ரஜினி சரிதம் 18: ஆறிலிருந்து எழுபது வரை - முதல் கட்-அவுட்டும், ‘சூப்பர் ஸ்டார்’ பட்டமும்

ரஜினி சரிதம் 18: ஆறிலிருந்து எழுபது வரை - முதல் கட்-அவுட்டும், ‘சூப்பர் ஸ்டார்’ பட்டமும்

வில்லன், குணச்சித்திர வில்லன் என்று நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முதன் முதலில் கதாநாயகனாக்கிய படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அதேபோல், ‘க்ளைமாக்ஸ் ஃபைட்’ செய்ய வைத்து, வில்லனைக் கொல்லும் ஆக்‌ஷன் வேடத்தில் ரசிகர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்திய முதல் படம் வி.சி.குகநாதன் இயக்கிய ‘மாங்குடி மைனர்’. ரஜினியின் இந்தப் பரிணாம வளர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிந்ததும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காகப் படையெடுத்தார்கள். ஆனால், பலருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் ரஜினி திண்டாடினார். இரவு பகலாக நடிக்க வேண்டியிருந்தது அவருக்கு. 1978-ல் ரஜினி நடிப்பில் 20 படங்கள் வெளிவந்தன.

இதே ஆண்டில்தான் ரஜினியை ஒரு முழுமையான கமர்ஷியல் ஃபார்முலா கதையில் பொருந்தக்கூடிய கதாநாயகனாக வடிவமைத்த ‘பைரவி’ வெளியாகி அவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொல்ல வைத்தது. கலைஞானம் அல்ல ‘கதைஞானம்’ என்று இன்று திரையுலகினரால் பாராட்டப்படும் அன்றைய கதாசிரியர் கலைஞானம் கதை எழுதி தயாரித்த படம்தான் ‘பைரவி’.

‘பைரவி’ எனும் மாஸ் கலவை

எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் எத்தனையோ பாடல்களைப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன், ரஜினிக்கும் ‘நண்டூருது நரியூருது’ எனப் பாடிய படம். அண்ணன் தங்கை - பாசம், வில்லனால் தங்கை கொல்லப்படுதல், அந்தக் கொலைப் பழியை அண்ணன் மீதே போடுதல் என வித்தியாசமான கிராமத்துக் கதைக்களம். வில்லனிடம் அடிமைச் சேவகம் செய்யும் ஒரு முரடன், பின்னர் ஆக்‌ஷன் நாயகனாக அவதாரம் எடுக்கும் கமர்ஷியல் கதை. அதில் துடுக்கான கதாநாயகியாக ப்ரியா நடித்திருந்தார். நடிகை கீதா தமிழ்த் திரைக்கு அறிமுகம், புகழ்பெற்ற ‘ஸ்டில்ஸ் ரவி’ ஒளிப்படக் கலைஞராக அறிமுகம், இயக்குநர் எம்.பாஸ்கருக்கு முதல் வெற்றி என்று பல பிரபலங்களின் திரைப் பயணத்துக்கு அடியெடுத்துக்கொடுத்த அந்தப் படம், ரஜினிக்கு முதல் மாஸ் மசாலா கலவையாக ரசிகர்களைச் சுண்டி இழுத்தது. பெரும் வெற்றியும் பெற்றது.

வலது மூக்கில் ஒரு சின்ன வளையம் அணிந்துகொண்டு மூக்கையன் வேடத்துக்கான கெட்-அப்பில் கலக்கிய ரஜினியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சண்டைக் காட்சியில், வில்லனின் குண்டு வீச்சில் இடது காலின் முட்டிவரை இழந்துவிடும் ரஜினி, ரசிகர்களைக் கலங்கடித்தார். ஸ்ரீபிரியா கட்டைக்கால் கொண்டுவந்து கொடுத்ததும் அதை அணிந்துகொண்டு ரஜினி விடுதலை கிடைத்ததைப்போல் முகத்தில் காட்டிய நடிப்பு மாஸ் ரகமாக மாறிப்போனது. அதேபோல், ‘பைரவி’ படத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் போலீஸுக்கு டிமிக்கி கொடுக்கும் ரஜினி, ஒரு மரத்தடியில் பதுங்கியிருப்பார். அப்போது நல்ல பாம்பு ஒன்று வர அதை அப்படியே கையில் பிடித்து ‘சத்தம் வரக்கூடாது... மூச்!’ என்பதுபோல் பாவனை காட்டி நடிப்பார். ரஜினி முதன்முதலில் நடித்த அந்தப் பாம்புக் காட்சி பின்னர், பல படங்களின் நகைச்சுவைக் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளாகத் தொடர்ந்தது தனி டிராக்.

