சிந்தித்து சிரி!

சிந்தித்து சிரி!

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

ஒரு ஊர்ல ஒரு நரியாம் டைப் குறுநாவல். காயாவனம் என்ற காட்டில் வசிக்கும் மிருகங்களின் வாழ்வியலை தனக்கே உரிய பகடி மொழியில் கதையாக்கியிருக்கிறார் வா. மு. கோமு. அந்தக் காட்டுக்கு வரும் ஜீலர் என்ற நரியின் வருகையும் அதற்கு முன்பாக காட்டில் நடக்கும் நிகழ்வுகளும் நாவலாக விரிகிறது. இந்தப் புத்தகம் சிரிக்க மட்டுமே என்று முன்னுரையில் நாவலாசிரியரே சொல்லியிருந்தாலும் சமகால அரசியல் பதிவுகளாகவும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போகும் சாமானியனின் வாழ்வை இருண்மை நகைச்சுவையாய் விளக்கியிருக்கிறார். காயாவனம், மண்டைச்சளி குகை, கிட்னியில் கல் இருக்கும் முயல், ஆஸ்துமா பேஷண்ட்டான கிழச் சிங்கம், யானைக்கால் வியாதியால் அவதிப்படும் யானை, மலக்குடலில் கல் இருக்கும் மயில் என்று வா.மு. கோமுவுக்கே உரிய அசலான நையாண்டியில் பக்கங்கள் விரிகின்றன. மிருகங்கள் பேசும் மொழிக்கு தன் கொங்கு மண்ணின் எள்ளலைச் சேர்த்திருப்பது கூடுதல் சுவாரசியம்.வைத்திய சிகாமணி கரடியாருக்கும் மலக்குடல் பிரச்சினையாளர் மயிலுக்கும் இடையே நடக்கும் உரையாடலுக்கு வாய்விட்டு சிரிக்காதவர்களை அக்கரடியாரிடமே சிகிச்சைக்கு அனுப்பலாம். அத்தனை அலும்பு எழுத்து நடையில்.

"ஒரே ஒரு மருந்து. அதை நீ குடுத்துடு எனக்கு. குடிச்சதீம் நான் பரலோகம் போயிடணும். காடு பூராவும் கடன். கடனைத் திருப்பிக் குடுக்க வழியில்ல. ஓநாயெல்லாம் என்னை சாவமாட்டாம திரியிறாம் பாரு கிழட்டுக் கபோதின்னு பேசுறதைக் காதால கூட கேட்க முடியல. ஒரே ஒரு மருந்து. அது எனக்கு வேணும்’’ என்னும் சிங்கத்தின் முடிவு சிரிப்புக் கதையின் சீரியஸ் அத்தியாயம். ஆச்சரியமாய் வலி உணரும்படியே எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை கரட்டில் ட்ரஸ்ட் வைத்திருக்கும் ஜீலர் நரியின் முதல் மேடைப் பேச்சு, சமூகத்தில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கார்ப்பரேட் சாமியாரை ஞாபகப்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. சத்தியமங்கலம் காட்டுக்கு கங்காரு வைத்தியர் வருவதெல்லாம் அல்டிமேட் ரகளை. ஜீலர் நரியின் சிகிச்சை முறையான வால் வழி கடி சிகிச்சையும் அது உருவான விதமும் ஆயிரம் தெலுங்கு தமிழ் மசாலா சினிமாக்களின் பாணியில் செம கிச்சுகிச்சு. ஆஸ்திரேலியாவுல இந்த வால் வழி கடி சிகிச்சைக்கு கலீல் ஜிப்ரான் ட்ரீட்மென்ட் என்று வாசிக்கும்போது சூழல் மறந்து சிரிக்கத் தோன்றுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in