மொசக்குட்டி

மொசக்குட்டி

அண்டனூர் சுரா
rajamanickam29583@gmail.com

சடையன் எப்பொழுது கொல்லைக்காட்டிற்குச் சென்றாலும் திரும்பி வருகையில் ஏதேனும் ஒன்றை இழுத்து வந்துவிடுவார். நரி, கொக்கு, பாம்பு... இப்படி ஏதேனும் ஒன்று அவரது கையால் செத்துப்போய், காலும் வாலும் தரையில் இழுபட்டுக்கொண்டு வரும். சில நேரம் அவர் ஏதேனும் ஒன்றை உயிருடன் பிடித்து வருவதும் உண்டு.

‘வவ்...வவ்...’ என்று தெரு நாய்கள் அவரைக் கண்டு ஆலவட்டமடிக்கும். தொண்டைத் தண்ணீர் வற்ற குரைக்கும். நாய்கள் ஊரையே கூட்டுவதுபோல் குரைத்துக்கொண்டிருந்தால், சடையன் வீடு திரும்புகிறார் என்று அர்த்தம். அவரது பேரன் அருணும், பேத்தி வினுவும் ஓடி வந்து எட்டிப் பார்ப்பார்கள். ஒரு நாள் அவர் ஒரு நரியை உயிருடன் பிடித்து, கழுத்தைக் கால்களுடன் சேர்த்து இறுகக் கட்டி தூக்கிக்கொண்டு வந்திருந்தார். ஊரும் தெருவும் வீடு வரைக்கும் வந்து நெற்றி சுருங்கப் பார்த்துச் சென்றது. இன்னொரு நாள், ஆளுயர சாரைப் பாம்பை அடித்து அதன் வால்பகுதியைப் பீச்சாங்கையால் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். தெருவே நாலாபுறமும் தெறித்து ஓடியது. அவரது கைக்கு ஒன்றும் பிடிபடாவிட்டால் இருக்கவே இருக்கின்றன, பட்டமரங்கள். வேரோடு பெயர்த்து இழுத்துகொண்டு வருவார்.

அன்றைய தினம் அவர் பிடித்துவந்திருந்தது ஒரு முயல். உயிர் முயல். இரண்டு கைகளால் கச்சிதமாகப் பொத்தித் தூக்கும் அளவிற்கு அடக்கமாக இருந்தது. கொழுகொழுவென உடம்பு. வால் சிறுத்து, வயிறு பெருத்து, சாம்பல் நிறத்தில் அத்தனை அழகாக இருந்தது.
தூரத்தில் சடையன் வரும்போதே அதை வினு பார்த்துவிட்டாள். “அய்…” என்று துள்ளிக்குதித்தாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in