ரஜினி சரிதம் 09: ஆறிலிருந்து எழுபது வரை: மாய நதி இன்று மார்பில் வழியுதே..!

ரஜினி சரிதம்  09: ஆறிலிருந்து எழுபது வரை: மாய நதி இன்று மார்பில் வழியுதே..!

உள்ளங்கையில் வைத்து தாங்கும் உறவுகள் கிடைப்பதைவிட, நம்மை உதறித் தள்ளிவிடாத உறவுகளும் நண்பர்களும் கிடைப்பதுதான் வாழ்க்கையின் ஆகச் சிறந்த வரம். ரஜினிக்கு அப்படி அருமையான நண்பர்கள் வாய்த்தார்கள். பள்ளியில் படித்த நண்பர்களும் பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் கிடைத்த நண்பர்களும் ‘மிகச் சிறந்த நடிகனாக வருவாய்’ என்று ஊக்கம் தந்தார்கள். ரஜினியின் தோழியான நிம்மியோ ஒருபடி முன்னால் சென்று அவருக்கு வழிகாட்டினார்.

அப்போது சென்னையில் ஃபிலிம்சேம்பரால் நடத்தப்பட்ட திரைப்பட நடிப்புப் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கும்படி நாளிதழில் விளம்பரம் வெளியாகியிருந்தது. அதைப் பார்த்ததும் ரஜினிக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சி. ‘நான்கு தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 36 தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்று விளம்பரம் கூறியது. கடுமையான போட்டிதான். ஆனாலும், நேர்முகத் தேர்வில் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை ரஜினியிடம் இருந்தது. அப்படியே தான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பயிற்சிக் கட்டணம்? அதை நினைத்துத் திகைத்துப் போனார் ரஜினி.

அதன்பிறகு நடந்ததை, ‘பாட்ஷா’ படப்பிடிப்பில் மலையாள நடிகர் தேவனிடம் ரஜினி இப்படிப் பகிர்ந்து 
கொண்டார். “அது 1973-ம் வருடம் ஜுன் மாதத்தின் தொடக்கம். சென்னை நடிப்புப் பள்ளியில் சேர்வதற்கான விளம்பரம் வெளியாகியிருந்த நாளிதழை நிம்மியிடம் கொடுத்தேன். அப்போது அவர் தனது கை பையிலிருந்து அதே செய்தித்தாளை எடுத்துக் காட்டினார். ‘என்ன ஒரு கோ-இன்ஸிடன்ட்! இதைத்தான் நானும் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். உடனே அப்ளை பண்ணுங்க’ என்றார். நானும் சரியென்று தலையாட்டினேன். ஆனால், குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலையை எண்ணிப் பார்த்து நான் அப்ளை செய்யவில்லை.

எனக்காக ஒரு ஜீவன்

சில நேரங்களில் மனிதர்களுக்கு மனிதர்களே கடவுளாக தெரிவார்கள். என்னைப் பொறுத்தவரை நிம்மி அப்படித்தான். அந்த விளம்பரம் வெளியாகி ஒருவார காலம் ஓடிவிட்டிருந்தது. அன்று பணிமுடித்து வீட்டுக்குத் திரும்பினேன். சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் திரைப்பட நடிப்புப் பள்ளியிலிருந்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருப்பதாக அண்ணன் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்தும் என்னால் நம்பமுடியவில்லை. திகைப்பும் மகிழ்ச்சியும் ஆட்கொள்ள, 'நான் விண்ணப்பிக்கவே இல்லையே..!’ என்று சொல்லிவிட்டு, யார் அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பொறி தட்டியது. எனது அருமை நண்பன் ராஜ்பகதூர் எனக்காக விண்ணப்பித்திருப்பானோ..? அவசர அவசரமாக ராஜ்பகதூர் வீட்டுக்கு ஓடினேன். அவனோ... ‘இல்லடா... நீதான் அப்ளை பண்றேன்னு எங்கிட்ட சொன்னியே..?’ என்றான். அப்படியானால் வேறு யார் விண்ணப்பித்திருப்பார்கள்? மறுநாள் நிம்மியிடம் ‘யாரோ என் பெயரில் விண்ணப்பத்திருக்கிறார்கள். எனக்கு இன்டர்வியூவுக்கு அழைப்பு வந்திருக்கு. அட்டென்ட் பண்ணினால் கண்டிப்பா செலக்ட் ஆகிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு’ என்று சொன்னேன்.

