கனா பேச்சு 9- சாமி தந்த சாபம்?

கனா பேச்சு 9- சாமி தந்த சாபம்?

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

பல வருடங்களுக்கு முன்பான சாபத்தின் கதை இது. எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி உள்ள பெரிய தலைக்கட்டு வீட்டின் இரண்டாவது பிள்ளை சாமிநாதன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜீன் பிரச்சினையில் இளம் வழுக்கை, தலை முடியைக் காவு வாங்கியிருந்தாலும் அடர்த்தியான மீசையிலும் உதடு குவிந்த சிரிப்பிலும் மலையாள நடிகர் மோகன்லாலை நினைவுபடுத்துவார். பணக்கார செழுமை உடம்பில் பளபளவென்று விரிந்திருக்கும் சாமிநாதன் ஒரு மாட்டுப் பொங்கல் அன்று உள்ளாடையுடன் தெருவில் ஓடிக்கொண்டிருந்தார். அவர் பின்னால் அவர் குடும்பமே ஓடிக் கொண்டிருந்தது.

காவிரி ஆற்றின் சிறு கிளைப் பிரிவில் கடல் நோக்கிச் செல்லும் வெட்டாற்றுப் பகுதியின் ஓரத்தில்தான் சாமிநாதன் வீடு. ஆற்றில் அந்த தை மாத ஆரம்பத்தில் ஆச்சரிய வெள்ளப்பெருக்கு. பழைய பாலம் என்பது போக்குவரத்து நின்றுபோய் நடைபாதைக்கு மட்டுமாய் மாறிப்போன ஒன்று. புதிய பாலத்தில்தான் இப்போது போக்குவரத்தே. பழைய பாலத்தின் எட்டுக் கண்ணிகளையும் புதிய பாலத்தின் எட்டுக் கண்ணிகளையும் இணைக்கும் ஆற்றுவெள்ளத்தில் குதித்து நீந்திக் கடந்துகரையேறினார் சாமிநாதன். ஈரம் சொட்ட நின்றுகொண்டிருந்த சாமிநாதனைப்பார்த்து ஆறுதலாய் தோள் தொட்ட என் அப்பாவின் முதுகில் வீறுகொண்டு அறைந்தது சாமிநாதனின் ஆவேசக் கை. வீட்டுக்கு வந்த அப்பாவின் முதுகில் அவர் அணிந்திருந்த பனியனையும் மீறி ரத்தம் தெரிந்தது. அம்மா கோபமாய் திட்டினார். “அவன் குடும்பத்து சாபத்துக்கு அவன் அனுபவிக்கிறான். உங்களை யாரு அங்க போகச் சொன்னது?’’

1977க்கு முன்பான ஊரை அசைத்துப்பார்த்த பெரும் புயல் அது. அது சமயம் எங்கிருந்தோ பல பொருட்கள் ஆற்றில் மிதந்து வந்தன. வீசிய புயலையும் பொருட்படுத்தாமல் ஆற்றோரமாய் குடியிருந்த மக்கள் மிதந்து வந்த பொருட்களைக் கைப்பற்றினர். அதில் அம்மன் சிலையும் ஒன்று. சிலை என்றால் தங்கமெல்லாம் இல்லை; வெறும் கல். அந்தச் சிலை சிக்கியது சாமிநாதனின் குடும்பத்துக் கண்களில். கூடவே மிதந்து வந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகளை சாமிநாதன் குடும்பம் அபகரித்துப் பதுக்கிக் கொண்டதாய் கதைகள் உண்டு. சிலையை ஆற்றோரமாகவே வைத்துப் பூஜை செய்யத் தொடங்கினார்கள் சாமிநாதன் குடும்பத்தினர். வான் பார்த்து இருந்த சிலை மெல்ல மெல்ல சிறிய கோயிலானது. தெருக்காரர்களும் தங்கள் கோயிலாகவே பராமரிக்கத் தொடங்கினார்கள். வருடா வருடம் திருவிழா, கூழ் காய்ச்சி ஊற்றுதல் என விஷேசங்கள் தொடர்ந்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in