இந்தியன் நெ.1: இந்திய இலக்கியத்தின் பிதாமகன்

இந்தியன் நெ.1: இந்திய இலக்கியத்தின் பிதாமகன்

இந்தியா, வங்கதேசம், இலங்கை என்று 3 நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர்,  காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தைக் கொடுத்தவர், மாற்றுக் கல்வியை போதிக்கும் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர்,  சாந்தினிகேதனை தோற்றுவித்தவர்,  வங்கதேசத்தில் ஓவியக் கலைக்கு புத்துணர்வு கொடுத்தவர் - இப்படி  பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ரவீந்திரநாத் தாகூர்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் தாகூரைச் சேரும். தன் கவிதைகள் மூலம் இந்திய இலக்கியத்தின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்திய தலைமகனான ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.

1861-ம் ஆண்டு மே 7-ம் தேதி கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தேவேந்திரநாத் தாகூர், தாயார் சாரதா தேவி. சிறுவயதிலேயே தாயாரை இழந்ததால், வீட்டு வேலைக்காரர்களால் வளர்க்கப்பட்டார் ரவீந்திரநாத் தாகூர். இவரது தந்தை பெரும் செல்வந்தர் என்பதாலும், தாய் இல்லாத பிள்ளை என்ற பரிதாபம் காரணமாகவும் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார் தாகூர். படிப்பதற்காக பள்ளிக்குச் செல்லவேண்டிய அவசியம்கூட இவருக்கு ஏற்படவில்லை. தன் மகன் சொகுசாக கல்வி கற்க வசதியாக ஆசிரியர்களை வீட்டுக்கே வரவழைத்தார்  தேவேந்திரநாத் தாகூர்.

தாகூரின் அப்பாவுக்கு இசை மற்றும் கலைகளில் ஆர்வம் அதிகம். அதனால் புகழ்பெற்ற கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் வீட்டுக்கு வரவழைத்து உபசரிப்பதையும், அவர்களின் நிகழ்ச்சிகளை வீட்டில் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ரவீந்திரநாத் தாகூருக்கும் சிறு வயதில் இருந்தே இலக்கியத்திலும், கலைகளிலும் ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதில் வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், ஓவியம் வரைவது, இலக்கியம், புவியியல், மலையேற்றம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் எனப் பல்வேறு துறைகளில்  அடிப்படைக் கல்வி பெற்றார் தாகூர். குறிப்பாக, தனது அண்ணன் ஹேமேந்தர்நாத்திடம் இருந்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது பற்றி தெரிந்துகொண்டார்.

ஆரம்பக் கல்வியை கொல்கத்தாவில் முடித்த தாகூர், பின்னர் தனது தந்தையாருடன் வணிகம் தொடர்பாக பல்வேறு ஊர்களுக்குச் சென்றார். இடைப்பட்ட காலத்தில்  சம்ஸ்கிருதம் மற்றும் வங்க மொழியைக் கற்றுக்கொண்டார். தாகூரை ஒரு வழக்கறிஞராக்கி பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவரது தந்தை, லண்டனில் உள்ள  பிரைட்டன் கல்லூரியில் மகனைச் சேர்த்தார். ஆனால், அங்கு சேர்ந்த சில நாட்களிலேயே தனக்கும் சட்டப் படிப்புக்கும் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்த தாகூர், 1880-ம் ஆண்டு  சட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பினார். கொல்கத்தா திரும்பிய இவர், இசை ஆசிரியர்களை வைத்து முறைப்படி சங்கீதம் பயின்றார். அத்துடன் இலக்கியத்தின் மீது காதல் கொண்டு கவிதை நூல்களை வெளியிடத் தொடங்கினார். 1883-ம் ஆண்டு, 10 வயதான மிருணாளினி தேவியைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆன்மிகம் மற்றும் கலைகளில் தீவிர ஆர்வம் கொண்ட தாகூர், தனது மனதுக்குப் பிடித்த ஒரு இடத்தை உருவாக்க  விரும்பினார். அந்த முயற்சியில் 1901-ம் ஆண்டில் சாந்தினிகேதனில் தனக்கென்று ஒரு ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். மந்திர் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம், ஒரு சிறிய பிரார்த்தனை அரங்கம், நூலகம், பெரிய தோட்டம் என்று இலக்கியவாதிகள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஆசிரமமாக சாந்தினிகேதன் ஆசிரமம் அமைந்தது. இந்த ஆசிரமத்தில் இருந்துகொண்டு பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டார் ரவீந்திரநாத் தாகூர்.

1905-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு வங்கத்தை இரண்டாக பிரிக்க, அதை எதிர்த்து அங்கு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. தாகூருக்குள் இருந்த தேசியவாதியை இந்தப் போராட்டம் வெளிக்கொண்டு வந்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து  பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார் தாகூர்.   பல்வேறு கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சேவைகளை இவர் மேற்கொண்டார்.  தீண்டாமைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1912-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார் தாகூர். அந்தப் பயணத்தின்போது, தான் எழுதிய சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளையும்  அவர் எடுத்துச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது டபிள்யூ.பி.யீட்ஸ் என்ற கவிஞருடன்  தாகூருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தாகூரின் கவிதைகள் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று கருதிய யீட்ஸ்,  அவற்றை சரியான முறையில் மொழிபெயர்க்க தாகூருக்கு உதவினார்.

 ‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் வெளியான அந்தக் கவிதைத் தொகுப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 6 மாதங்களிலேயே அந்தக் கவிதைத் தொகுப்பின் 10 பதிப்புகள் வெளியாகி விற்றுத் தீர்ந்தன. அத்துடன் 1913-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும், ரவீந்திரநாத் தாகூருக்கு இது பெற்றுத்தந்தது. இதன்மூலம், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் தாண்டி, இப்பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர்  என்ற பெருமையையும் பெற்றார்.
நோபல் பரிசு பெற்றதைத்தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தாகூர் புகழ்பெற்றார். இவருக்குப் பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்புகள் வந்தன. ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாகூரை வரவேற்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு பெற்றபோது கிடைத்த பரிசுத் தொகை, தனது இலக்கிய நூல்களின்மூலம் கிடைத்த வருமானம் மற்றும் நன்
கொடைகளைக்  கொண்டு 1921-ம் ஆண்டில்சாந்தினிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை தொடங்கினார் தாகூர். அதுவரை இருந்துவந்த கல்வித்திட்டங்களுக்கு மாற்றாக புதிய கல்வித் திட்டத்துடன் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதில் பல பாடங்கள் திறந்தவெளியில் வைத்து நடத்தப்பட்டன.

தாகூருடன் பல்வேறு அறிஞர்களும், தலைவர்களும் நெருங்கிய  தொடர்பில் இருந்தனர். இதில்  முக்கியமான மனிதராக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைச் சொல்லலாம். தாகூரை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசினார். இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய அளவில் சேவையாற்றிய ரவீந்திரநாத் தாகூர், 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். தாகூர் காலமானாலும் அவர் இயற்றிய கவிதைகளும், மாற்று கல்விக்காக அவர் தொடங்கிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகமும் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை பரப்பிக்கொண்டு இருக்கின்றன.

தூக்கி எறியப்பட்ட சர் பட்டம்

1915-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூருக்கு ஆங்கிலேய அரசு சர் பட்டம் வழங்கியது. ஆனால் 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அந்த சர் பட்டத்தை தூக்கி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in