தொடாமல் தொடரும் 18

தொடாமல் தொடரும் 18

“நாளைக்குப் பேசிக்க” போனை வைத்த அஞ்சலி உச்சமான கோபத்துடன் திரும்பி ரகுவைப் பார்த்தாள்.

ஏதோ வில்லங்கம் என்று உள்ளே உணர்ந்தாலும் பதற்றம் காட்டாமல் இயல்பாக, “யாரு போன்ல?” என்றான்.

“கந்தன்சாவடி சைட்லேர்ந்து ப்ளம்பர் பேசறான். ஏதோ பிரச்சினையாம். நீ அந்த சைட்டுக்குப் போய் ஒரு வாரமாச்சாம்!”

“என்ன உளர்றே?”


“உளறுனது நீ. உண்மையைச் சொன்னது ப்ளம்பர்.”

“என்னடி லூசு மாதிரி பேசறே? இப்ப அங்கேர்ந்துதான வர்றேன். எதுக்கு அப்படிச் சொல்றான்? பேசுனது யாரு? பேரைக் கேட்டியா?''

“ப்ளம்பர்னு மட்டும்தான் சொன்னான்.”

“அந்த சைட்ல பதினெட்டு ப்ளம்பர்ஸ் வேலை பாக்கறானுங்க. நான் மாரியப்பன்ட்ட எல்லா இன்ஸ்ட்ரக்ஷன்சும் குடுத்துட்டுதான் வந்தேன். அப்ப இவன் சாப்புடப் போயிருக்கலாம். மாரியப்பன் இவன்ட்ட சொல்லாம இருந்திருக்கலாம். எங்க போனைக் குடு. யாருன்னு பாக்கறேன்.”

அவளிடமிருந்து போனை வாங்கி கடைசியாக அழைத்தது ஜேம்ஸ் என்று பெயர் பார்த்து, “பாரு…பேசுனது ஜேம்ஸ். நான் போனப்ப இவன் இல்ல. அப்பறம்தான் நைட் ஷிஃப்ட்டுக்கு வந்திருக்கான் போலிருக்கு. அதுக்குள்ள என்னை நீ வறுத்தெடுக்கறியே?” என்றவன் அந்த ஜேம்ஸை அழைத்தான்.

அஞ்சலியின் கவனம் தொலைக்காட்சியில், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலில் திரும்ப… அவளுக்கும் கேட்கும்படியாகப் பேசினான் ரகு.
“என்னப்பா ஜேம்ஸ்? இப்பதான் டியூட்டிக்கு வந்தியா?''

“ஆமா சார்'' என்றான் ஜேம்ஸ்.

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நான் சைட்டுக்கு வந்தப்ப நீ என்னைப் பாத்தியா?”

“இல்லையே சார்…வந்திங்களா? யாரும் சொல்லலையே…”

“உனக்குத் தெரியாதப்போ நான் சைட்டுக்கு வந்து ஒரு வாரமாச்சின்னு என் வைஃப்கிட்ட எதை வெச்சி சொன்னே? ரொம்பதான் திமிரெடுத்துப் போச்சி எல்லாருக்கும். மாரியப்பன் எங்க?”

“இன்னிக்கு அவரு லீவு சார்.”

“தெரியும். மாரியப்பன்ட்ட எல்லாம் சொல்லிருக்கேன். நாளைக்கு ஆபீஸுக்குப் போறதுக்கு முன்னாடி சைட்டுக்கு வருவேன். எதுவா இருந்தாலும் அப்ப பேசிக்கலாம். போனை வையி.”

கட் செய்துவிட்டு மீண்டும் அவளருகில் வந்து அமர்ந்து, “இது தங்கப் பதக்கம் படத்துலதான அஞ்சலி?'' என்றான்.

“இல்ல… தீர்க்க சுமங்கலி” என்றாள் அஞ்சலி.

