Published On : 15 Feb 2020

ஷேர் செய்யலாமே!

short-story

கனகராஜன்
nkanagaraajan@gmail.com

செல்போன் ரிங்டோன், ‘கண்ணான கண்ணே...’ என்று விடாமல் பாடிக்கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி. தனபால் அரைகுறைத் தூக்கத்தில் இருந்தான்.

‘கண்ணான கண்ணே... என் மீது...’

தூக்கம் கலைந்து தலையணைக்கு இரண்டு அடி தள்ளிக் கிடந்த செல்போனைப் பரபரப்பாக எடுத்தான்.

முத்து அழைத்திருந்தான்.

‘நிம்மதியா தூங்கவிட மாட்டானே? வெட்டவெடியால எதுக்குக் கூப்புடுறான்?’

காதில் வைத்து, “சொல்லுடா...” என்றான்.

“டேய் தனா… ஃபேஸ்புக்ல உன்னைப் பத்தி எழுதியிருக்காங்கடா” என்றான் முத்து.

“என்னைப் பத்தியா? என்னடா சொல்றே?” தனபால் குழப்பத்தோடு கேட்டான்.

“ரெண்டு நாளைக்கு முன்னால கௌரிசங்கர் ஹோட்டலுக்கு டீ சாப்பிடப் போனியா?”

“ரெண்டு நாளைக்கு முன்னாடியா? இருக்கலாம். ஏன்?”

“வயசான பிச்சைக்காரருக்கு வடை வாங்கிக் கொடுத்தியா?”

“நானா?”

“நீதான்… உன்னோட போட்டோ முழுசா வரலே. பாதி மூஞ்சிதான் தெரியுது. மெரூன் கலர் சட்டை. ஜீன்ஸ்... கையில் கேஸ் கட்டு... நீயேதான். நான் கண்டுபுடிச்சுட்டேன்.”

“என்னடா உளர்றே? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு…”

“உனக்கு லிங்க் அனுப்பறேன். ஃபேஸ்புக்ல போய்ப் பாத்துட்டுப் பேசு...”

முத்து தொடர்பைத் துண்டித்தான்.

தனபால் வாட்ஸ்-அப்பில் முத்து அனுப்பிய ஃபேஸ்புக் தொடர்பைப் பார்த்தான். தொட்ட உடனே யாரோ ‘மனிதாபிமானன்’ என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்றது.

கௌரிசங்கர் ஹோட்டல் முன்னால் யாரோ ஒரு வயதான பிச்சைக்காரருக்கு வடை கொடுத்துக்கொண்டிருப்பது... அவனேதான். முகம் முழுசாகத் தெரியவில்லை.

தனபாலுக்குச் சுத்தமாகத் தூக்கம் கலைந்துபோய்விட்டது. எழுந்து உட்கார்ந்து தகவலைப் படிக்க ஆரம்பித்தான்.

‘நண்பர்களே... இன்றைக்கு நான் பார்த்த ஒரு சம்பவத்தை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். இந்தக் காலத்தில் இப்படியும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைக்கு நான் கௌரிசங்கர் ஹோட்டலுக்கு நண்பர்களுடன் டீ சாப்பிடச் சென்றிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வயதான பிச்சைக்காரர் ஒருத்தருக்கு வடை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பசி அறிந்து ஒருவருக்கு வடை வாங்கிக் கொடுத்த அந்த நல்ல உள்ளத்தைப் பார்த்ததும் என் உள்ளம் உருகிவிட்டது. உடனே எனது செல்போனில் படம் எடுத்துவிட்டேன். அவர் முகம்தான் சரியாகப் பதியவில்லை. ஆனாலும் என்ன...? இன்னும் மனிதம் சாகவில்லை என்பதை உணர வைத்துக்கொண்டிருக்கும் அந்த அற்புத மனிதரை, நல்ல உள்ளத்தை நாமும் வாழ்த்தலாமே!’
தனபாலுக்கு இப்போது தலை சுற்ற ஆரம்பித்தது.

முந்நூறு ‘லைக்’குகள்... ஐம்பது பகிர்வுகள்...

‘அந்த இளைஞரின் இரக்க குணம் கண்டு தலை வணங்குகிறேன்’

‘நண்பரே நீங்கள் பாக்கியம் செய்தவர். இப்படி ஒரு நல்ல உள்ளத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்களே. அதைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்ட நீங்களும் ஒரு அற்புத மனிதர்தான்.’

‘உன்னைப் போன்ற இளைஞர்களின் சேவை நாட்டுக்குத் தேவை.’

‘உதவும் குணம்கொண்ட இந்த உத்தமருக்கு எனது வாழ்த்துகள்.’

‘வாழ்த்துகள் ப்ரோ...’

‘உங்கள் பணி தொடரட்டும்...’

