் கழற்றி அந்த முதியவரிடம் கொடுத்தார். அந்த முதியவர் அந்த மூக்குத்தியைப் பெற்றுக் கொண்டு, சரஸ்வதியை மனதார வாழ்த்தினார். மூக்குத்தியை எடுத்துக் கொண்டு, திம்மப்பாவின் கடைக்கு வந்தார் முதியவர். மறுமடியும் தொந்தரவு செய்ய முதியவர் வந்துவிட்டாரோ என்று நினைத்தார் திம்மப்பா. “இந்த மூக்குத்தியை வைத்து கொண்டு, பணம் கொடுங்கள்” என்று திம்மப்பாவை மிரட்டினார் முதியவர்.

மூக்குத்தியைப் பார்த்ததும், அது தனது மனைவி யுடையது போல் இருக்கிறது என்ற சந்தேகம் திம்மப்பாவுக்கு எழுந்தது. “பெரியவரே... நாளை வந்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று முதியவரிடம் சொல்லிவிட்டு, உடனே தனது இல்லம் சென்று மனைவியைப் பார்த்தார். மனைவியின் மூக்கில் மூக்குத்தி இல்லை. உடனே, “இன்று வெள்ளிக்கிழமை. இப்படி மூக்குத்தி இல்லாமல் இருக்கக் கூடாது. உடனே போட்டுக் கொண்டு வா” என்றார் திம்மப்பா.

சரஸ்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை வாங்கிக் கொண்டு அப்போதே அந்த முதியவர் சென்று விட்டாரே. என்ன செய்வது என்று தவித்தார். உடனே, ஒரு கிண்ணத்தில் விஷத்தை எடுத்துக் கொண்டு துளசி மாடம் அருகே சென்று வேண்டிக் கொண்டு, தன்னுயிரை மாய்த்துக் கொள்ள எண்ணினார் சரஸ்வதி. அவர் வேண்டிக் கொள்ளும் சமயம், ஒரு மூக்குத்தி, அந்த கிண்ணத்தில் விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்து, கணவரிடம் கொடுத்தார்.

திம்மப்பாவும் மூக்குத்தியை வாங்கிக் கொண்டு, தன் கடைக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தால் அவர் வைத்த மூக்குத்தி அங்கு இல்லை. இது எப்படி சாத்தியம்? என்று யோசித்தார். முதியவர் வந்து மூக்குத்திக்கு பணம் கேட்டால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த முதியவர் வந்து பணம் கேட்டார்.

செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த திம்மப்பா, முதியவர் முன் கூனிக் குறுகி நின்றார். “இன்று மாலை தருகிறேன்” என்று திம்மப்பா கூறியதும், “வேண்டாம்.. எனக்கு நகையைக் கொடுங்கள், நான் வேறு இடத்தில் அடகு வைத்துக் கொள்கிறேன்” என்றார் முதியவர்.

“கட்டாயம் மாலை தருகிறேன்” என்று திம்மப்பா கூறியதும், அந்த முதியவர் கிளம்பினார். அப்போது திம்மப்பா, தனது பணியாளரை அழைத்து, அந்த முதியவர் எங்கு செல்கிறார் என்று பார்த்து விட்டு, அந்த மூக்குத்தி குறித்து ஆராயச் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து அந்த பணியாளர் வந்து, அந்த முதியவர் பாண்டுரங்கன் கோயிலுக்குள் சென்றதாகவும், அதற்கு முன்னர், சரஸ்வதியை சந்தித்து மூக்குத்தி பெற்றதையும் திம்மப்பாவிடம் கூறினார். வந்தது இறைவன் என்பதை உணர்ந்த திம்மப்பா, மனம் மாறினார். தனது சொத்துகள் அனைத்தையும் தான தர்மமாக அளித்தார். செல்வம் செல்வம் என்று ஆணவத்துடன் வாழ்ந்த அவரை விட்டு மகாலட்சுமி சென்றுவிட்டாள். ஒரு நொடிப் பொழுதில் அனைத்து செல்வமும் கரைந்துவிட்டது. ஒன்பது கோடியில் ஏதும் கையில் இல்லை. பணம் எல்லாம் போனபின் அவருக்கு ஞானம் பிறந்தது. அப்போது மகாலட்சுமியை அழைத்து, “பாக்யாத லக்ஷ்மி பாரம்மா – நம்மம்ம நீ சௌ பாக்யாத லக்ஷ்மி பாரம்மா” என்று பாடத் தொடங்கினார்.

