பேசும் படம் - 38: ரியோ நகரின் மறுபக்கம்

பேசும் படம் - 38: ரியோ நகரின் மறுபக்கம்

உலகின் அழகான நகரங்களில் ஒன்றாக  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ கருதப்படுகிறது. இயற்கை அழகுக்குப் பெயர்பெற்ற இந்நகரம் சில ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி மேலும் புகழ்பெற்றது.  ஆனால், இப்படி பல சிறப்புகள் வாய்ந்த ரியோ நகருக்கு போதைப்பொருள் கடத்தல், கேங் வார் ஆகியவற்றைக் கொண்ட கறுப்பான ஒரு பக்கமும் உள்ளது என்பதைத் தன் புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அந்நாட்டின் புகைப்படக்காரரான ஃபெலிப்பே டன  (felipe dana).

எழில் நகரமாக இருந்த ரியோவுக்கு அபாயகரமான நகரம் என்ற அவப்பெயர் கிடைக்க முக்கியக் காரணம் போதைப் பொருள் கடத்தல். 1980-ம் ஆண்டுவரை கரீபியன் தீவுகளில் தீவிரமாக இருந்த போதைப்பொருள் வர்த்தகம், அதன்பிறகு மெல்ல மெல்ல லத்தீன் அமெரிக்க நாடுக்குள் தனது மூக்கை நுழைத்தது. அதிலும் குறிப்பாக, வசதியான மக்கள் வாழும் பகுதிகளுக்கு இணையாக ஏழைகள் வாழும்  காலனிகளைக் கொண்ட ரியோவில் அது எளிதாக தன் ஆக்டோபஸ் கரங்களை  நுழைத்தது. வேலை வாய்ப்பு வசதிகள் ஏதும் இல்லாமல், பொருளாதார ரீதியில் தத்தளித்துக்கொண்டிருந்த காலனிவாசிகளுக்கு,  எளிதில் பணம் பண்ணும் விஷயமாக போதைப் பொருள் கடத்தலும், போதைப் பொருள் வியாபாரமும் கண்ணில் பட்டது. இதைத்தொடர்ந்து 1986-87-ல் இந்நகரில் போதைப் பொருள் வியாபாரம் மிக முக்கிய வர்த்தகமாக உயர்ந்தது.

போதைப்பொருள் வர்த்தகம் பெருகத் தொடங்கிய அதே நேரத்தில், அதில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையிலான மோதல்களும் அதிகரிக்க, பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆரம்பக்கட்டத்தில் இதைத் தடுக்க வேண்டிய போலீஸாரோ, போதைப் பொருள் கும்பல்களிடம் இருந்து லஞ்சம் பெற்று, அவர்கள் நகருக்குள் வேரூன்ற காரணமாக  இருந்தனர். இதனால் மிகவும் வலுப்பெற்ற  இந்தக் கும்பல்கள், பின்னர் போலீஸுக்கே சவால்விடும் அமைப்புகளாக உருவெடுத்தன.

இப்படி முழுக்க முழுக்க  போதைப் பொருள்  கும்பல்களின் பிடியில் சென்ற ரியோவை மீட்கும் முயற்சியில் 2006-ம் ஆண்டில் அதன் அப்போதைய கவர்னர் செர்ஜியோ காப்ரல் (Sergio Cabral) ஈடுபட்டார். இவரது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போதைப் பொருட்கள் அதிகமாக நடமாடும் காலனிகளில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கான முழு பொறுப்பும் ஜோஸ் மரியானோ பெல்டிரேம் (Jose Mariano Beltrame) என்ற அதிகாரியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.  இதற்காக சிறப்புப் படை ஒன்றை உருவாக்கிய பெல்டிரேம், பிரச்சினைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அதே நேரத்தில், போதைப் பொருள் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அதிக அளவில் குற்றச் செயல்கள் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தினார்.

இவரது நடவடிக்கைகளின் காரணமாக ஓரளவு குற்றச் செயல்கள் குறைந்தாலும், முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளில் தீவிரவாதம் மேலும் அதிகரித்தது. 2012-ம் ஆண்டில் மட்டும் ரியோ டி ஜெனிரோவில் 4,041 கொலைகள் நடந்தன.

இந்த அளவுக்கு மோசமாக சட்டம் ஒழுங்கு இருக்கும் நிலையில்தான் 2014-ம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியும்,  2016-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியும் ரியோநகரில் நடத்தப்பட்டன. தீவிரவாதத்துக்கு நடுவில் எப்படி இந்தப் போட்டிகளை நடத்துவது என்று எல்லோரும் கவலைப்பட்ட சமயத்தில் போதைப் பொருள் வியாபாரிகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை பிரேசில் அரசு நடத்தியது. இதன் விளைவாக ஒரு கட்டிடத்தில் மொத்தமாக பதுங்கிக் கிடந்த  போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில்  42 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர்  கைது செய்யப்பட்டனர்.

 இத்துடன் அங்குள்ள காலனிப் பகுதிகள் முழுக்க பாதுகாப்புப் படையினரை நிறுத்தி கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்தியது பிரேசில் அரசு. இந்தக் காலகட்டத்தில் ரியோ நகரில் இருந்த சூழலைத்தான் இங்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஃபெலிப்பே டன. உலகின் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான இந்தப் படங்களின் மூலம் ரியோ நகருக்கு இப்படியும் ஒரு மறுபக்கம் இருப்பதைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. அரசு தீவிரமாய் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

ஒலிம்பிக் போட்டி முடிந்த பிறகு பிரேசில் அரசு மீண்டும் சற்று அசட்டையாய் இருக்க, இப்போது மீண்டும் போதைப் பொருள் 
கடத்தல்காரர்களிடம் சிக்கித் தவிக்கிறது ரியோ. அமேசான் நதி வழியாக பிரேசிலுக்குள் நுழையும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அவற்றின் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டை வளப்படுத்தும் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயால் ஒருபக்கம் நொறுங்கிப் போயிருக்கும் பிரேசில், மற்றொரு பக்கம் போதைப் பொருள் கடத்தல்காரர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டையும் வென்று பழைய பெருமையுடன் ரியோ நகரும் பிரேசிலும் எழவேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஃபெலிப்பே டன (felipe dana)

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 1985-ம் ஆண்டு பிறந்தவர் பெலிப்பே டன. 15 வயதில் உதவி புகைப்படக்காரராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பெலிப்பே டன, 2009-ல் அசோசியேடட்  பிரஸ்  நிறுவனத்தில் புகைப்படக்காரராக இணைந்து பணியாற்றினார். ரியோ நகரின் உண்மையான நிலை பற்றி இவர் எடுத்த படங்கள் சர்வதேச அளவில் மிகவும் கவனம் பெற்றன. இதைத் தவிர ஈராக் போர் தொடர்பாகவும் இவர் பல்வேறு படங்களை எடுத்துள்ளார்.   வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர்   வென்றுள்ளார். 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் புலிட்சர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in