முதுமை எனும் பூங்காற்று 20

முதுமை எனும் பூங்காற்று 20

இன்று பெரும்பாலானோர் கைகளில் தவழும் மிக முக்கியமான சாதனம் செல்போன். இளைஞர்கள் எந்நேரமும் செல்போனும் கையுமாக அலைவதாகப் பெரியவர்கள் புலம்புவதைக் கேட்க முடிகிறது. உண்மையில், எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் நல்ல விஷயங்களும் இருக்கும்; கேடு தரும் விஷயங்களும் இருக்கும். அது அந்தப் பொருளின் குற்றமல்ல. சுயக்கட்டுப்பாட்டுடன் அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த வகையில், தலைமுறை இடைவெளியால் செல்போனிலிருந்து விலகி நிற்கும் பெரியவர்களுக்கு அதன் பயன்பாட்டை நாம் கற்றுத்தரலாம். அதன் மூலம், தனிமை, கழிவிரக்கம், தலைமுறை இடைவெளியால் ஏற்படும் கசப்புகள் போன்றவற்றிலிருந்து பெரியவர்களைக் காக்கலாம்!

பேச்சுத் துணை

பெரியவர்களுக்கு எப்பொழுதும் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும். பொழுதைக் கழிப்பதற்கு அவர்களுக்கு அது ஒரு சிறந்த வழி. என் நண்பர் ஒருவர், திருமணமாகி சென்னைக்கு வந்த புதிதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தார். அவருடைய தந்தைக்கு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பேச்சுத் துணைக்கு ஆளில்லை. எனவே, அங்கு வரும் காய்கறிக்காரர் முதல் கூரியர் பையன் வரை அனைவரிடமும், குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது ஏதாவது பேசாமல் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டார்.

ஒருநாள் ஒரு அந்நிய மனிதரிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், அவரை அழைத்து வீட்டு வரவேற்பறையில் அமரவைத்தார். பின்னர் மருமகளை அழைத்து, வந்தவருக்கு காபி போட்டுத் தருமாறு கூறியிருக்கிறார். அவர் யார் என விசாரித்தபோது, “எதிர் வீட்டில் மின்சாரக் கோளாறு. அதைப் பழுதுபார்க்க வந்தாராம். ஆனா, அவங்க வெளியே போய்ட்டாங்க. அதனால அவங்க வர்ற வரைக்கும் நம்ம வீட்டுல உக்காந்து பேசிட்டு இருப்போம்னு கூட்டிட்டு வந்துட்டேன்”னு அந்தப் பெரியவர் சொல்லியிருக்கிறார். நண்பரின் மனைவி பயந்துபோய் கணவருக்கு போன் செய்து வரவழைத்து… ஒரே களேபரமாகிவிட்டது.

உண்மையில், ஒரு தொழிலாளியை வரவேற்பறைக்கு அழைத்து உபசரிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், முன்பின் அறிமுகமில்லாத ஒருவரைத் திடீரென்று வீட்டுக்கு அழைத்துவருவது உசிதமான காரியமல்ல. அந்தப் பெரியவர், பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் என்ற நோக்கத்தில் ஆபத்தை உணராமல் அதைச் செய்துவிட்டார்.

வயதாகும்போது, எதிர்படும் எல்லோரையும் தனது பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்றே பெரியவர்கள் நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு வெள்ளந்தி மனிதர்களாக உள்ளனர். அவர்களின் நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்க வழி
செய்துவிட்டால் நமக்கும் நிம்மதி. அவர்களுக்கும் சந்தோஷம்தான். அதற்கு செல்போனும் ஒரு சாதனம்!

சுருங்கிவரும் உலகம்

ஒருகாலத்தில் வீட்டில் வானொலிப் பெட்டியை வைத்திருக்க வேண்டுமானால், அதற்காக லைசென்ஸ் வாங்க வேண்டும். பின்னர் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அதற்காகப் பெரிய ஆன்டெனாவும் தேவைப்பட்ட காலம் அது. தூர்தர்ஷன் மட்டும்தான் தெரியும் என்றாலும் அதற்காக மொட்டை மாடியில் நின்று ஆன்டெனாவுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். சேட்டிலைட் சேனல்கள், செல்போன்கள் என்று அடுத்தடுத்த வரவுகள் அந்த நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டன. இன்று உடல் உறுப்புகளுக்கு நிகராக நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்கும் சாதனமாக செல்போன் இருக்கிறது.

பெரியவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்

அப்படிப்பட்ட செல்போனின் பயன்பாட்டைப் பெரியவர்களுக்குக் கற்றுத்தரலாம். குறிப்பாக, யு-டியூபை எப்படி பார்ப்பது, அதில் தேவையான விஷயங்களை எப்படித் தேடுவது என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லித்தரலாம். பக்திப் பாடல்கள், சொற்பொழிவுகள், பழைய படங்கள், சமையல் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் என்று பெரியவர்கள் பொழுதைக் கழிக்க அதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

நாட்காட்டி, கால்குலேட்டர், அலாரம் என  சகல அம்சங்களும் செல்போனில் இருப்பதால், கிருத்திகை, அமாவாசை, பிரதோஷம், சஷ்டி என எல்லாவற்றுக்கும் நினைவூட்டல் (Reminder) வைத்துக்கொள்ள பெரியவர்களுக்குக் கற்றுத்தரலாம். ஓலா, ஊபர் போன்றவற்றைப் பற்றியும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னால், பிறர் உதவி இல்லாமல் அவர்கள் வெளியில் சென்றுவரவும் உதவிகரமாக இருக்கும். வங்கிப் பரிவர்த்தனை, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களைப் பெறுதல் என்று பல விஷயங்களுக்கு அது பலன் தரும். நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் என்று சகல ஊடகங்களும் இப்போது செல்போனிலேயே கிடைக்கின்றன.

கடையில் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் மறக்காமல் எழுதி வைத்துக்கொள்ள நோட் புக் போன்ற செயலிகளும் இருக்கின்றன. இவற்றையும் பெரியவர்கள் தெரிந்துகொள்வது நல்லது.

பிரியத்தை அதிகரிக்கலாம்

இன்றைய குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் ஒட்டுதலுடன் இருக்க முடியாததற்கு நவீன சாதனங்கள் பயன்பாடு தொடர்பாக நிலவும் தலைமுறை இடைவெளியும் முக்கியக் காரணம். பெரியவர்கள் எப்படிப்பட்ட அறிவாளிகளாக இருந்தாலும் நவீன சாதனங்
களைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் பேரப் பிள்ளைகள் அவர்களைக் கேலிசெய்வதும் அவர்களுடன் ஒன்றாமல் போவதும் இயல்பாகி வருகிறது.

இந்தச் சங்கடத்தைத் தவிர்க்க, பெரியவர்களையும் செல்போன் உள்ளிட்ட நவீன சாதனங்களுக்குப் பழக்கலாம். இணையத்தில் கிடைக்கும் அறிவார்த்தமான தகவல்களைப் பேரப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளும் தாத்தாக்களும், யு-டியூபில் புதுப் புதுப் பதார்த்தங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு பேரப் பிள்ளைகளுக்குச் சமைத்துத்தரும் பாட்டிகளும் முன்பை விட அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பெரியவர்களுக்குப் பிடித்த பக்திப் பாடல்கள், பழைய சினிமா பாடல்கள், போன்றவற்றைச் சேமித்துத் தரலாம். அவர்கள் இரவு நேரங்களில் காதுகளில் இயர்போனை வைத்துக் கேட்டு ரசித்து அமைதியாக தூங்க அது துணைபுரியும். மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்காது.

தயங்காமல் உதவுங்கள்

பொது இடங்களிலோ அல்லது கூட்டத்திலோ செல்போனில் அழைப்பு வரும்போது, ‘ரிங்டோன்’ சத்தத்தை எப்படிக் குறைப்பது அல்லது எப்படி ‘சைலன்ட் மோ’டில் வைப்பது என்பது பெரும்பாலான பெரியவர்களுக்குத் தெரியாது. அப்படியான சமயங்களில் முகம் சுளிக்காமல் இளம் தலைமுறையினர் அவர்களுக்கு உதவி செய்யலாம்.

பெரியவர்கள் தங்கள் உறவுகளுடன் அதிக நேரம் பேச ஆசைப்படுவார்கள். அதனால், செல்போனில் அதிக நேரம் பேசக்கூடிய  ‘அன்லிமிட்டட்’ சேவைகளை ரீசார்ஜ் செய்து கொடுத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்புவது, புகைப்படம் எடுப்பது என சொல்லித்தந்தால் அவர்களும் வீடியோ  அழைப்பு மூலம் தொலை தூரத்தில் வசிக்கும் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை நேரில் பார்த்து மகிழ்வார்கள். இப்படி சின்னச் சின்ன சந்தோஷத்தில் ஜீவன் இன்னும் இருப்பதாய் பெரியவர்கள் உணர்கிறார்கள்,நெஞ்சம் நிறைய நேசத்துடன் நேரம் ஒதுக்கி, பெரியவர்களுக்கு அவற்றைக் கற்றுத் தருவோம். நம் வாழ்க்கையே பெரியவர்கள் தந்ததுதான். அவர்களுக்கு இப்படியான சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தருவதைவிட இளம் தலைமுறையினருக்கு வேறு என்ன இன்பம் இருக்க முடியும்!

(காற்று வீசும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in