போர்முனை டு தெருமுனை - 4

போர்முனை டு தெருமுனை - 4

எனது பனிமலையேற்றப் பயணத்தின்போது, கூடாரத்தில் இரவு தங்கினோம். மறுநாள் அதிகாலையிலேயே பயணத்தைத் தொடர வேண்டும் என்று சொல்லப்பட்டது. பயணக் களைப்பு நீங்க நீண்ட நேரம் தூங்கி நிதானமாக எழுந்தால் என்ன... ஏன் அதிகாலையிலேயே பயணத்தைத் தொடங்க வேண்டும்? பனிமலையில் கடுங்குளிர் மட்டுமல்ல. குளிருக்கு மாற்றாக நம்பப்படுகிற சூரியக் கதிர்களும் பயணத்தைப் பாதிக்கும்.

பனியினால் தோல் வெடிப்புகள் ஏற்படுவது நமக்குத் தெரியும். சூரியக் கதிர்கள் நேரடியாக முகத்தில் படுவதாலும், வெள்ளை வெளேரென்று படர்ந்திருக்கிற பனிப்பரப்பில் பட்டு பிரதிபலிப்பதாலும் தோல் கருகும். சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பு கண்களைக் குருடாக்கும் அளவுக்கு மிக மிகப் பிரகாசமாக இருக்கும். இதனால், தலைவலி உள்ளிட்ட கூடுதல் பிரச்சினைகள் ஏற்படும். இன்னொரு சங்கதியும் உண்டு. சூரியக் கதிர்களால் பனியின் மேற்பரப்பு உருகியிருக்கும். நடந்தால் சறுக்கும். எனவே, சூரியோதயத்திற்குச் சில மணி நேரங்கள் முன்பே பனிமலையில் நடைப்பயணங்களைத் தொடங்கியாக வேண்டும்.

நமது ராணுவ வீரர்கள் வெயிலிலும் பனியிலும் தொடர்ந்து கடமையாற்ற வேண்டும். சூரியக் கதிர்களால் அவர்களுடைய தோல் பாதிக்கப்படும். பனியிலும் சரி, பாலைவனத்திலும் சரி அவர்கள் கடுமையான தோல் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். இதைச் சமாளிக்க, டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் தயாரித்துள்ள சூரியத் தடுப்பு க்ரீம் (Sun Screen Cream), போர் வீரர்களின் அத்தியாவசிய தோல் பாதுகாப்புப் பொருள்!

வயதாக்கும் சூரியன்

சூரியத் தடுப்பு க்ரீம் எப்படி வேலை செய்கிறது? இது சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர்களைத் (Ultra Violet Rays) தடுக்கிறது. சூரியத் தடுப்புப் பூச்சுகளின் தடுத்து ஆளும் திறனை, சூரியப் பாதுகாப்புக் காரணி (Sun Protection Factor-SPF) என்ற அளவுகோலில் வகைப்படுத்தலாம். எஸ்.பி.எஃப் -15, 30, 50 எனப் பல வகைகளில் சூரியத் தடுப்புப் பூச்சுகள் உண்டு. புற ஊதா கதிர்களிலும் ஏ, பி என்று வகைகள் உண்டு (UVA, UVB). பி-கதிர் தோலின் மேலடுக்கான எபிடெர்மிஸைத் தாக்கி, தோலைச் சிவப்பாக்கும் (Sun Burn). ஏ-கதிரானது தோலின் கீழடுக்கான டெர்மிஸைத் தாக்கி, தோல் சுருக்கத்தை ஏற்படுத்தும். சூரியத் தடுப்பு  க்ரீம், ஏ... மற்றும் பி-வகை கதிர்களிலிருந்து தோலைக் காக்கும். எஸ்.பி.எஃப்-15 வகை க்ரீம், 93 சதவீதம் வரையிலும், எஸ்.பி.எஃப்-30 வகை க்ரீம் 97 சதவீதம் வரையிலும், எஸ்.பி.எஃப்-50 வகை க்ரீம் 98 சதவீதம் வரையிலும் பி-வகை கதிர்களைத் தடுத்தாளும்.

ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள சூரியத் தடுப்புப் பூச்சின் தடுத்தாளும் திறன் எஸ்.பி.எஃப்- 50-ஐ விட அதிகமானது. நான்கு மணி நேரம் தொடர்ந்து பாதுகாப்புத் தரும். அசாம் மாநிலம் தேஸ்பூரிலுள்ள பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தின் (Defence Research Lab) தயாரிப்பு இது.

தோல் வெடிப்பு மருந்தும் டீ தூளும்பனிமலையில் பணிபுரியும் வீரர்களுக்குப் பனியினால் ஏற்படும் தோல் வெடிப்புகளும் இன்னொரு பிரச்சினை. இதற்கும் தீர்வு உண்டு. இதைக் குணமாக்க ராணுவ விஞ்ஞானிகளால், குறைகள் - எதிர் க்ரீம் (Anti Blemishes Cream) உருவாக்கப்பட்டுள்ளது. இமயமலைத் தொடர்களின் பள்ளத்தாக்குகளில் விளையும் ‘ஸீ பக்தார்ன்’ (Sea Buckthorn) செடியின் பெர்ரி பழம், வைட்டமின்-சி சத்து நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட இப்பழங்களை செங்கிஸ்கானின் படைவீரர்கள் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உண்டு. இப்பழத்தின் எண்ணெய்தான் இந்தத் தோல் மருந்தின் மூலப்பொருள். எஸ்.பி.எஃப் - 45-ஐ விட அதிகமான புற ஊதா பாதுகாப்பைத் தரும் இந்த  க்ரீம், தோல் வெடிப்புகளை ஸ்வஸ்தப்படுத்தும்.

இதை உருவாக்கியது லடாக்கின் லே (Leh) பகுதியில் அமைந்துள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வுக்கூடமான அதி உயர ஆராய்ச்சிக்கான பாதுகாப்பு நிறுவனம் (Defence Institute of High Altitude Research). இந்த ஆய்வுக்கூடத்து விஞ்ஞானிகளின் இன்னொரு படைப்பு, ‘ஸீ பக்தார்ன்’ இலைகளிலிருந்து தயாராக்கப்படும் மருத்துவ குணங்கள் கொண்ட தேயிலை. ஆம், ராணுவ விஞ்ஞானிகள் டீத் தூள்கூட தயாரித்துள்ளனர்!

பசி தூண்டும் மூலிகை

பனிமலையில் பாதுகாப்புப் பணிக்கு வரும் ராணுவ வீரர்கள், அங்குள்ள தட்பவெப்ப நிலையோடு ஒத்திசைவது அவசியம். மேலும் எத்திசை நோக்கினும் காணும் வெண்பனி அலுப்பை ஏற்படுத்தி மன அழுத்தத்தை அதிகரிக்கும். பசியும் குறையும். இந்தச் சவாலுக்குத் தீர்வாக உருவாக்கப்பட்டிருக்கிறது மூலிகையாலான ஒத்திசைவு மற்றும் பசியைத் தூண்டும் (Adaptogenic Appetizer) மருந்து.

லடாக் பகுதியின் குளிர்ப் பாலைவனங்களில் வளரும் சோலோ (Solo) என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது இந்த மருந்து. ரோடியோலா ஹெட்ரோடோன்டா (Rhodiola Heterodonta) என்ற தாவரப் பெயரைக் கொண்ட சோலோ, மருத்துவக் குணமுள்ளது.

வெண்புள்ளி போக்கும் பெரும்புள்ளி சிலருக்குத் தோலில் வெண்புள்ளிகள் அல்லது வெண் பட்டைகள் ஏற்படும். நம் தோலுக்கு நிறத்தை தருகிற மெலனின் (Melanin) குறைவினால் நிற மாறுபாடு தோன்றும். மெலனின் சுரக்கும் செல்கள் மெலனோஸைட் (Melanocyte) என்றழைக்கப்படும். தோல் நிறமிழப்பை மருத்துவத் துறையில் விடிலிகோ (Vitiligo) அல்லது லுகோடெர்மா (Lucoderma) என்று அழைக்கிறார்கள். பாலின வேறுபாடின்றி யாரையும் எவ்வயதிலும் இக்குறைபாடு தாக்கலாம். ஏறக்குறைய 5 சதவீத இந்தியர்கள் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சராசரியைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம். இக்குறைபாட்டினால் ஏற்படும் உடலியல் ரீதியான பாதிப்புகளைவிட சமூக ஏளனமும் புறக்கணிப்பும் அதிக மன அழுத்தத்தை ஏற்
படுத்துவது உண்மை. இது களையப்பட வேண்டும்.