வாழ்த்துச் செய்திகள் இருநூறைத் தாண்டிக்கொண்டிருந்தன.

வயதான பிச்சைக்காரரின் முகம் முழுசாகத் தெரிகிறது. தனபால் பாதி முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறான். முகம் கொஞ்சமாகத் தெரிகிறது. கக்கத்தில் வைத்திருக்கும் கேஸ் கட்டு தெரிகிறது. காகிதத்தட்டில் மூன்று உளுந்து வடைகள் தெளிவாகத் தெரிகின்றன.

தனபால் குழப்பத்தோடு பாயில் அமர்ந்திருந்தான்.

“பல்லை வௌக்கிட்டு வாடா. டீ ஆறிடப்போகுது...” என்றாள் அம்மா.

“இரும்மா... அப்புறம் குடிச்சுக்கறேன். ஆறினாப் பரவாயில்லே.”

தனபாலுக்கும் ஃபேஸ்புக்கிற்கும் ரொம்ப தூரம். எப்போதாவது ஃபேஸ்புக் பக்கம் போய்வருவான். நண்பர்கள் யாருக்காவது பிறந்தநாள் என்றால் வாழ்த்துத் தெரிவிப்பான். அபூர்வமாக பூனையையோ நாயையோ படம் எடுத்துப் போடுவான். வேறு பெரிதாக எதுவும் எழுதமாட்டான்.

பாலகோபாலபுரம் வீதியில் இருக்கும் வக்கீல் வேல்முருகனின் அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்க்கிறான். அடுத்து இருக்கும் அன்சாரி வீதியில் ஆடிட்டர் ஆபீஸில் முத்துவுக்கு வேலை. பிளஸ் டூ வரை ஒன்றாகப் படித்தவர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் கோர்ட்டுக்குப் போய்விட்டு வரும்போது டீ குடிக்க வேண்டும் போலத் தோன்றியது தனபாலுக்கு. கௌரிசங்கர் பேக்கரிக்குப் போனால் ஏதாவது பலகாரம் சூடாக இருக்கும். வடையோ போண்டாவோ வங்கிச் சாப்பிட்டுவிட்டு ஒரு டீயைக் குடித்துவிட்டு வரலாம் என்று போனான்.

பேக்கரிக்கு முன்னால் நின்றுகொண்டு டீ சாப்பிடும் வசதி இருந்தது. இவன் போன நேரத்தில் பேக்கரியில் கூட்டம். டீ டோக்கனையும் பலகார டோக்கனையும் வாங்குவதற்காகக் கூட்டத்தோடு நின்றுகொண்டிருந்தான்.

“தம்பி… தம்பி...” அவன் சட்டையை யாரோ பிடித்து இழுத்தார்கள்.

தனபால் திரும்பிப் பார்த்தான். தடியை ஊன்றியபடி அந்த வயதான பிச்சைக்காரர் படிக்குக் கீழே நின்று கொண்டிருந்தார். பிளஸ் டூ படிக்கிற காலத்திலிருந்து இவரைப் பார்த்துவருகிறான். பொள்ளாச்சிக்குள் எங்காவது ஒரு வீதியில் இவர் அடிக்கடி தட்டுப்படுவார்.
“மூணு வடை வாங்கு கண்ணு...”

சில்லறைக் காசுகளை நீட்டினார். தனபால் எண்ணிப்பார்த்தான். இருபத்து நான்கு ரூபாய்.

“சட்னி வைக்கச் சொல்லு கண்ணு...”

தனபால் கூட்டத்தில் புகுந்து டோக்கனை வாங்கி, வடைகளை வாங்கிக்கொண்டு படியில் இறங்கி வந்து அவரிடம் கொடுத்தான்.
“மகராசனா இரு கண்ணு...”

வாழ்த்திவிட்டுப் போனார்.

அந்த சில விநாடிகளுக்குள்தான் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

‘செய்யாத உதவிக்கு இத்தனை பாராட்டுகளா?’

தனபாலுவிற்கு மனசு கேட்கவில்லை.

குற்றவுணர்விற்கு ஆளாகி அமைதியற்றுப் போயிருந்தான்.

செல்போனில் முத்துவை அழைத்தான்.

“என்னடா... ஃபேஸ்புக் பார்த்தியா?”

“டேய் அவருக்கு நான் வடையெல்லாம் வாங்கிக் கொடுக்கலடா...”

“பின்னே? போட்டாவுல இருக்கிறது நீதானே?”

“நான்தான்... ஆனா நான் வடை வாங்கிக் கொடுக்கலே... அந்த மனிதாபிமானன் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாரு.”
“என்னடா சொல்றே?”

தனபால் விவரமாகச் சொன்னான்.