அப்போது நிம்மி, 'உங்கள் பெயரில் நான் தான் அப்ளிகேஷன் போட்டேன். நீங்க விரும்பியது உங்களைத் தேடி வந்திருக்கு... நீங்க போய் நல்லா படிங்க. பெரிய ஸ்டாரா வரணும். பேப்பர்ல உங்க போட்டோ வரணும்' என்று கூறி, தான் சேமித்து வைத்திருந்த 500 ரூபாயை வற்புறுத்தி என்னிடம் கொடுத்தார். அன்றைய மதிப்புக்கு 500 ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை! வாழ்க்கையில நான் வெறும் ஜீரோவா இருந்த காலத்தில், ‘நீங்க பெரிய ஹீரோவா வருவீங்க’ என்று கூறி என் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரே ஜீவன் நிம்மி.

எனது தன்னம்பிக்கையுடன் நிம்மி தந்த தன்னம்பிக்கையும் என்னை மேலும் வலிமை மிக்கவனாக மாற்றியது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்தேன். நேர்காணல் தொடங்கும் 1 மணிநேரத்துக்கு முன்பாகவே ஃபிலிம் சேம்பர் அலுவலகம் சென்று சேர்ந்தேன். என்னைப் போல் சுமார் 100 இளைஞர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் அமர்ந்திருந்தார்கள். எனக்கு யாரையும் தெரியாது. ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்டனர். இதற்கு முன்பு என்னுடைய நடிப்பு அனுபவம், பிடித்த நடிகர், பிடித்த நாடகாசிரியர், பிடித்த சினிமா, பிடித்த இயக்குநர் என்று பல கேள்விகளைக் கேட்டனர். நான் எனக்குப் பிடித்த நடிகரான சிவாஜியையும் என் மனதைக் கொள்ளைகொண்ட இயக்குநர் கே.பாலசந்தரையும் குறிப்பிட்டேன். பாலசந்தரின் எந்தப் படம் பிடிக்கும் என்று கேட்டபோது ‘எதிர்நீச்சல்’ படத்தைக் குறிப்பிட்டேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தயக்கமோ, தாமதமோ இல்லாமல் என் மனதில் தோன்றியவற்றை டக் டக்கென்று பதில் சொன்னேன்.

நான் பதில் சொன்னவிதமும் பயன்படுத்திய வார்த்தைகளும் தேர்வுக் குழுவினரைக் கவர்ந்துவிட்டன. 36 மாணவர்களில் ஒருவனாக நானும் தேர்வு செய்யப்பட்டேன். மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினேன். அப்பாவுக்கும் அண்ணன்களுக்கும் நான் தேர்வானதைச் சொல்லிவிட்டு, நிம்மியையும் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். அவரது கண்கள் கலங்கிவிட்டன. ‘கங்கிராட்ஸ் சிவாஜி... கண்டக்டர் வேலையை என்ன செய்யப்போறீங்க?’ என்று கேட்டார். ‘நடிப்புப் பயிற்சி முடியும் வரை ஊதியமில்லா விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அண்ணனும் நண்பர்களும் சொல்கிறார்கள். அப்பாவுக்கு மட்டும் நான் நடிப்புப் பயிற்சிக்குச் செல்வதில் விருப்பமில்லை’ என்றேன். ‘ஒரு நாள் அப்பா உங்களைப் புரிந்துகொள்வார்.. என் மகன் பெரிய ஸ்டார் என்று மற்றவர்களிடம் சொல்லி அவர் சந்தோஷப்படும் நாள் வரும். கவலைப்படாமல் செல்லுங்கள்.. ஆல் த பெஸ்ட்’ என்று என்னை வாழ்த்தினார் நிம்மி.