மருத்துவத் தீர்வுகளில்லாத இக்குறைபாட்டிற்குக் குறைந்த செலவில், அருமருந்தாக அமைந்திருக்கிறது ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள லூகோஸ்கின் (Lukoskin). இமயமலைப் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் லூக்கோஸ்கின், தோலின் நிறத்தை மீட்டெடுப்பதில் நல்ல பலனைத் தந்துள்ளது. தோலில் தடவும் களிம்பாகவும், உட்கொள்ளும் திரவ மருந்தாகவும் கிடைக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வுக்கூடமான பாதுகாப்பு உயிரிசக்தி ஆராய்ச்சி மைய (Defence Bio-Energy Research (DIBER) centre) விஞ்ஞானிகளின் தயாரிப்பு இது.

‘லே பெர்ரி' பானம்

கடுங்குளிரில் காவல் பனியிலிருக்கும் வீரர்களின் நீர்ச்சத்துக் குறைவை ஈடுசெய்ய பானங்கள் உதவும். ஆனால், உறைநிலைக்கும் குறைவான கடும் குளிரில் பானங்கள் உறைந்துவிடும்.  எனவே, கடும் பனியிலும் உறையாத பானங்களைத் தயாரிக்கும் முயற்சியில் பாதுகாப்பு விஞ்ஞானிகள் இறங்கினார்கள். ஸீ பக்தார்ன் செடியின் பெர்ரி பழம் இமயமலைப் பகுதிகளில் பரவலாகக் கிடைக்கும். எனவே, பெரும் போக்குவரத்துச் சிக்கலின்றி பழங்களைப் பெற முடியும். ஆனால், ஒரு தொழில்நுட்பச் சிக்கல் உண்டு. இப்பழத்தின் சாறு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. கெட்டுப்போகும். இதற்குத் தீர்வாக டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள், பெர்ரி சாற்றைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கினர். இடத்தின் பெயராகிய ‘லே’ உடன் சேர்த்து ‘லே பெர்ரி' என்ற 
வணிகப் பெயரில் தயாரிக்கப்படும் இப்பழச்சாறு உறைநிலைக்குக் கீழே 20 டிகிரி செல்சியஸ் வரை உறையாது. சுலபமாகப் புரிந்து
கொள்ள வேண்டுமானால் நம் வீட்டுக் குளிர்பதனப் பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்தால்கூட உறையாது.

ராணுவ வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட `லே பெர்ரி' பானத்தின் தொழில்நுட்பம் பல்வேறு நிறுவனங்களின் மூலம் பொதுச் சந்தையிலும் விற்கப்படுகிறது. இப்பழச்சாறு இணையச் சந்தையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆண்டுக்கு ஏறக்குறைய  5 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறது.

போர் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இம்மருந்துப் பொருட்களும் பழச்சாறும், பொதுமக்களுக்கும் பயன்படுவது ராணுவ விஞ்ஞானிகளின் உழைப்பை நியாயப்படுத்துகிறது. ராணுவ ஆராய்ச்சியின் வீச்சு எல்லைகளை விரிவுபடுத்துகிறது.

‘ராணுவம் தனது வயிற்றால் நகர்கிறது’ என்பார்கள். அதாவது ராணுவ வீரர்களுக்கு உணவு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருந்தால் ராணுவம் தொய்வில்லாமல் போர் முனையில் முன்னேறிச் செல்லும் என்று அர்த்தம். போர்க் கருவிகளின் உருவாக்கத்தில் மட்டுமின்றி உணவுத் தொழில்நுட்பங்களிலும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள். அடுப்பின்றி பொட்டலமே தானாக உணவைச் சூடாக்கும் தொழில்நுட்பமும் அதில் உண்டு. அது எப்படிச் 
சாத்தியம்?

(பேசுவோம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in