“சரி விடு... எப்படியோ உன் புகழ் உலகம் பூராவும் பரவுதுல்ல...” என்றான் முத்து.

“தப்புடா... செய்யாத உதவிக்குப் பாராட்டு வாங்கறது மனசுக்கு நல்லதாப் படலே...”

“விடுறா...”

“அந்த மனிதாபிமானன் போன் நெம்பர் கெடைச்சா கூப்பிட்டுச் சொல்லப்போறேன்.”

“இது ஒரு பெரிய விஷயமேயில்லடா... வாழ்த்துனா வாழ்த்திட்டுப் போறாங்க... உன் முகமும் தெளிவாத் தெரியலே. அப்புறம் என்ன?”
“இல்லடா... இதெல்லாம் வேண்டாம். நான் அவருகிட்ட பேசத்தான் போறேன்...”

“நீ கேட்க மாட்டே...”

தனபால் மனிதாபிமானனைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய அவருடைய ஃபேஸ்புக் கணக்கிற்குள் சென்றான். தொலைபேசி எண் இல்லை. ஊர்: அம்பராம்பாளையம். பிறந்த தேதி, வருடம் எல்லாம் இருந்தன. நாற்பத்தி இரண்டு வயதில் அடி எடுத்து வைக்கிறார். அரசியல் கட்சி ஒன்றில் பங்கு வகிக்கிறார்.

‘...வாழ்த்தலாமே...’, ‘...ஷேர் செய்யலாமே...’ என்கிற ரீதியில் சீரியஸான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். கட்சி விழாக்களில் பங்கேற்று முக்கியப் புள்ளிகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பொன்மொழிகள், அறிவுரைகள், கவிதைகள்கூட எழுதிப் பதிவிட்டிருக்கிறார். உள்ளூர் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற செய்தி உள்ளூர் செய்தி இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ‘மனிதாபிமானன் பங்கேற்றார்’. ‘மனிதாபிமானனின் குமுறல்’, ‘மனிதாபிமானனின் ஆவேச உரை’... சில இலக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். ஏதோ புத்தகத்தை வெளியிடுகிறார். 
பெற்றுக்கொள்கிறார். புகைப்படத்தோடு செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நடந்த உண்மையை எழுதி அவருடைய உள்பெட்டிக்கு அனுப்பலாமா என்று தனபால் யோசித்தான். அதைவிட அந்தப் பதிவிலேயே சென்று விவரமாக எழுதிவிட்டால் என்ன என்று தோன்றியது. மற்றவர்களுக்கும் உண்மை என்ன என்பது தெரியும்.
ஃபேஸ்புக்கில் இதுவரை அவன் எந்தப் பதிவும் எழுதியதில்லை. எப்படி எழுதுவது என்று தெரியாமலே எழுத்துக்களைத் தொட ஆரம்பித்தான்.

‘மனிதாபிமானன் அவர்களுக்கு... மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது நான்தான். உண்மையில் நான் அந்த வயதான மனிதருக்கு என் காசில் வடை வாங்கிக் கொடுக்கவில்லை. அவர்தான் என்னிடம் இருபத்து நான்கு ரூபாயைக் கொடுத்து மூன்று வடைகள் வாங்கித் தரச்சொன்னார். அவர் கொடுத்த காசில்தான் அவருக்கு வடை வாங்கிக் கொடுத்தேன். என்னுடைய காசில் வடை வாங்கிக் கொடுத்ததாகத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். எனக்கு வருகிற பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பார்க்கிறபோது ஒருவிதமான குற்றவுணர்வு ஏற்படுகிறது. இந்தப் பாராட்டுகளுக்கு நான் தகுதியானவனும் அல்ல. எனவே இந்தப் பதிவை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... சிரமத்திற்கு மன்னிக்கவும்.’

தனபால் ஒருமுறைக்கு இரண்டு முறைகள் படித்துப் பார்த்துவிட்டான். சரியாக இருப்பதாகப்பட்டது. இந்த ‘சிரமத்திற்கு மன்னிக்கவும்’ அவசியம்தானா என்று நினைத்தான். இருந்துவிட்டுப் போகட்டும் என்று பதிவிட்டான். மனிதாபிமானன் ஆன்லைனில் இருப்பது தெரிந்தது. இரண்டு நிமிடங்கள்கூட ஆகவில்லை. லைக் போட்டுவிட்டார். ஆனால் லைக் போட்ட வேகத்தில் அவனுடைய கருத்தைத் தூக்கிவிட்டார். அடுத்த இரண்டு நிமிடங்களில் அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார்.

தனபால் உற்சாகமாகிவிட்டான்.

முத்துவை அழைத்தான்.

“டேய் அந்தப் பதிவைத் தூக்கிட்டாருடா”

“எதுக்குடா... அப்படியே விட்டுற வேண்டியது தானே...? அது நீதான்னு யாருக்குத் தெரியப்போகுது” என்றான் முத்து.
திங்கள்கிழமை.