அப்பாவையும் அண்ணன்களையும் நண்பர்களையும் எந்த அளவுக்கு மிஸ் பண்ணுவேனோ... அப்படித்தான் நிம்மியையும் மிஸ் பண்ணவேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டு, ‘பயிற்சியின் முதல் காலாண்டுக்குப் பின் வரும் விடுமுறையில் உங்களைக் காண ஓடி வருவேன்.’ என்று நிம்மியிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

மூன்றாம் முறையாகச் சென்னை

நான் நடிப்புப் பள்ளியில் சேர சென்னைக்குப் புறப்பட்ட நாளை என்னால் மறக்கவே முடியாது. எனக்கு மட்டுமல்ல, எனது நண்பர்களிடமும் அவ்வளவு உற்சாகம் கரைபுரண்டது. ‘உன்னை நினைத்தால் எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது சிவாஜி’ என்று மனமாற வாழ்த்தினார்கள். ஒருவர் விடாமல் அனைவரும் ரயில் நிலையத்துக்கு வந்து என்னை வழியனுப்பினார்கள்.

இதற்கு முன்பு, 16 வயதிலும் பின்னர் 18 வயதிலும் நான் சென்னை வந்த நாட்களுக்கும் இன்றைக்கு நான் சென்னையில் வந்து இறங்குவதற்குமான உணர்வில் இருந்த வேறுபாடு எனக்கு ஆச்சரியம் அளித்தது! எனது உடல்மொழி, நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் மாற்றம்! நான் வந்துபோன அதே சென்னைதான், ஆனால், இம்முறை அது என்னை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருப்பது முற்றிலும் வேறொன்றுக்காக. நான் இங்கே வந்து சேர குடும்பமும் நண்பர்களும் தோழியும் செய்திருக்கும் உதவிகள் என்னை பொறுப்புமிக்கவனாக மாற்றியிருக்கின்றன. நான் அவர்களது நம்பிக்கையை காப்பாற்றியே ஆகவேண்டும். அசட்டையாக வேடிக்கை, விளையாட்டுகளில் இந்தப் பயிற்சி காலத்தை நான் கடந்துவிடமுடியாது என்று தீர்க்கமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.

தேடியலையும் நெஞ்சம்

மொத்தமுள்ள 36 மாணவர்களில் நான் உட்பட17 பேர் அமிஞ்சிக்கரையில் இருந்த அருண் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கொண்டு, தினசரி பேருந்தில் மவுண்ட் ரோடு வந்துவிடுவோம்.

வாரத்தில் 4 நாட்கள், உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள் எங்களுக்குத் திரையிடப்பட்டன. சார்லஸ் லாப்டன், மார்லன் பிராண்டோ, கிளார்க் கேபிள் என தலைசிறந்த ஐரோப்பிய நடிகர்கள் நடித்த படங்கள் மாணவர்களாகிய எங்களிடம் பல கேள்விகளை எழுப்பின. அறியாமையால் விளையும் கேள்வியாக இருந்தாலும் அவற்றுக்கும் பொறுமையாக பதில் கூறி விளங்க வைத்த ஆசிரியர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள்.

அங்கே எங்களுக்கு ஆசிரியர்களாக அமர்ந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் கோபாலி. இவர் தூர்தர்ஷனில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். அடுத்து நாடக இயக்குநரான ஒய்.ஜி.பார்த்தசாரதி (ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா), மற்றொருவர் ஏ.பி.டி.அரசு. இவர் தேசிய நாடகப் பள்ளியில் படித்தவர். அவ்வளவு அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள். எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கான எந்த உத்தியும் அங்கே கற்றுத்தரப்படவில்லை. மாறாக, எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்பதையும் ஒரு நடிகன் மனதளவில் எப்படி தங்களைத் தயாரித்துக் கொள்ளவேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்த தரத்தில் உயர்ந்த பயிற்சி அது. நானென்றில்லை.. ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மை அறிந்து அவர்களை கூர் தீட்டுகிறவராக கோபாலி சார் இருந்தார்.

திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் - நடிகையர், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கவுரவ ஆசிரியர்களாக இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து உரை நிகழ்த்தினார்கள். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்கள் அனுபவத்திலிருந்து பதில் அளிப்பார்கள். யாருக்கும் கிடைக்காத பகிர்தல் அது. அதுமட்டுமல்ல... ஸ்டுடியோ விசிட் கூட்டிக்கொண்டுபோய் படப்பிடிப்பு
களைக் காணும் அரிய வாய்ப்பையும் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 3 மாதம் பயிற்சி முடிந்திருந்தபோது திரையுலகில் நம்மாலும் சாதித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் வந்துவிட்டது.

 10 நாட்கள் விடுமுறை வந்தபோது பெங்களூருவுக்கு விரைந்தேன். அன்றைக்கே நிம்மியை சந்திக்கத் துடித்தேன். அவர் வழக்கமாக பேருந்துக்கு வரும் நிறுத்தத்தில் காத்திருந்தேன். வரவில்லை. அவர் தற்போது பேருந்தில் பயணிப்பதில்லை என நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் பதற்றமானேன். முகவரியைக் கண்டுபிடித்துப் போய் விசாரித்தபோது, வீட்டைக் காலி செய்துவிட்டதாகச் சொன்னார்கள். அவருடன் பயிலும் மாணவிகளிடம் கேட்டதற்கு, சரியாக கல்லூரிக்கும் வருவதில்லை என்றார்கள். பெங்களூருவில் நிம்மியைத் தேடி அலையாத வீதிகளே இல்லை. அங்கிருந்த 10 நாட்களும் ஒரு பைத்தியக்காரனைப் போல் அலைந்து கொண்டிருந்தேன். 

தூக்கம் தொலைத்து நிம்மியைக் காணாமல் தவித்த அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. வாய்விட்டுக் காதலை சொல்லாவிட்டாலும் மனதில் பெரிய கோட்டை கட்டி வைத்திருந்தேன். அன்று தொலைத்த நிம்மியை இன்றுவரைக்கும் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன வேதனை என்றால், அவர் அன்றைக்கு சொன்னதை நான் இன்றைக்கு நிறைவேற்றிவிட்டேன். பெரிய நடிகனாகி விட்டேன். இன்று இந்தியாவில் என்னைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. என்னிடம் பணம், பெயர், புகழ் எல்லாம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நிம்மி இல்லை. எனக்காக எல்லாவற்றையும் ஆசைப்பட்ட நிம்மியை என்னால் பார்க்கக் கூட முடியாமல் போய் விட்டது. அவர் நிச்சயமாக எங்கேயாவது இருந்து கொண்டு என் வளர்ச்சியைப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். நான் இந்த உயரத்தில் இருப்பதை பார்த்து என்னைத் தேடி வந்திருக்கலாம். ஆனால், வரவில்லை. அவருடைய அந்த மனசு ஒரு கோயிலின் கருவறையில் வைக்கக் கூடிய தகுதியைக் கொண்டது.

இன்று நான் இமயமலைக்குப் போனாலும், அமெரிக்காவுக்குப் போனாலும், சென்னை, பெங்களூரு எனத் தெருவில் எங்கு சென்றாலும் என் கண்கள் நிம்மியைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றன. அவளை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட மாட்டேனா என ஏங்குகிறேன்'' என்று தனது கதையை தேவனிடம் ரஜினி சொல்லி முடித்தபோது, அவரது கண்கள் கண்ணீரை உடைத்தன.

தேவன் இதைச் சொல்லும் போது, “ரஜினி சார் சட்டென்று தனது கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டார்.. அவரது காதல் கதையைக் கேட்டு என் கண்களும் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார். ரஜினியின் இந்தக் கதையைக் கேட்கும் யாருக்கும் ‘கபாலி’ படத்தில் வரும் ‘மாய நதி இன்று மார்பில் வழியுதே...’ என்ற பாடல் வரி நிச்சயம் நினைவுக்கு வந்தே தீரும்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in