“சலங்கை கட்டிய கால்களால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சம் அடைந்து ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு தயிரில் இருந்து வரும் நறுமணம் கமழும் நெய்யைப் போல் வருவாய் தாயே” என்று மகாலட்சுமியை அழைக்கிறார் திம்மப்பா.

அப்போது, “வைத்திருக்கும் பணத்தை தான தர்மம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. அனைத்தையும் தர்மம் செய்வதே சிறப்பு. இன்று முதல் உன் பெயர் புரந்தரதாசன். உடனே கிருஷ்ண தேவராயருடைய குலகுருவான வியாசராயரை தஞ்சம் அடைந்து அவரிடம் இருந்து குரு உபதேசம் பெறுவாயாக” என்று ஓர் அசரீரி கேட்டது. உடனே சென்று வியாசராயரை சந்தித்து குரு உபதேசம் (1525-ம் ஆண்டு) பெற்றார் திம்மப்பா.

பிறகு பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபட்டு ஞானம் பெற்றார் திம்மப்பா. விட்டலன் மீது பாடல்கள் புனைந்தார். ஒரு சமயம் திம்மப்பாவுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், விட்டலனை தரிசித்தால் நோயில் இருந்து விடுபடலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மூன்று முறை பண்டரிபுரத்துக்கு தீர்த்த யாத்திரை சென்று வந்தார் திம்மப்பா. அத்தோடு அவரது வயிற்று வலி குணமானது.

ஆரம்ப இசைப் பயிற்சிக்கான சரளி வரிசைகள், ஜண்டை வரிசைகள், கீழ்ஸ்தாயி வரிசைகள், அலங்காரங்கள், கீதங்களை இயற்றினார் திம்மப்பா. ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் மாயாமாளவ கௌளை என்பதை தீர்மானித்து அந்த ராகத்திலேயே முதலில் பயிற்சிக்கான பாடல்களை இயற்றினார். அதை முறைப்படுத்தி ஒரு திட்டமாக வகுத்துக் கொடுத்ததால், ஆதி குரு, சங்கீத பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார் திம்மப்பா.

கன்னடம், சம்ஸ்கிருத மொழியில் எண்ணற்ற பாடல்களை கண்ணன் (பாண்டுரங்கன்) மீது இயற்றியுள்ளார் திம்மப்பா. 4,75,000 பாடல்களை இயற்றியதாக ‘வாசுதேவ நாமாவளி’ என்ற நூலில் கூறப்பட்டாலும், 8 ஆயிரம் பாடல்களே தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. இவரது பாடல்கள் ‘தாசர் பதங்கள்’ என்றும் ‘தேவர் நாமாக்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன. ‘புரந்தரவிட்டல’ என்ற முத்திரை இவரது பாடல்களில் காணப்படும்.

புரந்தரதாசரின் பாடல்களில் வேதங்கள், உபநிடதங்களின் சாராம்சம் நிறைந்திருக்கும். பக்தி ரசமும், உயர்ந்த கருத்துகளையும் கொண்ட கீர்த்தனைகளாக அவை அமைந்தன. இந்துஸ்தானி இசையிலும் வல்லவரான இவர், அபூர்வ ராகங்களான மாஞ்சி, பைரவி, மாரவி, வசந்த பைரவி, சியாம கல்யாணியிலும் பாடல்கள் புனைந்துள்ளார். இமயம் முதல் குமரி வரை பாதயாத்திரை சென்று விட்டலன் புகழ் பாடினார்.

இவரது ஜகதோதாரண (காபி), சகல கிருஹ பல (அடாணா), இன்னுதய பாரதே தாசரதே (கல்யாண வசந்தம்), வெங்கடாசல நிலையம் (சிந்து பைரவி), ராம ராம ராம சீதா (திலங்), கோவிந்தா நின்ன (ஜனசமோதினி), கஜவதனா பேடுவே (ஹம்சத்வனி) போன்ற பாடல்கள் இன்றும் இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்பெறுகின்றன.

தனது அந்திம காலத்தில் சந்நியாசத்தை கடைபிடித்த புரந்தரதாசர், 1564-ம் ஆண்டு தை அமாவாசை தினத்தில் விட்டலனோடு ஐக்கியமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in