கோர்ட்டுக்குப் போய்விட்டு அலுவலகத்திற்குள் தனபால் நுழையும்போது செல்போன் ஒலித்தது. முத்துதான் அழைக்கிறான்.
“டேய் தனா... மனிதாபிமானன் உன்னைப் பத்தி எழுதியிருக்காரு. படிச்சுப் பாரு...”

“என்னடா எழுதியிருக்காரு?”

“நீயே படிச்சுப்பாரு...”

தனபால் செல்போனை எடுத்து ஃபேஸ்புக்கைத் திறந்தான். மனிதாபிமானனின் கணக்கிற்குள் போனான்.

அந்த வயதான பிச்சைக்காரரின் புதிய புகைப்படம் போடப்பட்டிருந்தது. ஹோட்டல் வாசலில் நின்றுகொண்டிருந்தார். பின்னால் ஆட்டோ ஸ்டாண்டும், சர்க்கரைப் பழ மரமும் தெரிந்தன.

தனபால் புகைப்படத்திற்குக் கீழே இருக்கும் பதிவைப் படிக்க ஆரம்பித்தான்.

‘நண்பர்களே, இரண்டு நாட்களுக்கு முன்னால் நான் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் ஒரு பெரிய தவறு நடந்துவிட்டது. அவசரப்பட்டு ஒரு பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து எழுதிவிட்டேன். இன்றைக்குக் காலையில்தான் அந்தப் பிச்சைக்காரரைச் சந்தித்தேன். அவரிடம் பேசினேன். அப்போதுதான் உண்மை தெரிந்தது.

என்னவென்றால், பிச்சைக்காரருக்கு அந்த ஆள் வடையை வாங்கிக் கொடுக்கவில்லையாம். பிச்சைக்காரர்தான் காசு கொடுத்து மூன்று வடைகளை வாங்கித் தரச் சொன்னாராம். நான் ஏதோ இரக்கப்பட்டு அந்த ஆள் சொந்தக் காசில் பிச்சைக்காரருக்கு வடை வாங்கிக் கொடுத்ததாக எழுதிவிட்டேன்.

அந்த இடத்தில் நான் இருந்தால் பிச்சைக்காரரிடம் காசை வாங்க மறுத்து என் சொந்தக் காசில் வடை வாங்கிக் கொடுத்திருப்பேன். வயதான பிச்சைக்கார மனிதருக்கு உதவி செய்யத் தயங்கியிருக்கமாட்டேன்.

கொஞ்சம் அவசரப்பட்டு அந்த ஆளைப் பற்றி பாராட்டி எழுதிவிட்டேன். எனக்கே அது மிகவும் அருவருப்பாக உள்ளது. ச்சே... இப்படியும் ஒரு மனிதனா என்று கோபம் வருகிறது. பிச்சைக்காரருக்கு உதவி செய்தால் குறைந்தா போய்விடுவார்? சுத்த அல்பம்.
நான் அவசரப்பட்டு செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாகப் பிச்சைக்காரருக்கு என் சொந்தக் காசில் இரண்டு வடைகள் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன்.

மனிதாபிமானம் உள்ள நண்பர்கள் இதை ஷேர் செய்யவும்…’

தனபாலுக்குப் பதற்றமாகவும் படபடப்பாகவும் இருந்தது.

நூறு லைக்குகளையும் எழுபது கமென்டுகளையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.

‘உண்மையை உரக்கச் சொன்னீர்கள்’

‘இரண்டு வடைகள் வாங்கிக் கொடுத்த உங்கள் கருணை உள்ளத்தைப் பாராட்டுகிறேன்.’

‘சபாஷ்... அந்த அல்பத்தனமான மனிதருக்குச் சரியான சாட்டையடி...’

‘சார்... உங்கள் நேர்மைக்கும் இரக்கத்திற்கும் முன்னால் அந்த ஆள் ஒரு அல்பம். தூசு.’

‘நானும் அந்த அல்பத்தை அவசரப்பட்டுப் பாராட்டிவிட்டேன்.’

‘சுயநலப் புழு.’

‘கருப்பு ஆடு.’

இன்னும் என்னென்னவோ திட்டுகள்... வசவுகள்.

தனபாலுக்குத் தலைசுற்றியது.

இன்னும் எத்தனை லைக்குகளையும், திட்டுகளையும் இது கடந்துபோகப்போகிறதோ?

You May Like

More From This Category

short-story

அழைப்பு

சிறுகதைகள்
short-story

பிரியாணி

சிறுகதைகள்
short-story

பரதேசி

சிறுகதைகள்

More From this Author


More From The Hindu - Tamil