காவிரி டெல்டா காக்கப்படட்டும்!

காவிரி டெல்டா காக்கப்படட்டும்!

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

விவசாய அமைப்புகளும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் இதை வரவேற்றிருக்கின்றன. டெல்டா பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஒரு கோரிக்கையை, எதிர்பாராத ஒரு தருணத்தில், அரசு நிறைவேற்றுவதாகச் சொல்லியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. கூடவே, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கத் தேவை இல்லை எனும் விதியை ரத்து செய்யவும், தமிழகத்தில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தவும் மத்திய அரசைத் தமிழக அரசு அணுகியிருக்கிறது. ஆக்கபூர்வமான இந்த நடவடிக்கைகள் திருப்தியளித்தாலும், இதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக எழுந்திருக்கும் சந்தேகங்களையும் அரசு நிவர்த்தி செய்வது அவசியம்.

மாநிலத்துக்கென்று இருக்கும் சட்ட இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்வதில் தமிழக அரசு தடுமாறிவருவதாகச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவரும் பல திட்டங்களை எதிர்ப்பே இல்லாமல் அமல்படுத்த முனைவது, அப்படியான திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, சில திட்டங்களைத் தடாலடியாகத் திரும்பப் பெறுவது என்று இருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

ஏற்கெனவே, நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அணுகிய விதம் மறக்க முடியாதது. எனவேதான், இந்த அறிவிப்பு தொடர்பாகவும் தவிர்க்க முடியாத கேள்விகள் எழுகின்றன. இந்தச் சந்தேகங்களைக் களைந்து, காவிரி டெல்டா பகுதியைக் காப்பாற்றும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒட்டுமொத்தத் தமிழகமும் அரசை நெஞ்சார வாழ்த்தும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in