வனமே உன்னை வணங்குகிறேன்..! 18- வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

வனமே உன்னை வணங்குகிறேன்..! 18- வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

வண்ணத்துப்பூச்சிகளை நினைத்தாலே, நம் எண்ணங்கள் எல்லாம் வண்ணங்களாக விரியும். மகரந்தங்களில் உணர்கொம்புகளைப் பதித்துப் பறக்கும் அவற்றின் சிறு துள்ளல் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அதனால்தானே, குழந்தைகளை வாழ்த்தும்போதுகூட, “வண்ணச் சிறகுகளை விரித்து வெளியே வா!” என்கிறோம்.

வாருங்கள், இந்த வாரம் வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து உலா வருவோம்.

வண்ணத்துப்பூச்சிகளைத் தேடிச் சென்று பார்த்து ரசிப்பதும், அதன் நிமித்தமான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையுமே முக்கியப் பணியாகச் செய்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் பிரியதர்ஷினி ராஜேந்திரன். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் விலங்கியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், வகுப்பறைப் பாடத்தைவிட, கள ஆய்வின் மூலம்தான் மாணவர்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார். அதற்காக இவர் பரிந்துரைக்கும் இடங்கள் மதுரை அழகர்மலை, திருச்சி ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா.

அழகு மிளிரும் அழகர்மலை

மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அழகர்மலை. அழகர்கோயில் என்றே அறியப்பட்ட அழகர்மலை, திருவிழாக்களுக்கு மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகளுக்கும் பிரசித்தி பெற்றது. அங்கு சென்றுவந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பிரியதர்ஷினி.

“நான் எப்போதுமே அதிக செலவு வைக்கும் பயணங்களுக்குத் திட்டமிடுவதில்லை. நாம் வாழுமிடத்துக்கு அருகிலேயே ரசிக்கவும், பேணவும் இயற்கைச் சூழல் இருக்கிறது என்ற அடிப்படையில்தான் பயணங்களை முடிவு செய்வேன்.

அப்படித்தான் எனது மாணவிகளுடன் 2018-ல், அழகர்மலை சென்றிருந்தேன். மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியிருந்தது. நாங்கள் அங்கு சென்றபோது சூழல் ரம்மியமாக இருந்ததோடு எங்கெங்கு காணினும் வண்ணத்துப்பூச்சிக் கூட்டங்களாக இருந்தன. என் மாணவிகள் அவற்றை ஆவணப்படுத்தத் தொடங்கினர். அன்றைய தினம் கர்நாடக மாநில வண்ணத்துப்பூச்சி என்றழைக்கப்படும் ‘ப்ளூ மார்மன்’கள் அதிகமாக இருந்தன. அக்டோபர் மாதத்தில், இடம்பெயர்ந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளை அங்கு காணலாம்.

கணக்கெடுப்பின் முடிவில் மொத்தம் 106 வகையிலான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதை அறிந்தோம். அவ்வளவு வண்ணத்துப்பூச்சிகள் இருக்க வேண்டும் என்றால் அங்கு பல்லுயிர்ச் சூழல் வெகு சிறப்பாக இருக்கிறது என்பதை மாணவிகள் நேரடியாகக் கள ஆய்வின் மூலம் உணர்ந்துகொண்ட நாள் அது. ஒவ்வொரு முறையும் என் மாணவிகள் பறவைக் கூட்டங்களையும், வண்ணத்துப்பூச்சிகளையும் நேரில் பார்த்து வியப்பதைக் காணும்போது அவர்களுக்கு அனுபவப் பாடம் கற்பித்த முழு திருப்தி எனக்கு ஏற்படும்” என்று சொல்லும் பிரியதர்ஷினி, திருச்சியில் உள்ள வண்ணத்துப்பூச்சியின் சிறப்பம்சங்களையும் விவரித்தார்.

திறந்தவெளி பூங்கா

“திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளது. 2015-ல், வெறும் 38 இனங்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. ஆசியாவின் மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களுள் ஒன்று இது. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் எல்லாம் கூண்டுகள் வைத்து உயரத்தில் வலைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ரங்கம் பூங்காவை வனத் துறை அதிக மெனக்கிடலுடன் திறந்தவெளியிலேயே பராமரிப்பது இன்னும் சிறப்பு.

கறிவேப்பிலை, எலுமிச்சை, ஆமணக்கு, வில்வம், செண்பக மரம், தலைவெட்டிப்பூ, நாயுருவி இன்னும் நிறைய தாவரங்கள் வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்க இங்கே தரமான முறையில் பராமரிக்கப்படுகின்றன.