ரகுவின் பைக் அந்தத் தனியார் மருத்துவமனைக்கு வெளியில் நின்றிருக்க… அவன் ஏழாவது தளத்தில் காத்திருப்போர் அமரும் அலுமினிய நாற்காலியில் அமர்ந்து சுவரில் மாட்டிய டிவியில் விளம்பரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்ணாடி ஜன்னலைச் சீருடை ஊழியர் திரவ ஸ்பிரே செய்து துடைத்தான். அங்கிருந்த நர்ஸ் ஸ்டேஷனில் இருந்த பெண் உள்தொலைபேசியை வைத்துவிட்டு, “பவித்ரா அட்டெண்டர் யாரு?'' என்றாள்.

முதலில் யாரையோ என்று அலட்சியமாய் இருந்து… விநாடிகளில் உணர்ந்து எழுந்தான் ரகு.
“ரூம் நம்பர் எட்டுல டாக்டரைப் பாருங்க.”

அறை எண் எட்டில் அவள் சொன்ன டாக்டரைச் சுற்றிலும் மூன்று பயிற்சி மாணவ டாக்டர்கள் சூழ்ந்திருக்க… இவனை முகம் பார்க்காமல் மேஜை மீதிருந்த பல ஃபைல்களில் புரட்டியபடி, “பேஷன்ட் பவித்ராவுக்கு நீங்க என்ன வேணும்?” என்றார்.
“அது…ஃப்ரெண்டு சார்.”

“பேரன்ட்ஸ் இல்லையா?”

“திருப்பூர்ல இருக்காங்க. பவித்ரா இங்க வீடெடுத்து தங்கி வேலை பார்த்துட்டிருக்கா டாக்டர்.”
“அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணலையா?”

“இல்ல டாக்டர். வயசானவங்க. நொந்துடுவாங்க. அவங்களால தாங்க முடியாது.”
“தப்பு சார். இது சின்ன விஷயம் இல்லை. ஆக்சுவலா போலீஸ் கேஸ். டெபுடி கமிஷனர் போன் செஞ்சதாலதான் எடுத்துக்கிட்டோம்.”
“பவித்ரா இப்போ அவுட் ஆஃப் டேஞ்சர்தான டாக்டர்?”

“கிரிட்டிக்கல் பொசிஷன் தாண்டியாச்சு. காலர் போன்ல சின்ன கிராக் இருக்கு. ஆர்த்தோ சர்ஜன் ஒப்பீனியன் கேட்ருக்கோம். அநேகமா சர்ஜரி தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.”

“தேங்க்ஸ் டாக்டர்.”

“அந்தப் பொண்ணு தொங்குனது எதுல? ஸாரியா?”

“துப்பட்டா.''

“இதுவே கயிறா இருந்திருந்தா…ஃபேட்டலாயிருக்கும்.”

“கரெக்ட்டா அவ சேரை உதைச்சித் தள்ளின மொமென்ட் நான் அங்க போய்ட்டேன் டாக்டர்.”
“இட்ஸ் ஓக்கே. என்ன பிராப்ளம்? லவ்வா?”

ரகு அமைதியாய் இருந்தான்.

“பிரச்சினை எதா இருந்தாலும் சரி…எப்ப இந்த ஆட்டிட்டியூட் தெரிஞ்சிடுச்சோ…இனிமே அந்தப் பொண்ணு தனியா இருக்கறது நல்லதில்ல. பேரன்ட்ஸுக்குச் சொல்விங்களோ… இல்ல என்ன பண்ணுவிங்களோ…பாத்துக்கங்க. அப்பறம் ஷீ நீட்ஸ் கவுன்சிலிங். இங்கயே மாளவிகான்னு சைக்கியாட்ரிஸ்ட் இருக்காங்க. ரிசப்ஷன்ல சொன்னா ஃபிக்ஸ் பண்ணிக் குடுப்பாங்க.”
“சரி டாக்டர். டிஸ்சார்ஜ்?”

“ரெண்டு நாள் ஆப்சர்வேஷன்ல இருக்கறது நல்லது.”
“நான் போய்ப் பார்க்கலாமா?”

“ஐ.சி.யூல பேஷன்ட்டைப் பாக்கறது அட்வைசிபிள் இல்ல. ஒரே ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துடுங்க. எதுவும் பேசறதோ அட்வைஸ் பண்றதோ வேணாம்.”

“தேங்க்ஸ் டாக்டர்.”