வசனத்துக்குப் பயப்படாத ரஜினி

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படப்பிடிப்பில் ஒரு சம்பவம். கன்னடமும் தமிழும் தெரிந்த வாத்தியார் லட்சுமி நாராயணன் என்பவரை ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதற்காக அமர்த்தியிருந்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். செட்டில் ஷாட் ரெடியாகிக் கொண்டிருந்தது. லட்சுமி நாராயணன் மிக நீண்ட வசனம் ஒன்றை ரஜினிக்குச் சொல்லிக் கொடுத்தார். எவ்வளவு முயன்றும் ரஜினியால் அவ்வளவு நீளமான வசனத்தைச் சரியான ‘ஆர்டரில்’ பேச முடியவில்லை. வெறுத்துப்போன ரஜினி, வசனம் சொல்லித் தந்த வாத்தியாரிடம், “இந்தப் படம் எனக்குச் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு செட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார். பதறிய லட்சுமி நாராயணன் வாத்தியார், ஓடிப்போய் எஸ்பிஎம்மிடம் விஷயத்தைக் கூற, பதறிய எஸ்பிஎம், புரொடக்‌ஷன் உதவியாளரை அழைத்து, ஓடிப்போய் ரஜினியை அழைத்துவரச் சொன்னார்.

ரஜினி கம்பெனிக் காரில் ஏறி புறப்படத் தயாராக இருந்தபோது அப்படியே அவரைத் தாஜா செய்து அழைத்துக்கொண்டு வந்து இயக்குநரின் முன் நிறுத்தினார்கள். “என்ன தம்பி... எங்கிட்டகூட சொல்லாம இப்படி கிளம்பிட்டீங்க?” பதைபதைப்புடன் கேட்டார் எஸ்பிஎம். அதற்கு ரஜினி, “இல்ல சார்... இவ்வளவு நீளமான வசனம் கொடுத்தீங்கன்னா நான் எப்படி பேசி நடிக்கிறது? உங்க நேரத்தை வீணாக்கக்கூடாதுன்னுதான் கிளம்பிட்டேன்” என்றார். “என்ன ரஜினி இவ்வளவு இன்னோசன்டா இருக்கீங்க? நீளமான வசனத்தை நாங்க பிரிச்சுப் பிரிச்சுத்தானே எடுப்போம். ஷாட் டிவிஷன்னு ஒரு வசதி இருக்கே... பிரிச்சுத் தர்ற வசனத்துலயும் உங்களால எவ்வளவு பேச முடியுதோ அவ்வளவு பேசுங்க. ஹீரோவே இப்படி மனசு தளர்ந்தா எப்படி?” என்று எஸ்பிஎம் சொன்னதும், “வெரி சாரி சார்... உங்ககிட்ட சொல்லாம கிளம்பிட்டேன்... வெரி பேட்” என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டார் ரஜினி. அந்தப் பிணைப்பு அதன் பின்னர் 25 படங்களில் இருவரையும் இணைந்து பயணிக்க வைத்தது.

இப்படி நீளமான வசனம் பேச அஞ்சிய ரஜினிதான், தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்னால் வென்றுகாட்ட வேண்டும் என்கிற வெறியுடன், “எனக்கு எழுதிய வசனங்களைத் தயவுசெய்து குறைக்காதீங்க. எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் பேசிடுவேன்” என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்தார். இவ்விஷயத்தில் ரஜினியின் வெளிப்பட்ட தன்னம்பிக்கையைப் பற்றி ‘பைரவி’ படத்தின் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானம் தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