தமிழ் இயோமென் (இதுதான் நம் மாநில வண்ணத்துப்பூச்சி!), சில்வர் ராயல், கிராஜுவல், கிரிம்ன்ஸன் ரோஸ், சதர்ன் பேர்டு விங், ப்ளூ மார்மன், காமன் ஜெஸபெல் எனப் பலவகை வண்ணத்துப் பூச்சிகளையும் அங்கு கண்டு ரசித்தோம். தமிழகம் முழுவதுமே முந்நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. இதில், இடம்பெயர்ந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளும் அடங்கும்.
நம் வீட்டிலேயே ஒரு கறிவேப்பிலை செடியை வைத்தால் போதும், வண்ணத்துப்பூச்சிகள் வாசம் செய்ய வந்துவிடும். ‘தாத்தா பூ’ என்று நாம் சொல்லும் ட்ரைடாக்ஸ் செடிகளுக்கு என்றே, மஞ்சள் நிறம் கொண்ட சிறிய வண்ணத்துப்பூச்சிகள் வந்து செல்லும். புல்தரைகளுக்கென ஒரு வகை உண்டு. எனது கல்லூரி வளாகத்தில் மட்டுமே 50 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. நாம் வாழுமிடம் பிற உயிரினங்களுக்கான இயல்பான வரவேற்பறையாக இருக்க வேண்டும்” என்று சொல்லும் பிரியதர்ஷினி, வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்.

“புலியும், யானையும் மட்டுமல்ல, புழுக்கள், பூச்சிகளும்கூட பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு முக்கியம். நீங்கள் வாழும் சூழல் சிறப்பாக இருக்கிறதா என்பதைச் சுட்டிக்காட்டும் உயிர் குறிகாட்டிகள் (பயோ இண்டிகேட்டர்ஸ்) இந்த வண்ணத்துப்பூச்சிகள். நீங்கள் வசிக்கும் பகுதியில் வண்ணத்துப்பூச்சிகளைக் காண இயலவில்லை என்றால் அங்கு மாசு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். தேனீக்களுக்கு அடுத்து வண்ணத்துப்பூச்சிகளே மகரந்தச் சேர்க்கைக்கு அதிகம் உதவுகின்றன. அவற்றின் வசிப்பிடத்தை நாம் பேணவில்லை என்றால் அவை நம்மைவிட்டு விலகிச் செல்லும். உங்கள் வசிப்பிடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றித்திரியச் செய்யுங்கள். உங்கள் மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ப்ளூ மார்மன், காமன் ஜெஸபெல், ஆரஞ்ச் டிப், க்ரேட் ஆரஞ்ச் டிப், பீக்காக் ஃபேன்சி போன்ற வண்ணத்துப்பூச்சிகளை உற்றுப்பார்க்கும்போது அவற்றைப் பார்த்துதான் ஆடைகளை வடிவமைத்தனரோ என்று யோசிப்பேன். அவ்வளவு அழகாக இருக்கும்” என்று பரவசத்துடன் சொல்கிறார் பிரியதர்ஷினி.

கூட்டுப் பயணங்கள்

மருத்துவரான தனது தந்தையுடன் சேர்ந்து, சிறுவயதில் பல்வேறு இடங்களுக்குப் பயணம் சென்றுவந்த பழக்கம் இன்னமும் தன்னைவிட்டு விலகவில்லை என்று சொல்லும் இவர், தற்போது பயணம் செல்லும்போதெல்லாம் தனது இரு மகள்களுடன் தனது மாணவிகளையும் கூடவே அழைத்துச் செல்கிறார். “சூழல் இணக்கச் சுற்றுலா மையங்களையோ, வனங்களையோ மாணவிகள் சுற்றிப்பார்க்க அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால், நான் பயணம் திட்டமிடும்போதே எனது மாணவிகளிடமும் சொல்லிவிடுவேன். விருப்பமுள்ளவர்கள் வருவார்கள். ஒரு சில மாணவிகள் எனது எல்லாப் பயணத்திலும் சேர்ந்துகொள்வார்கள். பணத்தால் பயணம் தடைபடக் கூடாது என்பதால் பயணச் செலவை நானே ஏற்றுக்கொள்வேன். செலவு செய்ய முடிந்த மாணவிகள் சிறு தொகையைத் தந்துவிடுவார்கள்.

என்னுடன் இயற்கைச் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காகவே, என் மாணவிகள் பணம் சேமிக்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர். அதேபோல் பறவை காணலுக்கும், வண்ணத்துப்பூச்சிகள் காணலுக்கும் செல்லும் போது அமைதி காக்க பழகிய அவர்கள், எப்போது வனத்துள் சென்றாலும் அமைதியுடன் ரசிக்கின்றனர்” என்று பெருமிதம் கொள்கிறார் பேராசிரியர்.
வண்ணத்துப்பூச்சிகள் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்புகளை மாணவிகள் மத்தியில் ஊக்குவிக்கும் இவர், மாலிக்குலர் டேக்ஸானமி (Molecular Taxonomy) போன்ற படிப்புகளை மேற்கொண்டால் ஆராய்ச்சியாளராக அரசுத் துறைகளில் வேலை கிடைக்கும் என்றும் பரிந்துரைக்கிறார்.

இயற்கையை ரசிக்கும்போதே அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடும். அதை உணர்ந்து தெரிந்துகொள்ள சூழல் இணக்கச் சுற்றுலாக்களுக்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்!

படங்கள் உதவி: பிரியதர்ஷினி, மோகன் பிரசாத்

(பயணம் தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in