கை கூப்பிவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவு தளத்திற்கு வந்தான் ரகு. அங்கே அனுமதி பெற்று முகத்திரையும், கையுறையும், ரப்பர் செருப்புகளும் அணிந்து உள்ளே வந்தான்.

மூன்றாவது கட்டிலில் வெறித்த பார்வையுடன் படுத்திருந்த பவித்ரா மருத்துவமனையின் பெயர் தாங்கிய சீருடை அணிவிக்கப்பட்டிருந்தாள்.

கழுத்தைச் சுற்றிலும் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. ட்ரிப்பில் மருந்து சொட்டுச் சொட்டாய் இறங்கி அவளுக்குள் ஏறிக்கொண்டிருந்தது.

ரகுவைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கி ஏதோ சொல்ல முற்பட்டாள்.

“எதுவும் பேச வேணாம் பவித்ரா. நான் வர்றேன்னுதான சொன்னேன். அதுக்குள்ள ஏன் இப்படி? இப்ப நீ அவுட் ஆஃப் டேஞ்சர். தைரியமா இரு. நான் ஒரு நிமிஷம்தான் இங்க இருக்க முடியும். இதை மட்டும் சொல்லு. அப்பா, அம்மாவுக்கு தகவல்…” வேண்டாம் என்பதற்கு தலையை இட வலமாக அசைத்தாள்.

கையெடுத்துக் கும்பிட்டாள்.

“சரி. சொல்லல. ஜென்ரல் வார்டுக்கு மாத்தினதும் எல்லாம் டீட்டெய்லா பேசிக்கலாம். எதையும் நினைக்காம தூங்கு. நான் வர்றேன்.”
ரகு வெளியேறினான்.

லிஃப்ட்டில் இறங்கி தன் பைக்குக்கு வந்தபோது போன் ஒலித்தது.

பெயர் பார்த்தான்.
“சொல்லு மதன்.”

“நேத்து நான் சொதப்பிட்டனாடா?”

“எதைக் கேக்கறே?”

“உன் வைஃப் போன் செஞ்சிக் கேட்டதும் அவசரமா போன் வந்து புறப்பட்டுப் போய்ட்டேன்னு அப்டியே சொல்லிட்டேன். எதுவும் பிரச்சினை இல்லையே?”

“பிரச்சினைதான். உன்னோட ஹோட்டலுக்குப் போய் டின்னர் சாப்ட்டுட்டு வர லேட்டாயிடுச்சின்னு காரணம் சொன்னேன். அப்பறம்தான் நீ போன்ல சொன்னதைச் சொல்றா! கந்தன்சாவடி சைட்டுக்குப் போயிருந்தேன்னு சமாளிச்சி பாத்ரூம் போனா…கரெக்ட்டா அப்பதான் அந்த சைட்லேர்ந்தே போன்! நான் அங்க போய் ஒரு வாரமாச்சேன்னு ஒருத்தன் போட்டுக்குடுக்கறான்.”

“சட்டையப் பிடிச்சிட்டாங்களா?”

“கிட்டத்தட்ட அந்த சீன்தான் நடந்திருக்கும். நான் அதுக்கும் நம்பற மாதிரி ஒரு பொய் சொல்லி சமாளிச்சுட்டேன்.”
“இப்ப சொல்லேன். நேத்து நீ எங்கதான் போனே?”

“பவித்ரா பத்தி சொல்லிருக்கேன்ல… அவ உடனே வரலைன்னா பொணமாதான் பாப்பேன்னு சொன்னா. அதான் ஓடுனேன். நான் ஒரு செகண்ட் லேட்டாப் போயிருந்தா செத்துருப்பா. துப்பட்டால தூக்கு மாட்டி தொங்கிட்டாடா… அப்பறம் ஆம்புலன்ஸ் வெச்சி ஹாஸ்பிட்டல்ல சேத்து… ரொம்ப டென்ஷனாயிடுச்சி. காப்பாத்தியாச்சு. இப்ப ஹாஸ்பிடல் வாசல்லேர்ந்துதான் பேசறேன்.”
“அவ ஃப்ரெண்ட்ஷிப்பை விட்ருன்னு சொன்னப்ப நீ கேக்கல. பாரு… இப்ப எமோஷனலா லாக் ஆகிட்டே!” என்றான் மதன்.

(தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in