நல் மணக் கவிதைகள்

நல் மணக் கவிதைகள்

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

பழகிய பாதையில் தொடர்ந்த பயணத்தை ஒரு நிமிடம் நின்று நிதானித்து திரும்பிப் பார்க்கும் வித்தையைச் செய்கின்றன ஜான் சுந்தரின் கவிதைகள். கடவுளும் பிணமும் செல்லும் அதே வீதிதான்; அதே ஜன்னல் வழியில்  காணும் காட்சியில் வாசகருக்கு தன் அனுபவத்தை சமர்ப்பணம் செய்கிறார் கவிஞர். எந்தச் சட்டகத்துக்குள்ளும் தன் கவிதை பொருந்தி நின்று விடாமலிருக்க  கவிஞர் செய்யும் சூட்சுமங்கள் தொகுப்பின் முதல் கவிதையிலிருந்தே தொடங்கி விடுகின்றன. மது பாத்திரங்களில் இசை வடிவம் காண்பதாகட்டும் அவளுக்கும் பியானோவுக்குமான ஒப்புவமையாகட்டும் ஐஸ்கிரீமாய் உருகும் மைக்காகட்டும் ஜான் சுந்தர் தானொரு நல்லிசைக் கலைஞன் என்பதையும் ஒலிக்கச் செய்கிறார்.

அஃறிணைப் பொருட்களின் தோள் மேல் கைபோட்டு நண்பனாக்கி பல ரகசியங்களைக் கேட்டுக்கொள்கிறார் கவிதையாசிரியர். அதன் காதலை. விம்மலை, துரோகத்தை, கதறலை தன் எழுத்தின் வழியே சொல்லும்போது நம் கைபேசியையும் சட்டை பாக்கெட்டையும் தன்னிச்சையாய் தொட்டுப் பார்த்துக்கொள்கிறது மனம். தொகுப்பு தலைப்புக் கவிதையை வாசிக்கும்போது  விழிக்கடையில் சர்க்கரைத் துளி ஒன்றை துளிர்க்கச் செய்துவிடுகிறீர்கள் ஜான் சுந்தர்.

ஏடி எம் காவல்காரர்கள் பற்றிய சித்திரம் அசல் தன்மையை வெளிப்படுத்தி தவிக்கச் செய்கிறது. இழவு வீட்டு குழந்தையைக் காணாதவர்கள் இவ்வுலகில் மிகவும் குறைவு. கடுங்காப்பியின் சுவையை உணராத நா மொட்டுகள் இவ்வுலகில் இல்லவே இல்லை எனலாம். 36 வயது வரைபடக் கலைஞர் கவிதையில் மட்டும் அதன் இறுதியில் வரும் `போலாம்பா’ என்பதை பொறியாளருக்குப் பதில் வரைபடக் கலைஞரே சொல்லியிருந்தால் அதிர்வெண் எண்ணிக்கை அதிகமாயிருந்திருக்கும். அடுத்த முறை ஸ்விகிப் பையனைப் பார்க்கையில் புன்னகை சிந்தச் சொல்கிறது ஜான் சுந்தரின் நல் மனக் கவிதை.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in