இன்னும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்!

இன்னும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பீதி மீண்டும் உருவாகியிருக்கிறது. குறிப்பாக, சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் அதிகமான பாதிப்புகள் இருப்பது தெரியவந்திருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் டெங்கு அறிகுறிகளுடன் சராசரியாக 4 பேர் மருத்துவமனைகளுக்கு வருவதாகத் தமிழக சுகாதாரத் துறையே தெரிவித்திருப்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயம்.

முன்பெல்லாம் ‘மர்மக் காய்ச்சல்’ என்ற பெயருடன் உண்மைகளை மறைப்பதிலேயே அரசு குறியாக இருக்கும். இந்த முறை ஆரம்பத்திலேயே அரசு வெளிப்படையாகப் பேசுவது ஆறுதலான விஷயம். தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 80 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் கிடைத்த கசப்பான அனுபவங்கள், தமிழக அரசிடம் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கலாம். டெங்குவால் இறப்பு இல்லாத நிலையை அரசு உருவாக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி கூறியிருக்கிறார். ஆனால், இந்த உறுதி மட்டும் போதாது.

பருவமழை தொடங்கும் காலத்தில் டெங்கு போன்ற காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் அக்டோபர் மாதம் வட கிழக்குப் பருவ மழை தொடங்கவிருக்கும் சூழலில், டெங்கு போன்ற பாதிப்புகள் தொடர்பாக அரசு முன்னெச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். ஏடிஸ் எஜப்டை வகை கொசுக்கள்... டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைப் பரப்புகின்றன. கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தால், இந்தப் பிரச்சினை மீண்டும் உருவாகியிருக்காது. ஒவ்வொரு முறையும், டெங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் விவாதங்களும் நடக்கின்றன. ஆனால், அது தொடர்வதில்லை. இந்நிலையில், இவ்விஷயத்தில் ஆண்டு முழுவதும் சுகாதாரத் துறை விழிப்புடன் செயலாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

டெங்கு வைரஸ் சாமர்த்தியமானது; அதை ஒழிப்பதில் தீவிர முனைப்புத் தேவை என்று மருத்துவ அறிவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு அரசு இன்னும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in