குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

நன்றி

வணக்கம்!
இது காமதேனுவில் என் இருபதாவது வாரம். இத்தனை வாரங்ககள் தொடர்ந்து என்னால் எழுத முடியும் என்று நம்பிக்கை தந்த ஆசிரியருக்கும் காமதேனுவின் குழுவுக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் நன்றி.
பணி நெருக்கடி காரணமாக ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். சில மாதங்களில் மீண்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து எழுதுவேன்.
அன்புடன்
- மதன் கார்க்கி

குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
நீரின்றி உலகில்லை வானின்றி நீரில்லை.
#0020

வடிவமைப்பு

நண்பர் உதயன் தமிழுக்காக சில அழகான எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் என் கையெழுத்தை எனக்காக
எழுத்துருவாக மாற்றித் தந்தார். இந்த எழுத்துருக்
களை விலையின்றி யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துகொள்ளும்படி ஒரு தளம் அமைத்துள்ளார். உங்கள் பெயரை வெவ்வேறு எழுத்துருக்களிலும் வட்டெழுத்திலும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். இது போல் ஆயிரக்கணக்கில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக வேண்டும். (http://fonts.udhayam.in)

நிழல்

மினியாபொலிஸ் பூங்கா ஒன்றில் இந்த அணிலைக் கண்டேன். கையில் ஏதோ ஒரு கனியை வைத்துத் தின்றுகொண்டிருந்தது. அருகில் செல்லச் செல்ல நகராமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. இரண்டு நிமிடங்கள் நாங்கள் அசையாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். என் உணவு மேசைக்கு ஒருநாள் ஒரு அணில் வந்தமர்ந்தால், நானும் அஞ்சி ஓடாமல் விரட்டிவிடாமல் அதேபோல் சொற்களின்றி ஓர் உரையாடல் நிகழ்த்த வேண்டும்.

ஐவரி

சென்ற வார தோரணிக்கான ஐவரி...

தொழில்நுட்பம்

ஜனவரி மாதம் முதல் நாள் அப்பாவின் நண்பர்கள் பலர் நாட்குறிப்புகள் பரிசளிப்பர். ஒரு ஆண்டு எனக்கு ஒரு நாட்குறிப்பை அப்பா தந்து எழுதச் சொன்னார். நானும் சில ஆண்டுகள் எழுதிக் கொண்டிருந்தேன். 'இன்று இட்லி நல்லாயிருந்துச்சு. ஆனா, சட்டினி பிடிக்கல' போன்ற பல வரலாற்று நிகழ்வுகளை அதில் பதிவு செய்வேன். காலப்போக்கில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் மறைந்துவிட்டது. இப்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். சென்ற ஏப்ரல் 'Day One' என்ற குறுஞ்செயலியை வாங்கினேன். என் கைப்பேசி, மடிக்கணினி என்று அனைத்துக் கருவிகளிலும் என்னால் பயன்படுத்த முடிகிறது. தினமும் தவறாமல் குறிப்புகள் எழுதி வருகிறேன். குறிப்பு எழுதும் நேரம், இடம் அந்த இடத்தின் வானிலை, எடுக்கும் புகைப்படங்கள் என்று அனைத்தையும் பதிவு செய்துகொள்கிறது இந்தச் செயலி. குறிப்புகளை வகைப்படுத்த முடிவதால் தேடல் வசதியும் மிக எளிதாக இருக்கிறது. 'காயங்குளம் கொச்சுண்ணி’ படத்துக்கான குரல் பதிவு நடந்தது. மதிய உணவுக்கு பிரியா ஆனந்த் கிரேட் வால் என்ற உணவகத்தில் சுவையான மிளகு நண்டு வாங்கித் தந்தார்' என்று வரலாற்றுப் பதிவுகள் 
தொடர்கின்றன.

ஓவியம்

நானும் ஐக்கூவும் இணைய வழியாக வரைகலை கற்றுவருகிறோம். வெவ்வேறு வகை வரைகோல்களைக்கொண்டு கோடுகள் தீட்டி கண் முன் காணும் அல்லது கற்பனையில் தோன்றும் உருவங்களை வரையக் கற்று வருகிறோம். நான் வரைந்த சில வரைபடங்கள் இவை.
www.karky.in/ivari

பாடல்

நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று
நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று
உன் நெஞ்சமே உன் போர்க்களம்
உன் வீரமே உன் ஆயுதம்
உன்னுள் அச்சங்கள் கோடி நீக்கப் போராடு
உன்னுள் ஐயங்கள் யாவும் போக்கப் போராடு
கோபம் இரக்கம் ரெண்டும் ஆளப் போராடு
வேகம் நிதானம் ரெண்டும் ஆளப் போராடு
நீயே நீயே உனதொரு தடையாய்
நீயே நீயே உடைத்திடும் படையாய்
நீயே நீயே உனக்கொரு எதிரி
நீயே நீயே உனக்கொரு புலரி
நீ சிந்தும் துளியினிலே ஆழி மூழ்க
உன் பார்வை ஒளியினிலே பாதை நீள்க
நீ செல்லும் வழியினிலே பூக்கள் வீழ்க
நீள் வான வெளியெனவே நீயும் வாழ்க
ஒவ்வோர் இரவிலும் இறந்திடு இறந்திடு
புத்தம் புதிதென தினம் தினம் பிறந்திடு
உந்தன் மமதைகள் எரித்திடு பணிந்திடு
உந்தன் குறைகளை புகழென அணிந்திடு
வாழும் மனிதனின் முடிவெது முடிவெது
முயற்சியை நிறுத்திடும் நிமிடம் அது
உந்தன் தலையினில் ஏறப்போகுது
எதிரிகள் அணிவிக்கும் மகுடம் அது
www.karky.in/lyrics

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in