“விஜயகுமார் கதாநாயகனாக நடித்த ‘ஆறு புஷ்பங்கள்’ படத்துக்கு நான்தான் கதை, வசனம் எழுதினேன். அந்தப் படத்தின் இயக்குநர் கே.எம்.பாலகிருஷ்ணன், ‘படம் முடியும்வரை படப்பிடிப்பில் என்னோட கூடவே இருங்க’ என்று அன்பு வேண்டுகோள் வைத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் ரஜினியும் நானும் நெருக்கமாகப் பழகினோம். அதில் ரஜினிக்குக் கிட்டத்தட்ட இரண்டாம் கதாநாயகன் வேடம். அந்தப் படத்தில் ரஜினிக்கு நீண்ட வசனம் வரும்போதெல்லாம் பேசி நடிப்பதில் அவருக்குக் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. உடனே, அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவருடைய வசனத்தைக் குறைத்துக் கொடுப்பேன். அப்போது ரஜினி, ‘வேண்டாம் சார்… இப்போது நான் முயற்சிக்காவிட்டால் பிறகு எப்போது முயற்சிப்பேன்? தயவுசெய்து எனது வேடத்துக்கான வசனத்தை குறைக்காதீர்கள். ஒரிஜினலாக இருந்ததையே சொல்லிக்கொடுங்கள்’ என்பார். சொன்னதுபோலவே தனியாக அமர்ந்து பல முறைப் பேசிப்பேசி பார்த்து சிங்கிள் டேக்கில் ஓகே செய்துகாட்டி அசத்தினார். அப்போதுதான் ரஜினியை தனிக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் உருவானது” என்று ரஜினியிடம் ஏற்பட்ட உழைப்பின் மாற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார் கலைஞானம்.

சென்னையை அதிரவைத்த தாணு

கலைஞானம் சினிமா பத்திரிகையாளராக இருந்து கதாசிரியர் ஆனவர் என்பதாலும், படத்தின் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிந்த சித்ரா லட்சுமணனும் ஒரு முன்னாள் சினிமா பத்திரிகையாளர் என்பதாலும் ‘பைரவி’ படம் பற்றிய விதவிதமான செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியாகும்படி செய்தனர். அவற்றைப் பார்த்து படத்தை வாங்க பல விநியோகஸ்தர்கள் ஓடிவந்தார்கள். ஆனால் கலைஞானம், படத்தின் கதையைப் பல முன்னணி விநியோகஸ்தர்களுக்குச் சொல்லி, பூஜைக்கு முன்பே எல்லா ஏரியாக்களின் உரிமையையும் விற்று அட்வான்ஸ் வாங்கிவிட்டார். அப்படி பூஜைக்கு முன்பே சென்னை நகரின் விநியோக உரிமையை வாங்கியவர்தான் இன்றைய கலைப்புலி எஸ்.தாணு.

1978 ஜுன் 2-ல் ‘பைரவி’ படம் வெளியானது. சென்னை அண்ணா சாலையில் இருந்த ‘பிளாசா’ திரையரங்கின் வாசலில் ரஜினிக்கு 35 அடி உயரக் கட்-அவுட் வைத்தார் தாணு. எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு இப்படி கட்-அவுட் வைக்கப்பட்டது ரஜினிக்குத்தான் என்று அது சென்னையின் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆனது. அதுமட்டுமல்ல, அப்படத்தின் போஸ்டரில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘பைரவி’ என்று போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்டச்செய்தார் தாணு. படத்துக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அன்று சென்னையின் தியாகராய நகரில் இருந்த ‘ராஜகுமாரி’ திரையரங்குக்குப் படத்தின் இடைவேளையின்போது வந்தார் ரஜினி. திரையரங்கு வரும்வழியில் ‘சூப்பர் ஸ்டார்’ சுவரோட்டிகளைப் பார்த்துவிட்டு வந்தவர், அங்கே திரையரங்கில் காத்திருந்த கலைஞானம், இயக்குநர் பாஸ்கர் ஆகியோரிடம், “இந்த விளம்பரங்களைச் செய்தவர் நிச்சயமாகச் சென்னை ஏரியாவை வாங்கியவராகத்தான் இருப்பார்... அவர் யார்?” என்று ரஜினி கேட்டார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த தாணுவை ரஜினிக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது ரஜினி, “உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. ஆனா, எனக்காக நீங்கள் ஒரு ஃபேவர் பண்ணணும். அதை இங்க உங்ககிட்ட கேட்கிறது நாகரிகமாக இருக்காது. நான் ஞானம் சார்கிட்ட சொல்லி அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in